
வீட்டிற்குள் நுழைந்த மகனின் கண்கள் கலங்கியது. அம்மா செங்கமலம், ''என்னப்பா!ஏன் வருத்தம்?' எனக் கேட்டாள்.
''அம்மா! நம்ம ஊர் எல்லைச் சாவடியில இருக்கற கிருஷ்ணயோகியை உனக்கு தெரியுமல்லவா'' என்ற மகனை இடை மறித்தாள் அம்மா.
''தெரியுமே..... தரையில் அக்னி பரப்பி அது மேல பலகை போட்டு ஒக்காந்து, அக்னி யோகம் பண்ணுவா. அது முடிஞ்சு எழுந்தா, நோயாளிகள் சிலர் காத்துக்கிட்டு இருப்பாங்க. உட்காந்து அக்னி யோகம் பண்ணினபலகையை எடுத்து வெச்சிட்டு, அதுல இருக்கற கரித்துண்டுல ஒன்ன எடுத்து குடுப்பா.... வாங்கினவருக்கு நோய் தீரும். அது மட்டுமா? சங்கீதத்திலேயும் அவர் மேதாவியாச்சே! அது சரி. ஒம் முகம் ஏன் வாடியிருக்கு...'' என்று கேட்டாள் அம்மா.
அம்மா கேட்டதும் மகன் கொட்ட தொடங்கினான்.
'அம்மா! கிருஷ்ணயோகியிட்ட, சீடனா ஏத்துக்க வேண்டினேன். ஆனா, மறுத்துட்டார். '' என்று விம்மினான்.
மகனின் கண்களை துடைத்த அம்மா,' ''அசடு! அசடு! இதுக்கா அழற? சொல்றத கேளு''
பாடம் நடத்த தொடங்கினாள்.
'நீயோ ஏற்கனவே ராஜா பாகவதர்கிட்ட சங்கீதம் கத்துண்டாச்சு. கிருஷ்ண யோகிகிட்ட இன்னும் சில நுணுக்கங்கள கத்துக்க விரும்பறது தப்பு இல்ல! ஆனா ஏத்துக்க மாட்டேங்கறாரே....என்ன செய்யறது?அதுனால அத விடு! அம்மா சொல்றத கேளு! ஏற்கனவே நம்மகிட்ட இருக்கறத வெச்சு எப்பிடி முன்னேறதுன்னு பார்'' என்ற அம்மாவை மகன் ஆவலாக பார்த்தான்.
''என்ன புரியலியா... தெளிவா சொல்றேன்'' ' என்ற அம்மா மேலே பேசத் தொடங்கினாள்.
''சங்கீதத்துல ஒனக்கு ஏற்கனவே தெறமை இருக்கு. யோகி கத்துக்குடுக்கலியேன்னு வருத்தப்படாதே. அவர் வழி அவருக்கு... உன் வழி உனக்கு... தெய்வமே வந்து உனக்கு பாட்டு சொல்லிக் குடுக்கும்'' என்று சொல்லி மகனின் கையில் ஒரு கிருஷ்ண விக்ரகம் கொடுத்தாள்.
''அப்பா... பரம்பரை பரம்பரையா நம்ம வீட்டுல பூஜ செய்ற கிருஷ்ணர் இவர். இந்த கிருஷ்ணரையே குருவா நெனச்சு, இவன் முன்னால தம்புராவோட சாதகம் பண்ணு! வாய் விட்டுப்பாடு!'' என்றாள் அம்மா.
மகனும் அந்த விக்ரகத்தை பூஜித்து விட்டு, தம்புராவை எடுத்து பாட தொடங்கினான்.
ஆண்டுகள் சில கழிந்தன.
அந்த சிறுவன் இளைஞனாக வளர்ந்தான். அந்த இளைஞன் தான் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்னும் உத்தம பக்தராக மாறினார். இனி அவரை 'ஊத்துக்காடு' என்றே பார்க்கலாம்.
ஒரு நாள்... பக்தியில் திளைத்தபடி ஊத்துக்காடு பாடினார். அப்போது, தொடையில் யாரோ அமர்வது போலிருந்தது. கண் திறந்தார். மடியில் ஒரு குழந்தை. ஆனால், அதன் உடம்பெல்லாம் புழுதியாக இருந்தது. குழந்தையை துாக்கிய ஊத்துக்காடு, அப்பால் போக விட்டார்.
மறுபடியும் குழந்தை மடியில் அமர, மீண்டும் எழுப்பி விட்டு பாட முயன்றார்.
அப்போது புல்லாங்குழல் ஓசை கேட்க, நாலாபுறமும் பார்த்தார். அந்த குழந்தை, தளர் நடையிட்டபடி சென்று கொண்டிருந்தது.
அதன் அழுக்கு வடிவம் மறைந்து, அழகு கண்ணனாக மாறியது. தலையில் மயிற்பீலி, கைகளில் புல்லாங்குழல், இடுப்பில் பட்டாடை, கால்களில் சதங்கை, மயக்கும் கண்கள் என காட்சியளிக்க, ஊத்துக்காடு விரைந்து ஓடினார். ஆனால் அதற்குள் கண்ணன் மறைந்தான். ஊத்துக்காடு கதறினார். 'கண்ணா! நீ நேரில் வந்தும், நான் உன் அருள் பெறாத பாவியாகி விட்டேனே!'' என புலம்பினார். அப்போது புல்லாங்குழல் ஓசை மட்டும் கேட்டு கொண்டிருந்தது.
ஊத்துக்காடு சற்று நிம்மதியானார்.
'புல்லாங்குழல் ஓசை மூலம், கண்ணன் என்னுடன் இருப்பதை புலப்படுத்தி விட்டான்' என்பதை அறிந்து தீவிரமாக பாடினார்.
அலைபாயுதே கண்ணா, ஆடாது அசங்காது வா, குழலுாதி மனமெல்லாம், பார்வை ஒன்றே போதுமே, தாயே யசோதா போன்ற அவரது கண்ணன் பாடல்கள் உலக பிரசித்தமானவை.
உழைப்பும், பக்தியும் ஒரு நாளும் வீண் போகாது என உணர்த்திய ஊத்துக்காடு, 1700ல் முத்துகிருஷ்ணன், செங்கமலத்தம்மாள் தம்பதிக்கு மகனாக அவதரித்து 1765ல் கண்ணன் திருவடிகளை அடைந்தார்.
தொடரும்
அலைபேசி: 97109 09069
- பி.என். பரசுராமன்