ADDED : ஆக 03, 2023 03:35 PM

சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்த போது நம் பாரம்பரியக் கலைகளை கவுரவிக்கும் நோக்கில் 'அகில பாரத வேதாகம சில்ப சதஸ்' நிகழ்ச்சியை நடத்தினார்.
''தமிழகத்தில் சிற்பக்கலைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பல கோயில்கள் உள்ளன. பல்லவர் பாணி, சோழர் பாணி என மன்னர்கள் அவரவருக்கான முத்திரைகளை சிற்பங்களில் பதித்துள்ளனர். அவற்றில் யாருடைய பாணி சிறந்தது. அதை வெளிப்படுத்தும் சிற்பம் எங்குள்ளது'' எனக் கேட்டார் மஹாபெரியவர். அனைவரும் ஒரே தொனியில் 'பல்லவர் பாணியே சிறந்தது. முதன் முதலில் கற்கோயில் கட்டும் முறை இவர்களின் காலத்தில்தான் ஏற்பட்டது. தொடக்கத்தில் மலைகள், பாறைகள் உள்ள இடங்களில் குடைவரைக் கோயில்களை எழுப்பினர். பிற்காலத்தில் ஊர் நடுவே கற்கோயில்களைக் கட்டினர். இதில் பல்லவர்கள் கட்டிய மகாபலிபுரம் சிற்பங்களில் அர்ஜூனன் தவக்கோலம் சிறந்தது'' என்றனர்.
''பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற விரும்பிய அர்ஜூனன், தீயின் நடுவில் நின்று தவம் புரிந்தான். அப்படி அவன் எந்த நேரத்தில் நின்றான் என்பதற்கான அடையாளம் அந்த சிலையில் இருக்கிறதா'' எனக் கேட்டார் மஹாபெரியவர். கற்சிலையில் எப்படி நேரத்தைக் குறிப்பிட முடியும் என சிற்பிகள் விழித்தனர்.
அப்போது அச்சிற்பத்தின் புகைப்படம் ஒன்றை எடுத்துக்காட்டி, அதன் நடுவே அந்தணர் ஒருவர் முத்திரை காட்டியபடி கைகளை உயர்த்தி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
'இதன் பொருள் தெரியுமா' எனக் கேட்டார் மஹாபெரியவர். சிற்பிகளுக்கு தெரியவில்லை.
''உச்சிவேளையில் 'மாத்யானிக சந்தி' செய்யும் போது சூரிய பகவானை வழிபடுவதை இந்த முத்திரை காட்டுகிறது. இதிலிருந்து அர்ஜூனன் மதிய நேரத்தில் தீயின் நடுவே நின்று தவமிருந்தான என விளக்கினார். சுவாமிகளின் மதிநுட்பத்தைக் கண்ட சிற்பிகள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com