sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி (3)

/

பச்சைப்புடவைக்காரி (3)

பச்சைப்புடவைக்காரி (3)

பச்சைப்புடவைக்காரி (3)


ADDED : மே 11, 2018 02:00 PM

Google News

ADDED : மே 11, 2018 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கப்பல் தலைவர் கற்றுத்தந்த பாடம்

''நாளும் கிழமையுமா ஒரு பூஜை புனஸ்காரம் வேண்டாம்? எப்பப் பாத்தாலும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்?''

என் தாயின் குற்றச்சாட்டிற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்ன செய்வது? என் தொழில் அப்படி. என்னுடைய நெடுநாள் வாடிக்கையாளர் ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தார். வருமான வரித் துறையிலிருந்து இன்று புதிதாக நான்கைந்து ஓலைகள் வந்திருக்கிறதாம்.

பதட்டத்துடன் என் அலுவலகத்தில் எனக்காக அவர் காத்துக்கொண்டிருக்கும் போது, என்னால் மனம் லயித்துப் பூஜை செய்ய முடியவில்லை.

வேலை முடிய மாலை ஐந்து மணியாகிவிட்டது. காலையில் தான் இறைவழிபாடு செய்யவில்லை. இப்போதாவது கோயிலுக்குப் போகலாம் என்று கிளம்பினேன். காரைச் சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டு அவசரம் அவசரமாக செருப்பு போடும் இடத்தை நோக்கி ஓடினேன். ஒரு பெண் காவல்துறை அதிகாரி வழிமறித்தார்.

''ஒரு சின்ன விசாரணை. என்னுடன் வர முடியுமா?''

''நீங்க தப்பான ஆள்கிட்ட..''

''உங்களைப் பற்றிய விபரங்களைச் சொல்லட்டுமா?''

என் பதிலை எதிர்பார்க்காமல் அவரே சொன்னார்.

''போதுமா இல்லை உங்கள் ஆதார் நம்பரைச் சொல்லட்டுமா?''

கொஞ்ச துாரம் நடந்திருப்போம். அந்தப் பெண் அதிகாரியின் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் இருந்தது.

அவ்வளவு அழகு. சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அப்புறம் வெறித்துப் பார்த்ததற்கு என்று தனியாக ஈவ் டீசிங் வழக்கு போட்டுவிட்டால்?

''என்னப்பா பயந்து விட்டாயா?''

பரிச்சயமான குரல். சட்டென்று நிமிர்ந்தேன். ஒரு கணத்தின் பத்தில் ஒரு பகுதியில் தன்னை அடையாளம் காட்டி விட்டாள் அன்னை.

பச்சைப்புடவைக்காரி.

''நடந்துகொண்டே பேசுவோமா?''

''உங்கள் விருப்பம் தாயே!''

''உன் மனதை ஏதோ அரித்துக் கொண்டிருக்கிறது''

''ஆம் தாயே. எனக்கு ஆழமான கடவுள் நம்பிக்கை உண்டு. என்றாலும் நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலை இருக்கும்போது எனக்காக யாராவது காத்துக்கொண்டிருக்கும்போது என்னால் மனம் ஒப்பி இறைவழிபாடு செய்ய முடிவதில்லை. மோசமான பிரச்னையை எதிர்நோக்கும்போது முதலில் நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு, அதன்பிறகுதான் இறைவனை நினைக்கிறேன். நான் செய்வது தவறா தாயே?''

''நிச்சயமாக இல்லை. ஒரு நோயாளி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது அவனுக்கு சிகிச்சை அளிக்காமல் ஒரு மருத்துவன் எனக்குப் பாலாபிஷேகம் செய்வது மகாபாவம்.''

''சிலர் தங்கள் குழந்தைகள் நோயால் துடித்துக்கொண்டிருக்கும் போதுகூட அவர்களுக்கு சிகிச்சையளிக்காமல் 'எல்லாம் அவள் பார்த்துக்கொள்வாள்' என்று விட்டேத்தியாக இருக்கிறார்களே.''

''பொறுப்பற்ற செய்கை. எனக்குப் பிடிக்காத செய்கை. இறைவழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்று நான் காட்டுகிறேன் பார்.''

ஒரு பெரிய கடல். அதில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கடல் அமைதியாக இருந்தது. கப்பல் அலுங்காமல் சென்று கொண்டிருந்தது.

கப்பலின் தலைவர் கப்பல் ஓட்டும் பொறுப்பைத் தன் உதவியாளரிடம் ஒப்படைத்து, தன் அறையில் இறைவன் முன் அமர்ந்தபடி புனித நுாலைப்படித்துக் கொண்டிருந்தார். இறைவனின் அன்பை நினைத்தபடி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார்.

''சூழ்நிலையை மாற்றுகிறேன். தலைவர் என்ன செய்கிறார் என்று பார்.''

அன்னை கையசைத்தாள். அமைதியாக இருந்த கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. சூறாவளிக்காற்று வீசத்தொடங்கியது.

கப்பலின் தலைவர் உடனே தன் அறையை விட்டு ஓடினார். கப்பலை ஓட்டும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார்.

பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். தொலைதொடர்பு சாதனங்கள் மூலமாக அரசுத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டார். புயல் எந்தத் திசையிலிருந்து என்ன வேகத்தில் வருகிறது என்று கண்டறிந்தார்.

அந்தச் சமயத்தில் கப்பலை எந்தத் திசையில் செலுத்தினால் பாதுகாப்பானது என்பதைக் கணக்கிட்டு அப்படியே செலுத்தினார். ஒருவேளை புயலினால் கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்டால் பயணிகளும் பணியாளர்களும் தப்பித்துக்கொள்ளப் போதிய அளவு படகுகளைத் தயார் நிலையில் வைக்கச் சொல்லிக் கட்டளையிட்டார். இரண்டு மணிநேரம் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார்.

காற்றின் வேகம் படிப்படியாக குறைந்தது. கடல் மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியது. வானில் மேகங்கள் இல்லை. முழு நிலவு உதயமானது. பயணிகள் அனைவரும் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள்.

கப்பலை மீண்டும் உதவியாளர்களிடம் விட்டுவிட்டுத் தன் அறைக்குச் சென்றார் தலைவர். புனித நுாலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார்.

''பார்த்தாயல்லவா? ஏதேனும் பிரச்னை வந்தால் முதலில் அதை எதிர்கொள்ள வேண்டும். பிரச்னையைக் கண்டு பயந்து ஓடி ஒன்றுமே செய்யாமல் கடவுளை நாடுவது கோழைத்தனம். அப்படிப்பட்ட கோழைகளுக்கு நான் ஒருபோதும் உதவி செய்ய மாட்டேன். மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டு பின் அதன் பயனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி.

உனக்கு ஒன்று தெரியுமா? ஒரு ஆபத்து என்று வந்தவுடன் அந்தக் கப்பலின் தலைவர் ஓடிவந்து பயணிகள் பாதுகாப்பிற்கு பரபரவென்று நடவடிக்கை எடுத்தது புனித நுாலைப்படித்ததை விட ஆயிரம் மடங்கு புனிதமான செயல்.

பக்தி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். நிலைமை நன்றாக இருக்கும்போது நன்றியுணர்வால் மனம் நிறைந்து வழிபாடு செய்ய வேண்டும். நிலைமை மோசமானால் அதைச் சமாளிக்க முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும்.

பல மனிதர்கள் இதைத் தலைகீழாக மாற்றிச் செய்கிறார்கள். எல்லாம் நன்றாக இருந்தால் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டு ஆட்டம் போட வேண்டியது. ஒரு சின்ன பிரச்னை வந்துவிட்டால் அலறியடித்துக் கொண்டு கடவுளிடம் ஓட வேண்டியது. நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனைகள் செய்வாரின் கூட்டம் அது. எந்தக் காலத்திலும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிடாதே.''

காவல்துறை அதிகாரியின் வடிவில் வந்த மதுரையரசியை விழுந்து வணங்கினேன்.

இன்னும் வருவாள்

தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி






      Dinamalar
      Follow us