ADDED : டிச 06, 2019 10:34 AM

ஒருமுறை காஞ்சி மகாசுவாமிகளிடம் அன்பர் ஒருவர் மதமாற்றம் தொடர்பான சந்தேகம் கேட்டார்.
''எல்லா மக்களையும் எங்கள் மதத்திற்குக் 'கன்வர்ட்' பண்ண வேண்டும் என்பது எங்கள் மதத்தின் கொள்கை. எனவே மாற்றம் செய்வது தவறு ஆகாது எனச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன சொல்வது?''
''அவர்கள் செய்யும் தப்புக்கு இப்படி ஒரு சமாதானமா?'' எனச் சிரித்தார் சுவாமிகள்.
''முன்பெல்லாம் ராஜாக்கள் வெறுமனே தங்கள் ராஜ்யத்தை விரிவுபடுத்த போர் தொடுத்தனர். ஹிட்லர் கூட அப்படித் தான். அது போல காரணமின்றி முறைகேடாகப் போர் தொடுப்பதை இன்று உலகம் ஏற்பதில்லை. தேவையின்றி போர் தொடுப்பது குற்றம் என்ற மனப்பான்மை உலகெங்கும் வந்து விட்டது. அந்தக்கால விரிவாக்க கொள்கையை இந்தக் காலத்தில் நியாயப்படுத்த கூடாது.
அது போல ஆதிகால மத விஸ்தரிப்புக் கொள்கையை இந்த காலத்தில் நியாயப்படுத்துவது சரியாகாது. ஒரு தேசத்தின் பகுதிகளைக் கவரப் பார்ப்பது எப்படி தவறோ, அது போல ஒரு மதத்தினரை இன்னொரு மதத்தினர் கவரப் பார்ப்பதும் தப்பு தான். பிற மதத்தினரின் மூலபுருஷர்கள் கடவுள் சம்பந்தமான சில உண்மைகளைத் தெரிந்து கொண்டனர். அதையே புது மதமாக உருவாக்கினர் அதனடிப்படையில் அனைவருக்கும் நிறைவளிக்க தங்களுடைய மதத்தால் முடியும் என அவர்கள் நினைத்திருக்கலாம்.
ஆனாலும் அவர்கள் எவ்வளவு பெரியவர்கள் என்றாலும் தங்கள் வழியே சிறந்தது. வேறு வழி கிடையாது என அவர்கள் நினைத்தது சரியல்ல. கடவுள் படைப்பில் எங்கும் எதிலும் 'வெரைட்டி' இருக்கிற மாதிரி, மத விஷயத்திலும். ஒரே பரமாத்மாவை அடைய பல வழிகள் இருக்கின்றன என வேதம் சொல்கிறது. இதுவே சத்தியம். அப்படிப்பட்ட பல வழிகளை தனக்குள் அடக்கியிருப்பது தான் இந்து மதம்.
மதப் பிரசாரம் செய்யும் பலருக்கும் நம் மதத்தின் பெருமை தெரிந்திருக்கும். இருந்தாலும் குறை சொல்லிப் பழிப்பதன் காரணம், அதுவே மதக்கடமையாகவே தங்களுக்கு வாய்த்து விட்டதாக கருதும் தொழிலின் நிமித்தம் தான்.
அரசு ஒவ்வொருவருக்கும் சொத்துரிமை அளித்திருக்கிறது. இதன் பொருள் என்ன? நியாயமாக தனக்கு உரிமையான சொத்தை ஒருவர் அனுபவிக்கலாம் என்பது தானே தவிர, மற்றவர் சொத்தில் உரிமை பாராட்டலாம் என்பது ஆகாது இல்லையா?
அப்படித் தான், மதச் சுதந்திரம் என்பது அவரவர் மதத்தை, அவரவர் பின்பற்றும் உரிமையே தவிர, மற்ற மதத்தினரை தன்வழிக்கு இழுப்பதற்கான உரிமையல்ல.
மதமாற்றத்தை அறவே கைக்கொள்ளாதது நம் இந்து மதம். மற்ற மதங்களை வெறுப்பதும் இல்லை. மதமாற்றமும் செய்வதில்லை. அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் கருத்து. கடவுளை அடையப் பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழி. அவரவர் வழியில் சென்றால் யாருக்கும் பிரச்னை இல்லை!
விளக்கம் கேட்ட அன்பர் மனம் தெளிந்தார்.
தொடர்புக்கு : thiruppurkrishnan@hotmail.com
திருப்பூர் கிருஷ்ணன்
காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.
உடல் நலம் பெற...
இந்த ஸ்லோகத்தை தினமும் படித்தால் உடல் நலத்துடன் வாழலாம் என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்தமயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!