ADDED : மார் 15, 2019 02:58 PM

ஒரு ஆட்டையும், ஒரு குதிரையையும் வளர்த்தான் ஒரு விவசாயி.
ஒருநாள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட குதிரையை பரிசோதித்த மருத்துவரோ ''மூன்று நாளைக்கு மருந்து கொடுத்து பார்க்கலாம். அதற்குள் குணமாகாவிட்டால் சிரமம் தான்'' என்றார். இதைக் கேட்ட ஆடு,''நண்பா... எழுந்து நடக்க முயற்சி செய்; இல்லாவிட்டால் உன் பாடு சிரமம் தான்'' என எச்சரித்தது.
மறுநாள் மீண்டும் வந்த மருத்துவர், ''நாளை குதிரை குணமாகாவிட்டால் கொல்வதை தவிர வேறு வழியில்லை. மற்றவருக்கும் இந்த நோய் பரவும்.'' என்றார். பதறிப்போன ஆடு, ''நண்பா, எப்படியாவது நடக்க முயற்சி செய்'' என்றது.
நிலைமையைப் புரிந்து கொண்ட குதிரை, மெல்ல நடக்கத் தொடங்கியது. விவசாயியோ நிம்மதியடைந்தான்.
மீண்டும் வந்த மருத்துவரிடம் ''ஐயா! என் குதிரை குணமாகி விட்டது. நீங்கள் கொடுத்த மருந்து வேலை செய்கிறது. அதற்கு நன்றிக்கடனாக இந்த ஆட்டைக் கொன்று விருந்தளிக்க விரும்புகிறேன்” என்றான்.
நன்மை கிடைத்தது யாரால் என்பதை அறியாத பலர், உண்மையைப் பலி கொடுக்கிறார்கள்.