
கூவம்! பெயரை கேட்டவுடன், மூக்கை பிடிப்போம்.
ஆனால் மூக்கின் மேல், விரலை வைத்து வியக்கக்கூடிய திருத்தலம் அது. கூவம் என்பது தலத்தின் பெயர். திருவிற்கோலம் என்பது கோயிலின் பெயர். சுவாமியின் திருநாமம் தீண்டாத் திருமேனி திரிபுராந்தகர். ஆமாம்!அங்கு அர்ச்சகர் வெள்ளி குறடுகளை கொண்டே, சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் செய்வார். கைகளால் தீண்ட மாட்டார்.
மழை பெய்யும் என்றால், சுவாமியின் திரு உருவில் வெண்ணிறம் படரும்; மழை பெய்யாது என்றால், சுவாமியின் திருமேனி கருமை நிறம் காட்டும். போர் மூளும் என்றால், சுவாமியின் திருமேனியில் செம்மை நிறம் படரும். அற்புதமான இவற்றை அறிந்தே, 'ஐயன் நல்ல அதிசயன் ' என ஞானசம்பந்தர் இத்தல சிவனை பாடி துதித்தார்.
இத்தலத்தில் தருமசீலர் என்பவர் வாழ்ந்தார். பொருள் மட்டுமல்லாது; அருளும் நிறைந்தவர். வேத வல்லுனர். இரக்கத்தின் இருப்பிடம், ஆகமங்களில் கரை கண்டவர். தருமசீலரோ... தான் பிறந்தது சிவபூஜை செய்யத் தான் என்பது போல, ஆகமவிதி தவறாமல் சுவாமியை வழிபடுவார். கிடைக்கும் நேரமெல்லாம் சிவபுராண உபன்யாசம் செய்வார். தருமசீலரின் மனைவி மாணிக்கமும் பெயருக்கேற்ற உத்தமி. வீட்டிற்கு வரும் அடியார்களுக்கு தங்க இடமளித்து உணவும், உடையும் தந்து, தருமசீலரும் அவர் மனைவியும் உபசரிப்பர்.
' என்ன மனது! என்ன மனது! இவர்களை பார்த்தால் போதும்! நம் பாவம் பறந்தோடும்' என ஊராரும், அடியார்களும் பாராட்டினர். 'எல்லோரும் தருமசீலரைப் பாராட்டுகிறார்கள். இவரோ உண்பதற்கும், உடுப்பதற்கும் வாரி வழங்குகிறார். நாம் ஓய்வு எடுத்து கொள்ளலாம்' என்பதை போல, மழை நின்று போனது. அப்புறம் என்ன நடக்கும்? பயிர்கள் வாடின. பஞ்சம் எங்கும் கூடாரம் போடாத குறையாக ஆக்கிரமித்தது. தருமசீலர் மனம் பதைபதைத்தது; நெல்லை வாரி வழங்கினார். அடுத்து வந்தவர்களுக்கு அரிசியாக வழங்கினார். ஆடைகளை வாங்கி அனைவருக்கும் கொடுத்து உதவினார். பொருளெல்லாம் தீர்ந்து போக, விளை நிலங்களை விற்று உதவினார். கணவரின் தொண்டுக்கு ஆதரவாக மனைவி, தன் நகைகளை விற்று, பஞ்சத்தை தணித்தார்.
அத்தம்பதிகளின் கொடையை கண்டு, தொண்டை நாடே போற்றியது. எவ்வளவு நாட்களுக்கு தான் தாக்குப்பிடிக்க முடியும்? தருமசீலரின் குடும்பத்திலும் வறுமை புகுந்தது. வருபவர்களுக்கு அளிக்க ஏதுமில்லை. அதற்காக அவர் கலங்கவில்லை;
பிச்சையெடுக்க தொடங்கினார். கிடைத்ததை ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.
வறுமையாளர்களிடம் பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியுமா?
ஒரு நாள்... ஊரெல்லாம் சுற்றியும் தருமசீலருக்கு, அரை ஆழாக்கு அரிசி கூட கிடைக்கவில்லை. கையேந்தி வந்த பலர் தருமசீலரின் நிலை கண்டு, 'இதற்கு மேலும் இவரைப் படுத்துவது அநியாயம்' என்று, அஞ்சி அகன்றனர். எட்டு நாட்களாக பட்டினி.... அந்நிலையிலும் வழிபாடு மட்டும் தொடர்ந்தது. ஒன்பதாவது நாள்! பகல் பூஜையை முடித்து விட்டு, வீடு திரும்பிய தருமசீலர் வாசலிலேயே மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில்,' ஐயா! பசி காதை அடைக்கிறதே! சிவ சிவா! ' என ஒரு குரல் கிறீச்சிட்டது. அவ்வளவு தான்! விழுந்த தருமசீலர் 'பளிச்'சென்று எழுந்தார். விபூதியும் ருத்ராட்ச மாலையும் அணிந்து, சிவனடியார் ஒருவர் பதைத்தபடி நிற்பதை பார்த்தார். உள்ளம் நடுங்கியபடி, அவரை வரவேற்று, 'மறுபடியும் ஒரு முறை முயன்று பார்ப்போம்' என்ற படியே, வீதியில் இறங்கி பிச்சைக்கு புறப்பட்டார் தருமசீலர். முகத்தில் கலக்கத்தோடு வந்த அவரைக் கண்டதும்,' என்ன கொடுமை? இவருக்கா இந்நிலை?' எனக் கலங்கிய மக்கள் ஒவ்வொரு கை அரிசியை இட்டனர். தருமசீலருக்கோ ஒரே குஷி. 'அரை நாழிகைக்குள் ஒரு படி அரிசி கிடைத்து விட்டதே' என்றபடியே வீடு திரும்பினார்.
உணவு தயாரானது. களைத்திருந்த அடியார் எழுந்து உணவருந்தி, வாழ்த்தி ஆசி கூறி அகன்றார். அவர் போனதும் மீதி உணவை உண்ண, தருமசீலரும் மாணிக்கமும் அமர்ந்தனர். அப்போது... 'தீண்டா மேனித் திரிபுராந்தகா! குடலே வெளியில் வந்து விடும் போலிருக்கிறதே பசி ! ' என அலறல் வாசலில் கேட்டது. அதை கேட்ட தருமசீலர், வேதனை அடைந்தாலும் தருமசீலர் 'சிவசிவா!' என சிரித்தார். மனைவியிடம்... 'அம்மா! அடியார் வடிவில் ஆண்டவன் வருவதாக ஞான நுால்கள் சொல்கின்றன. 'உண்மை! உண்மை!' என்றார் மனைவி. இருவருமாக வரவேற்று அமர வைத்து, இருந்த உணவை பரிமாறினர். தருமசீலருக்கு நிற்க முடியவில்லை; அவர் மனைவிக்கோ தலை சுற்றியது. அதை மறைக்க சுவற்றில் சாய்ந்தனர். சித்தம் சிவனிடம் இருந்தது. அந்த வேளையில்... 'அம்மா! ஆ! ' எனப் பெருங்குரல் ஒன்று அசரீரியாக எழுந்தது.
அதே விநாடியில் உண்ண அமர்ந்த, அடியவர் வடிவம் 'விர்' என்று ஆகாயத்தில் எழுந்து, காளை வாகனத்தில் உமாதேவியுடன், திருவிற்கோல நாதராக காட்சியளித்தது. தருமசீலரும் மாணிக்கமும். 'ஆ' வியந்து பயபக்தியுடன் விழுந்து வணங்கினர். சுவாமி, 'வருந்தாதீர்கள்! உங்கள் தொண்டினை உலகம் அறியவே இவ்வாறு நடந்தது. குடநெல்(குடம் நிறைய நெல்) உங்களுக்குக் கோயிலில் கொடுப்போம். பெற்றுக் கொள்க!' என்று கூறி மறைந்தார். மனைவி பின்தொடரத் தருமசீலர் கோயிலுக்கு ஓடினார். அங்கே... பலிபீடத்தின் அருகில் நெல் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு திருவிற்கோல நாதரை வணங்கிய, தருமசீலர் மீண்டும் தர்மத்தை தொடர்ந்தார்.
பதுங்கியிருந்த மழை, 'ஊஹூம்! நாம் இல்லாவிட்டாலும் தருமசீலர் வெற்றி பெற்று விடுவார். நமக்கு எதற்கு வம்பு?' என்று பெய்ய தொடங்கியது. பிறகென்ன? பயிர் பச்சைகள் தழைக்க பஞ்சம் தீர்ந்தது. கஷ்டம் வந்த போதிலும் கடமை தவறாமல் விடா முயற்சியுடன் போராடிய தருமசீலத் தம்பதியர் நமக்கு ஒரு பாடம். நாம் செய்யும் நற்செயல்களுக்கு தெய்வம் துணையாக இருக்கும் என்பதை விளக்கும் வரலாறு இது. விடாமுயற்சியும், நல்ல உள்ளமும் தான் தேவை!
தொடரும்
அலைபேசி: 97109 09069
பி.என். பரசுராமன்