மற்றவர் நலனுக்காக பாடுபடு! மகாபெரியவர் தீபாவளி சிந்தனை
மற்றவர் நலனுக்காக பாடுபடு! மகாபெரியவர் தீபாவளி சிந்தனை
ADDED : அக் 27, 2016 03:21 PM

ஞானத்தை உபதேசிக்கும் நூல்களில் கிருஷ்ணரின் பகவத்கீதைக்கு சிறப்பு அதிகம். அது போல பண்டிகைகளில் தீபாவளி பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.
நாடு முழுவதிலும் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி.
புத்த, சமண மதத்தினரும் இந்நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பிராக்ஜோதிஷ்புரம் (அசாம் மாநிலம்) என்னும் நகரத்தை பவுமன்(நரகாசுரனின் இயற்பெயர்) என்பவன் ஆட்சி செய்தான். பூமிதேவியின் புதல்வனான அவன், தவசக்தியால் வரங்களைப் பெற்றான். அக்னி கோட்டை, வாயுக்கோட்டைகளை அமைத்துக் கொண்டு பாதுகாப்புடன் வாழ்ந்தான். சாதுக்கள், பெண்கள் என அனைவரையும் துச்சமாக எண்ணித் துன்புறுத்தினான். பகவான் கிருஷ்ணர் பிராக்ஜோதிஷ்புரம் சென்று, பல உத்திகளைக் கையாண்டு கோட்டைகளை அழித்து நரகாசுரனைக் கொன்றார். அவனது தாயான பூமிதேவி, பகவான் கிருஷ்ணரின் கையால் மோட்சம் கிடைத்ததை அறிந்தாள்.
“மகன் மறைந்தது துக்கம் என்றாலும், உலகில் உள்ள அனைவருக்கும் இது மகிழ்ச்சியான நாள். இந்நாளில் அவர்கள் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, நல்ல விருந்து உணவைச் சாப்பிட வேண்டும்,” என்று பிரார்த்தித்து வரமாகப் பெற்றாள்.
பகவானை நேரில் தரிசித்ததால் ஞானம் அடைந்த நரகாசுரன், இனி தன் இறப்பை மக்கள் பண்டிகையாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்வர். 'துலா மாச மகாத்மியம்' என்னும் நூலில் தீபாவளி பற்றிச் சொல்லும் போது, “தைலே லக்ஷ்மி: ஜலே கங்கா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய் தேய்த்து இந்நாளில் வெந்நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். 'உஷத் காலம்' என்னும் அதிகாலையில் நீராட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தான் துன்பப்பட்டாலும், மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்னும் மனப்பான்மையை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நீதியை இந்த பண்டிகை உணர்த்துகிறது. நரகாசுரனின் தாயான சத்தியபாமாவுக்கு மகனை இழந்த துன்பம் இருந்தாலும், மற்றவர்கள் அதைக் கொண்டாடி மகிழ, கிருஷ்ணரிடம் வரம் கேட்டு வகை செய்திருக்கிறாள்.
இதன் காரணமாகவே தீபாவளி சம்பந்தமான புராணக்கதையையும், அந்த பண்டிகையையும் இவ்வளவு காலமாக நாம் காப்பாற்றி வந்திருக்கிறோம். பட்டாசு வெடித்து, விருந்து சாப்பிடுவதோடு நாம் நின்று விடக் கூடாது.
நம் கஷ்டம் நம்மோடு இருக்கட்டும் என்று தள்ளி வைத்து விட்டு, உலக நன்மைக்காக நம்மால் ஏதாவது செய்ய முடியும் என்றால் அதை உடனே செய்ய வேண்டும்.
'நம்மைக் காட்டிலும் உலக நன்மையே பெரிது என்று பொதுநலம் அனைவருக்கும் உண்டாக வேண்டும்' என்று தீபாவளி நன்னாளில் கிருஷ்ணரிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்.