
அர்ச்சகர் காலையில் கோயிலுக்கு வருவார். காலசந்தி, உச்சிகாலம் முடிந்து மதியம் வீட்டுக்குப் போவார். ஓய்வு எடுத்தபின் மாலையில் வந்து அர்த்தஜாம பூஜை வரை முடித்து விட்டு வீட்டுக்குச் செல்வார்.
'ஆமாம்... இது தெரிந்தது தானே?' என்கிறீர்களா... சற்று பொறுங்கள்.
குறிப்பிட்ட ஒரு கோயிலில் அர்ச்சகர் கோயிலை விட்டு வெளியே செல்வதில்லை. உலகில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் தெரிந்து கொள்வதில்லை. காஞ்சி மஹாபெரியவர் இது பற்றி சொல்கிறார் பாருங்கள்.
'ஒருமுறை சிவராத்திரியன்று திருச்சூர் க்ஷேத்திரத்தில் இருந்தேன். அன்று ஸ்ரீமடத்து முகாமில் சந்திரமவுலீஸ்வரருக்கு பூஜை நடத்த வேண்டும். சிவராத்திரியன்று அங்குள்ள வடக்குநாதன் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல். அதே சமயம் பூஜைக்கும் இடையூறு நேரக் கூடாதே என யோசித்தேன்.
முதல் கால பூஜைக்கும், இரண்டாம் கால பூஜைக்கும் நடுவில் கோயிலுக்குப் போனேன்.
அங்கு பூஜை செய்பவர்கள் சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்த பண்டிதர்கள். தரிசனம் முடித்து கிளம்பிய போது 'இன்னும் பத்து நிமிஷம் இருங்களேன். உங்களை இனி இந்த ஜன்மாவில் எப்போது பார்க்கப் போறோமோ?' என்றனர்.
'ஏன் இப்படி சொல்கிறீர்கள்?' எனக் கேட்டார் காஞ்சி மஹாபெரியவர்.
'கோயிலை விட்டு வெளியே போக எங்களுக்கு அதிகாரம் கிடையாது. எல்லாமே நான்கு சுவருக்குள் தான். இயற்கை உபாதை உள்ளிட்ட எல்லா வசதியும் உள்ளுக்குள்தான்' என்றனர்.
பிறகே தெரிந்தது. கடும் கட்டுப்பாடு உள்ளது என்று!
இந்த பண்டிதர்கள் பத்து வயதிலேயே சாஸ்திரங்களை கற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு கோயிலைத் தவிர வேறொன்றும் தெரியாது.
'உறவினர்கள் இறந்தால் தீட்டு வருமே' என சந்தேகம் வரலாம்.
தீட்டு காலத்தில் கோயிலுக்கு தொடர்பு உள்ள ஓரிடத்தில் தங்கி விட்டு தீட்டு முடிந்ததும் மீண்டும் கோயிலுக்குள் வருகின்றனர்.
அவர்கள் கேட்டது நியாயமானது தானே! கோயிலுக்குள் வந்த மகானை இன்னும் சில நிமிடமாவது தரிசிக்க விரும்பியதை நிறைவேற்றாமல் போவாரா..
பண்டிதர்களுக்காக கோயிலில் சற்று நேரம் இருந்த மஹாபெரியவர் அதன் பின்னரே மகாசிவராத்திரி பூஜை செய்ய அவசரமாகப் புறப்பட்டார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com