
''பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பலனில்லே அதை
மையில நனைச்சு பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே...''
என்பார் கண்ணதாசன்.
இதிகாச புராணத்தை நம்ப மறுக்கிறோம். ஆனால் வரலாற்றை புரட்டினால் வியப்பு தருவதாக இருக்கும்.
தேவி பாகவதத்தில் உள்ள ஒரு நிகழ்வை பார்த்து விட்டு, அதன் பிரதிபலிப்பாக உள்ள தற்கால நிகழ்வை பார்க்கலாம்.
அருணன் எனும் அசுரன், காயத்ரி தேவியை நோக்கி தவமிருந்தான்.
கங்கைக்கரையில் அவன் செய்த தவத்தின் விளைவாக, அவன் உடம்பில் இருந்து ஓர் அக்னி வெளிப்பட்டது.
நடுங்கிய தேவர்கள், பிரம்மாவிடம் முறையிட்டனர். காயத்ரியுடன் அன்ன வாகனத்தில் அருணனுக்கு காட்சி கொடுத்தார் பிரம்மா.
அருணன் அவரை வணங்கி, ''பிரம்ம தேவரே! யுத்தத்தில் ஆயுதங்களால், ஆண், பெண்களால், இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களால் மரணம் நேரக் கூடாது; தேவர்களை வெல்லும் ஆற்றலை எனக்கு தந்தருளுங்கள்!'' என வேண்டினான்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி புறப்பட்டார் பிரம்மா.
வரம் பெற்றதும், அருணனின் அகம்பாவம் அதிகமானது?
தேவர்களை விரட்டினான். அவர்களின் வேலைகளை தானே செய்தான். ஆணவத்தின் காரணமாக தான் செய்த காயத்ரி ஜபத்தை விட்டான்.
விரட்டப்பட்ட இந்திரன், பார்வதியை பூஜித்தார். தேவர்களும் வழிபட்டனர். அழகொழுகும் திருமேனி, விசித்திரமான வண்டுகளோடு கூடிய பூமாலை, 'ஹ்ரீம்' என்று ரீங்காரம் இடும் வண்டுகள் புடைசூழ, வேதங்களால் துதிக்கப்பட்ட சிவசக்தியாக காட்சி தந்தாள் பார்வதி.
அம்பிகையிடம், அருணன் பெற்ற வரங்களை விவரித்து, அவனால் படும் துயரத்தை கண்ணீர்மல்க கூறினர்.
'அம்மா! மரணம் இல்லாத அசுரனிடமிருந்து காப்பாற்று தாயே!' என வேண்டினர்.
அதை கேட்டதும் தன்னை சுற்றியிருந்த வண்டுகளை, அருணனின் அசுரப்படை மீது ஏவினாள் பார்வதி. வண்டுகள் எல்லாம் பெருவடிவம் எடுத்து படைகள் மீது பாய்ந்தன.
வண்டுகளின் ஆறு கால்களும் அசுரர்களின் மார்பில் பதிந்து துளையிட்டன. அசுரக்கூட்டம் அழிந்தது. அசுரனான அருணன் அதிர்ந்தான். 'தேவர்களால், தெய்வங்களால், ஆண்,பெண், மனிதகுலத்தால், இரு கால் நான்கு கால் ஜந்துக்களால், ஆயுதங்களால் எல்லாம் மரணம் நேரக் கூடாது என வேண்டிய நான், வண்டுகளுக்கு ஆறு கால்கள் உள்ளதை மறந்தேனே! இந்த வண்டுகள் என்னை கொன்று விடும் போலிருக்கிறதே!' என அழும் போதே, அவனது மார்பை வண்டுக்கூட்டம், துளைத்தெடுத்தது.
அவ்வளவு தான்! அருணன் இறந்தான். முடிவே கிடையாது என நினைத்த அசுரனின் கொடுமையிலிருந்து மீண்டும் பதவியடைந்தனர் தேவர்கள்.
இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டு துயரில் ஆழ்ந்தவர்களுக்கு, வண்டுகள் மூலம் விடுதலையளித்து அம்பிகை காப்பாற்றிய நிகழ்ச்சியை போல், 1848ல் அமெரிக்காவில் நடந்தது.
அங்கிருந்த 'மார்மன்' எனும் பூர்வீக குடி மக்கள், புதிதாக வந்தவர்களால் விரட்டப்பட, அவர்கள் ஏறத்தாழ 2000 கி.மீ. தாண்டி வந்து 'சால்ட்லேக் சிட்டி' என்னும் நகரை அமைத்து வாழத் தொடங்கினர். மக்களின் வாழ்வும் தாழ்வும் விவசாயத்தில் தான் இருந்தது.
1848ம் ஆண்டு... வசந்த காலம்! பயிர் பச்சைகள் நன்றாக விளைந்தன. அறுவடைநாள் நெருங்கியது. திடீரென ஒருநாள் வானில் இருள்மூட, 'உஸ்'என்ற பேரொலி கேட்டது. மக்கள் நிமிர்ந்து பார்த்து நடுங்கினர்.
காரணம்? கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள்! அப்படியே கீழிறங்கி பயிர்களை அழிக்கத் தொடங்கின. மார்மன் மக்கள் எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லை. சற்று நேரத்தில் வெட்டுக்கிளிகள், பயிரை முழுவதுமாக அழித்து விடுமே எனப் பதறிய அவர்கள், 'தெய்வமே! பயிர்களை காப்பாற்றி எங்களை வாழ வை!' என கண்ணீர் மல்க, வேண்டினர்.
அதிசயம் நிகழ்ந்தது. 'ஸீகல்' என்னும் கடற்பறவைகள் எங்கிருந்தோ வந்தன. வானம் தெரியாத அளவிற்கு வந்த பறவைகள், வெட்டுக்கிளிகளை வேகமாக உண்ணத் தொடங்கின. இறந்தவை போக, மீதி இருந்த வெட்டுக்கிளிகள் அஞ்சி பறந்தன. சில நிமிடத்திற்குள்ளாக பயிர்கள் காப்பாற்றப்பட்டன.
மார்மன் மக்கள் மகிழ்ந்தனர். 'தெய்வமே! எங்கள் வேண்டுகோளை ஏற்று, தக்க நேரத்தில் கடற்பறவைகளை அனுப்பி, எங்களைக் காப்பாற்றினாயே' என உருகினர். நன்றி செலுத்தும் விதமாக, அங்கே உச்சத்தில் பறக்கும் நிலையிலுள்ள இரு ஸீகல் பறவைகளின் வடிவத்துடன் துாணை நிறுவினர். இதன் பின் சால்ட் லேக் சிட்டிக்கு, 'ஸீகல் சிட்டி' என்றும் பெயர் சூட்டினர்.
தீர்க்க முடியாத துயரையும் தெய்வம் தீர்க்கும் என தேவி பாகவதம் கூறியது போல் என்றும், எங்கும் நடக்கும் என்பதை விளக்கும் வரலாறு இது.
தொடரும்
அலைபேசி: 97109 09069
பி.என். பரசுராமன்