sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வ தரிசனம்! (21)

/

தெய்வ தரிசனம்! (21)

தெய்வ தரிசனம்! (21)

தெய்வ தரிசனம்! (21)


ADDED : மார் 10, 2017 12:33 PM

Google News

ADDED : மார் 10, 2017 12:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரள மாநிலம் குருவாயூரில் கிருஷ்ணர் குருவாயூரப்பன் என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். இது திருச்சூரில் இருந்து 30கி.மீ. தூரத்தில் உள்ளது.

தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.

மூலவர் குருவாயூரப்பனின் விக்ரகம் தனிச்சிறப்பு கொண்டது. மிகவும் புனிதமானது எனக் கருதப்படும் பாதாள அஞ்சனம் என்னும் கல்லில் இந்த

விக்ரகம் வடிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு காலத்தில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் வைத்திருந்தார். பிறகு பிரம்மதேவனிடம் கொடுத்தார். பிரம்மன் இதை கஸ்யப பிரஜாபதியிடம் ஒப்படைத்தார். பிறகு வசுதேவரிடம் போனது. கடைசியில் பூலோகத்தில் பிறப்பெடுத்த கிருஷ்ணரிடமே வந்து சேர்ந்தது.

துவாரகையில் தன் மாளிகையில் இதை வைத்து வணங்கி வந்தார் கிருஷ்ணர். அவரது அவதாரம் பூர்த்தியாக வேண்டிய வேளை வந்ததும், ''இன்னும் ஏழு நாட்களில் துவாரகை கடலில் மூழ்க இருக்கிறது. அந்த வெள்ளத்தில் இந்த விக்ரகம் மிதக்கும். அதை குரு பகவான் உதவியுடன், புனிதமான ஒரு இடத்தில்

பிரதிஷ்டை செய்ய வேண்டும்,'' என்கிற தகவலை, தன் அமைச்சரும், சித்தப்பா மகனுமான உத்தவர் மூலமாக குரு பகவானுக்குத் தெரிவித்தார் கிருஷ்ணன்.

அவர் சொன்னபடி, துவாரகை வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தில் மிதந்து வந்த விக்ரகம், கிருஷ்ணரின் வாக்குப்படி குரு பகவானிடம் போய்ச் சேர்ந்தது. இதை பிரதிஷ்டை செய்வதற்காக குருவும், அவரது முதன்மை சிஷ்யனான வாயுவும் சேர்ந்து நல்ல இடத்தைத் தேடினர். மலை தேசத்தை (கேரளம்) அடைந்த அவர்கள், பரசுராமரைச் சந்தித்தனர்.

''இந்த விக்ரகம் பிரதிஷ்டை ஆக வேண்டிய இடம் இதுதான்' என்று பரசுராமரே ஓரிடத்தைக் காண்பித்தார். பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சி தந்த அந்த இடத்தின் அருகே சிவபெருமான் பன்னெடுங் காலமாக தவம் இருந்து வந்தார்.

அந்த இடத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், அந்த இடம் 'குருவாயூர்' ஆயிற்று. தென் துவாரகை எனவும் போற்றப்படுகிறது.

நின்ற கோலத்தில் அருள் புரியும் பகவான், கண்களில் கருணையுடன் காட்சி தருகிறார். மேலிரண்டு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழிரண்டு கரங்களில் கதாயுதமும், தாமரையும் வைத்திருக்கிறார். கழுத்தில் துளசி, முத்து மாலைகள் தவழ்கிறது. கிரீடம், மகர குண்டலம், கேயூரம், கங்கணம், உதர பந்தனம் சூடியுள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் சந்தனமும், வைஜயந்தி மாலையும், கவுஸ்துப மணியும் அணிந்து காட்சி தருகிறார்.

இரவு மூன்று மணிக்கு நாதஸ்வரம் ஒலிக்க, சங்கொலி முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு 'நிர்மால்ய தரிசனம்' என்று பெயர். நிர்மால்ய தரிசனத்தின் போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள்,

மாலைகளைக் களைவர். பிறகு நல்லெண்ணெய்யில் தைலாபிஷேகம் துவங்கும். இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டது.

தைலாபிஷேகத்துக்குப் பின் அந்த தெய்வத் திருமேனியில் வாகை மரத்தூளை தேய்ப்பர். இதற்கு 'வாகை சார்த்து' என்று பெயர். அடுத்து சங்காபிஷேகம் நடக்கும்.

கடைசியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்வர். இது கும்பாபிஷேகம் செய்து வைப்பது போல் ஆகும்.

நெல்பொரி, கதலிப்பழம், சர்க்கரை நைவேத்தியம் செய்த பிறகு, கால பூஜை துவங்கும். இதற்கு 'உஷத் பூஜை' என்று பெயர். இந்த பூஜையின் போது நெய்

பாயாசமும், அன்னமும் பிரதான நைவேத்யம். இது முடிந்து நடை திறக்கும்போது, திருமுடியில் மயிற்பீலி, நெற்றியில் பொட்டு, இடையில் தங்க அரைஞாண் கயிறு, கரங்களில் ஓடக்குழல், மஞ்சள்பட்டு ஆகிய ஆபரண அலங்காரங்களுடன் தரிசனம் தருவார். இத்தனை பூஜைகளும் காலை ஆறு மணிக்குள் முடிந்து விடும்.

குருவாயூரப்பனுக்கு மாலையில் (சந்தியா காலம்) மட்டும்தான் தீபாராதனை செய்வர். ஏழடுக்கு விளக்கு, ஐந்து திரி, நாகப்பட விளக்கு, ஒற்றைத் திரி விளக்கு என்று பல தீபங்களால் ஆராதனை செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தியுடன் முடியும். மங்கள ஆரத்தியின்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து வணங்குவதாக ஐதீகம்.

குருவாயூரப்பனுக்குப் பிடித்தது பால், நெய், சர்க்கரை பாயாசம், அப்பம், திரிமரம், மற்றும் பழ வகைகள். இங்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களை மேல்சாந்தி, கீழ்சாந்தி மற்றும் தந்திரிகள் என்று அழைப்பர். கார்த்திகை 1ல் இருந்து மார்கழி 11வரையிலான 41 நாட்கள் மண்டல காலம் எனப்படும். இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவர். மண்டல கால பூஜையின்போது, 40 நாட்களுக்கு பஞ்சகவ்ய அபிஷேகமும், 41வது நாளன்று சந்தன அபிஷேகமும் செய்யப்படும்.

குருவாயூரப்பனின் மார்பில் தினமும் சந்தனம் சார்த்தப்படுவது வழக்கம் என்றாலும், மார்கழி 11ல் செய்யப்படும் சந்தன அபிஷேகத்தைத் தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூடுவர். துலாபார நேர்த்திக்கடன் இங்கு பிரசித்தம். தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை எடைக்கு எடை செலுத்துவர்.

குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவதும் இங்கே சிறப்பு. குருவாயூரப்பனைத் தரிசித்தால், அவனது பரிபூரண அருளுக்குப் பாத்திரமாகலாம்.

நேரம்: இரவு 3:00 - மதியம் 12:30, மாலை 4:30 - இரவு 9:15 மணி

இன்னும் தரிசிப்போம்...

பி. சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us