
''ஓம் நமோ பகவதே ருத்ராய
நமஸ்தே ருத்ரமான்யவே...''
நெருப்பாக இருக்கும் ருத்ரனை வணங்குகிறேன். நெருப்பாக இருக்கும் ருத்ரனின் கோபத்தையும் வணங்குகிறேன்... என்பது இதன் தாத்பர்யம்.
அனல் ரவுத்ரம் கொண்ட சிவனைக் குளிர்விக்கவே கங்கை பெருக்கெடுத்து ஓடுகிறாள் வாரணாசியில். புனிதத்தின் உச்சம் கங்கை. இறைமையின் உச்சம் ருத்ரன். இந்த இரு உச்சங்களும் சேர்ந்து என்னை பரவச நிலைக்கு ஆளாக்கியது என் பெரும்பேறு.
புனித தலமான காசியை... வாரணாசியை... எப்படி சொல்ல? என்னவென்று சொல்ல? பழமை மிக்க நம் இந்தியாவின் கூறுகள் அனைத்தும் இன்றும் இங்கு நிறைந்திருக்கின்றன.
காசிக்காற்று, காசிச்சூரியன், காசிச்சந்திரன், காசிமண், காசிமக்கள், காசிமாடுகள், காசிப்பால், காசிதேனீர், காசிஉணவு, காசிரிக் ஷா, காசிக்கடைகள், காசி துறவிகள் எல்லாவற்றுக்கும் மேலாக காசியில் ஓடும் கங்கை, மணிகர்ணிகா காட், அஷ்வமேதகாட், சிந்தியா காட், ஆஸி காட், அரிச்சந்திர காட், துளசி காட், கபீர் காட், அகில்யா காட், சேத் காட், கேதார் காட், ரீவா காட், பாடனி காட், ஜானகி காட், மாதா ஆனந்தமாயி காட், வாச்சரஜா காட், ஜெயின் காட், நிஷாத் காட், பிரபு காட், சேத்சிங் காட், நிரஞ்சனி காட், மகா நிர்வாணி காட், ஷிவாலா காட், குலாரியா காட், தண்டி காட், ஹனுமான் காட், ஹனுமனானா காட், கர்நாடகா காட், லாலி காட், விஜயநகரம் காட், சவுகி காட், சோமேஸ்வரா காட், மானஸரோவர் காட், நாரதர் காட், ராஜா காட், கோரி காட், பாண்டே காட், சர்வேஸ்வரா காட், கஸுதி காட், ராணா மகால் காட், தர்பங்கா காட், முன்ஷி காட், சீதாலா காட், பிரயாக் காட், மன்மந்திர் காட், திரிபுரா பைரவி காட், மீர் காட், நயா காட், லலிதா காட், அம்ரோஹா காட், ஜலாசென் காட், கீர்கி காட், பஜிரியோ காட், சங்கதா காட், கங்கா மகால் காட், கணேசா காட், மேத்தா காட், ராமா காட், ஜதாரா காட், ராஜா குவாலியர் காட், மங்கல கவுரி காட், வேணிமாதவா காட், பஞ்ச கங்கா காட், துர்கா காட், பிரம்மா காட், புந்திபரகோடா காட், லால் காட், கயா காட், பத்ரி நாராயணா காட், திரிலோசன் காட், கோலா காட், நந்தேஸ்வரா காட், சக்கா காட், தெல்லிநலா காட், பூடா காட், பிரகலாதா காட், ஆதிகேசவா காட், ராணி காட், பஞ்சாக்னி ஆகாரா காட் இத்தனையும் அங்கிருக்கும் படித்துறைகள். 'காட்' என்பது கங்கையின் புனிதத்தை மேலும் அதிகமாக்குகின்றன.
இத்தனை படித்துறை பெயர்களையும் தினமும் வாசித்துப் பார்ப்பேன்.
அப்போது என்னைச் சுற்றிலும் காற்றில் கங்கையின் குளுமை மிதக்கும். காசியின் புராதனச் செழுமை மிதக்கும்.
எல்லாவற்றையும் விடவும் காசி விஸ்வநாதரின் தட்பமும் வெப்பமும் மிதக்கும்.
அந்த படித்துறைகளின் நுாற்றாண்டு காலப் பழமை, ஒவ்வொரு நொடியும் உருமாறும் கங்கையின் புதுமை, அங்கே மிதக்கும் படகுகள் சொல்லும் கதைகள், படகோட்டிகளின் முகச்சுருக்கங்கள், துறவிகளின் முகப்பொலிவு, இயல்பாகத் திரியும் மாடுகளின் புனிதம், மனிதர்களின் பணிவும்,
பெருந்தன்மையும் எங்கேயிருந்து வந்தன? எதன் ஆதிமூலம் இவை? யார் தந்தது? யார் பெற்றது?
ஒரே பதில் காசி விஸ்வநாதர் தான். அவனே காசியாய் கிடக்கிறான்; கங்கையாய் நடக்கிறான்; பனிக்குடம் உடைந்து அப்போது பிறந்த குழந்தையின் ஈரப் பிசுபிசுப்பாய் கிடக்கிறான்; வாழ்க்கை பயணம் முடித்து நிறைவாக விடைபெறும் முதியவரின் உடலை எரித்து சாம்பலாக்கும் அக்னியாகவும் கிடக்கிறான்.
கங்கையில் மூழ்கி எழுந்த ஒற்றை நொடியில் தலை முதல் கால்கள் வரை சிலிர்த்தது கங்கையின் குளிர்ச்சியால் அல்ல. சிவனின் குளிர்ச்சி தொட்டு
ஆசீர்வதித்ததால் தான்.
எத்தனை முன்னோர்கள், ஞானிகள், துறவிகள், புனிதர்கள் மூழ்கி எழுந்த கங்கை... எத்தனை எத்தனை காலமாக இந்தியாவுக்கு ஞானம் வழங்கும் கங்கை... பிறப்பும், இருப்பும், இறப்பும் கலந்தது தான் நிற்காமல் இயங்கும் வாழ்க்கை என்று சொல்லித் தரும் கங்கை.
அவளின் ஒரு துளி நம் மீது பட்டாலே இந்த ஜென்மம் சாபல்யமாகும்.
அவளுக்குள் மூழ்கி எழுந்ததில் மனசின் கசடு, கபடு, அழுக்கு, மாச்சர்யம் எல்லாமே நீங்கியதால் இன்னொரு பிறப்பாக நான் மாறிப் போனேன்.
புனித நீராடி காசி விஸ்வநாதர் தரிசனம். குறுகலான வளைவுகளில் கைகூப்பி பரவச நிலையில் நகர்ந்தேன். அங்கிருந்த பண்டா என் கையில் ஒரு சங்கினைத் திணித்தார். காசியின் லிங்கேஸ்வரர் மீது புனித நீரை ஊற்றச் சொன்னார். அவர் யார்? எனக்கு ஏன் சங்கு தந்தார்? என்னை ஏன்
சங்காபிஷேகம் செய்யச் சொன்னார்? இதோ இந்த நொடி வரைக்கும் பதில் இல்லாத புதிர் இது.
வாழ்க்கையின் சுவாரஸ்யமே இந்தப் புதிர் தானே? விடை தெரியாத, விடை இல்லாத, விடை தேடாத புதிர்களால் புனையப் பட்டிருக்கும் எனது சுவாசங்களை அர்த்தமுள்ளதாக்குவது என் ஈசன் ருத்ரன்.
சங்கு... என் வாழ்க்கை
சங்கு தீர்த்தம்.... என் உயிர்
என்னுயிரை அவனுக்கு அபிஷேகம்
செய்கிறேன். என் சுவாசத்தை அவனுக்கு
ஆராதனை செய்கிறேன். என்னிலிருக்கும் என்னை அவனுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.
சங்காபிஷேகம் நூற்றியொன்று, ஆயிரத்தொன்று, லட்சத்தி ஒன்று சங்குகளால் ஞானிகளும் துறவிகளும் செய்வது.
நான் அஞ்ஞானி. சிவனுக்கு தருவதற்கு என்னிடம் ஒற்றை சங்கு தான் இருந்தது. ஆனால் அது நிறைய சிவன் பிரேமையும் இருந்தது. அதை விடவும் பொருத்தம் சிவனுக்கு, என்னிடம் வேறேதுமில்லை. வேறேதும் தேவையில்லை.
இன்னும் சொல்வேன்
ஆண்டாள் பிரியதர்ஷினி
அலைபேசி: 94440 17044