sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 8

/

சரணம் ஐயப்பா - 8

சரணம் ஐயப்பா - 8

சரணம் ஐயப்பா - 8


ADDED : ஜன 26, 2022 03:45 PM

Google News

ADDED : ஜன 26, 2022 03:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிகண்டனின் தம்பி

மகாராணிக்கு தாதிகள் பிரசவம் பார்த்தனர். பந்தளராஜா தன் தோள்களில் மணிகண்ட குழந்தையை துாங்க வைத்தபடியே, பிரசவம் நடந்த அறை வாசலில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார். மனதில் பதட்டம் இருக்கும் போது அங்குமிங்கும் நடக்கத் தோன்றும். ஏனெனில் பிரசவம் என்பது மறுஜென்மம். அதிலும் உடலோடும், உயிரோடும் கலந்து விட்ட மனைவிக்கு தலைப்பிரசவம் நடக்கும் போது பதட்டம் அதிகமாக இருக்கும்.

அந்நேரத்தில் அறைக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தை பிறந்து விட்டது. தாதி ஒருத்தி அவசரமாக வெளியே வந்தாள்.

“மகாராஜா! இளவரசர் பிறந்திருக்கிறார். மகாராணியும் நலமாயிருக்கிறார்” என நல்வார்த்தை சொன்னாள். இந்த நற்செய்தி சொன்ன தாதிக்கு மகாராஜா தன் கழுத்தில் கிடந்த பெரிய ஆரத்தைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கினார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம்...ஆண் குழந்தையைப் பெற்ற பெருமை வேறு. கையிலே யாரோ பெற்ற இன்னொரு தெய்வப்பிள்ளை...அவர் அறைக்குள் நுழைந்தார். மகாராணியின் கேசத்தை வருடினார். குழந்தையை இன்னொரு கையால் எடுத்து இரண்டு குழந்தைகளுக்கும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.

தன் சொந்தப்பிள்ளைக்கு பெயர் வைக்க நாள் குறித்தார். உலகத்தையே ஆள வந்துள்ள மணிகண்டனின் தம்பியல்லவா! அதனால் அவனுக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். மகாராணி இரண்டு குழந்தைகளையும் தன் பிள்ளைகளாகவே பார்த்தாள். ராஜராஜன் அளவுக்கு மணிகண்டனுக்கும் ஆடை, அணிகலன்கள் அணிவித்தாள். நாட்கள் பறந்து விட்டன. மணிகண்டனுக்கு ஐந்து வயதாயிற்று.

அவனை குருகுலத்தில் சேர்க்க பந்தளராஜா ஏற்பாடு செய்தார். அவனுக்கு கல்வியுடன் விற்போர், மற்போர், வாள்வித்தை, குதிரையேற்றம் என போர் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. என்ன தான் தனக்கு சொந்தப்பிள்ளை இருந்தாலும் தனக்கு கிடைத்த முதல்பிள்ளைக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்பதில் ராஜா உறுதியாக இருந்தார்.

இதனால் மணிகண்டனின் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மணிகண்டனோ குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்தான். எந்தக் கேள்வி கேட்டாலும், குருவிடம் புத்தி சாதுர்யத்துடன் அருமையாக பதில் சொல்வான். குரு அவனது திறமையைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறார். “உன்னைப் போல் உயர்ந்த ஒரு சீடன் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். உன்னைப் பார்த்தால் சாதாரண பிறவியாக தெரியவில்லை. உன்னிடம் மகேசனின் பெருமிதமும், மாயவனின் பேரழகும் இணைந்துள்ளதாக தோன்றுகிறது” என்று ஒருமுறை சொன்னார்.

தினமும் பாடம் நடத்தி முடித்ததும் குரு ஒரு ஓரமாக சென்று கண்ணீர் மல்க அமர்ந்திருப்பதை மணிகண்டன் பலமுறை கவனித்திருக்கிறான்.

ஒருநாள் கன்னங்களில் நீர் வழிய அவன் அமர்ந்திருந்தார். ஆறு வயதான அவரது புதல்வன் தந்தையின் மடியில் படுத்திருந்தான்.

மணிகண்டன் அவர் அருகில் சென்று,“குருவே! தங்களை இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள். குருவிடம் கேள்வி கேட்கும் உரிமை சீடனுக்கு கிடையாது. இருப்பினும் தங்கள் முகத்தில் ஓடும் கவலை ரேகை மனதை துன்புறுத்துகிறது. குருவுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதைத் தீர்த்து வைக்க வேண்டியது சீடனின் கடமை. தாங்கள் விரும்பினால் தயவு செய்து சொல்லுங்கள்” என்றான்.

“மணிகண்டா! வயதில் சிறியவன் என்றாலும், மற்றவர் துன்பப்படுவதை சகிக்க மாட்டாமல் என்னிடம் என்ன ஏதென்று விசாரிக்கிறாய். இந்த நற்குணம் யாருக்கு வரும். தெய்வக்குழந்தையே! இதோ மடியில் படுத்திருக்கிறானே என் மகன்! இவனுக்கு நாம் என்ன பேசுகிறோம் என்று கேட்காது. அவனால் பதிலளிக்கவும் முடியாது” என்றார் குரு. மணிகண்டன் அவரிடம் மெல்லிய குரலில்,“அப்படியானால் இவனுக்கு பேசும் திறனோ, கேட்கும் திறனோ இல்லை... அப்படித்தானே!” என்றான்.

“சரியாகப் புரிந்து கொண்டாய் மணிகண்டா! இதற்கு உன்னால் தீர்வு வரும் என என் உள்மனது சொல்கிறது. என் குழந்தையின் நிலையை சரி செய்வாயா?” என்று கண்களில் ஏக்கமுடன் கேட்டார் குரு.

'இதென்ன பிரமாதம்' என நினைத்தானோ என்னவோ! மணிகண்டன் அந்த சிறுவனை எழுப்பினான். அவனிடம், 'ஓம் நமசிவாய' என்று சொல்,” என்றான். அந்தச் சிறுவன் சற்றே முயற்சி எடுத்து,“ ஓம் நமசிவாய' என்று முழங்கினான். 'ஓம் நமோ நாராயணாய' என்று சொல்' என்று மணிகண்டன் சொல்லவும், அந்தச் சிறுவன் திருப்பிச் சொன்னான்.

அக்காலத்தில் மாணவர்கள் படிப்பை முடித்ததும் ஆசிரியர்களுக்கு குரு தட்சணை கொடுப்பர். மணிகண்டன் தந்த இந்த தட்சணை அந்த குருவுக்கு பெரும் செல்வமாக அமைந்தது. அவனைக் கட்டித்தழுவி ஆசியளித்தார். “உன்னைச் சரணடையும் அனைவருக்கும் இத்தகைய பாக்கியங்களைக் கொடுக்கும் வல்லமை அமையும்” என நல்வார்த்தை சொன்னார்.

படிப்பை முடித்து மணிகண்டன் அரண்மனை திரும்பினான். இதற்குள் ராஜராஜனும் மற்றொரு குருகுலத்தில் கல்வி கற்று திரும்பினான். மகாராணியும், பந்தள ராஜாவும் அவர்களுக்கு எவ்வித கஷ்டமும் தெரியாமல் வளர்த்தனர். இந்நேரத்தில் தனக்கு அடுத்தபடியாக மணிகண்டனை மன்னராக்க பந்தள ராஜா முடிவு செய்தார். மணிகண்டன் மீது மதிப்பு வைத்திருந்த ராணிக்கும் இதில் மகிழ்ச்சி தான்.

ஆனால் ராமாயண கைகேயிக்கு ஒரு மந்தரை போல பந்தளராணிக்கு ஒரு மந்திரி வந்து சேர்ந்தான். அவனுக்கு ஆரம்பம் முதலே மணிகண்டனைப் பிடிக்காது. காரணம் மணிகண்டன் வந்த பின்பு ராஜாங்க விஷயங்கள் குறித்து மணிகண்டனிடமே அனைவரும் கருத்து கேட்டனர். மந்திரி இரண்டாம் பட்சமாகி விட்டார். இதனால் தனது பதவிக்கு கூட ஆபத்து வரலாம் என மந்திரி நினைத்தான்.

எனவே ராணியின் மனதைக் கலைத்து அவளது சொந்தப்பிள்ளையையே மன்னராக்கி விட வேண்டும்” என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான். இதற்காக தன் நாட்டிலுள்ள மந்திரவாதிகளை ரகசியமாக சந்தித்தான். பில்லி, ஏவல் செய்து மணிகண்டனை சாய்த்து விட அவர்களிடம் சொன்னான். பணத்துக்கு ஆசைப்பட்ட அவர்களும் அந்தப்பணியை கச்சிதமாகச் செய்தனர். மணிகண்டனுக்கு கடும் நோய் தொற்றியது. தோல் சுருங்கி, அழகு குறைந்து, ஆளே உருமாறி விட்டான். இனம் புரியாத வியாதிகளெல்லாம் அவனைச் சூழ்ந்தன. தெய்வமே மனிதனாகப் பிறந்தாலும் கூட அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பது தான் விதி போலும்! சிவன், திருமாலின் பிள்ளையான அவனுக்கே அந்தக்கதி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்!

அரண்மனை வைத்தியர்களால் அவனை குணமாக்க முடியவில்லை. பந்தள ராஜாவும், ராணியும் மகனைக் கண்டு கண்ணீர் வடித்தனர். ஆனால் இந்த வியாதியைக் குணப்படுத்த இருவரால் மட்டுமே முடியும். யார் அவர்கள்!

-தொடரும்

தி.செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us