sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 19

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 19

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 19

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 19


ADDED : மே 22, 2023 08:46 AM

Google News

ADDED : மே 22, 2023 08:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்திரசேனன்

திருதராஷ்டிரன் பாண்டவர் குறித்து பிராமணனிடம் விசாரிக்க அவர், ''பாண்டவர்கள் இப்போது சப்த ரிஷிகளுக்கு ஒப்பானவர்களாக திகழ்கிறார்கள். வனவாசம் அவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. மாறாக அவர்களை புடம் போட்ட தங்கமாக ஆக்கியுள்ளது.

தர்மன் தினமும் நித்ய கர்மங்களை குறைவின்றிச் செய்கிறான்.அவர்களின் இருப்பிடம் ஆஸ்ரமக் குடிலுக்கு ஒப்பாக உள்ளது. திரவுபதி தினமும் துளசி பூஜை செய்து வருகிறாள்.

நகுலன் தாவரங்களை ஆராய்ந்து மருந்தினைக் கண்டறிந்து அதை தன்வந்திரி அர்ப்பணம் செய்து பொழுதை மேம்படுத்திக் கொள்கிறான். சகாதேவனோ வானிலையை ஆய்ந்து காலக்கணக்கை போடுவதில் சமர்த்தனாய் திகழ்கிறான். பீமன் தான் உணவை சேகரிப்பவன். அதோடு அவனே பதார்த்தங்களை பக்குவமாய் சமைக்கவும் செய்கிறான். அர்ஜுனன் அஸ்திர பயிற்சியில் நாட்டமுடையவனாக உள்ளான். அது மட்டுமல்ல ஈசனிடம் இருந்து நிகரில்லாத பசுபதாஸ்த்திரத்தையும் பெற்று விட்டான். இவைகள் போக புண்ணிய நதிகளில் நீராடி ரிஷிகள், முனிவர்களை தரிசித்து ஆசி பெற்று பூரண புண்ணிய வாழ்வை வாழ்கின்றனர். என் வரையில் வனவாசம் என்பது அவர்களுக்கான கொடுப்பினை என்றே உணர்கிறேன்'' என பிராமணர் கூறவும் திருதராஷ்டிரன், காந்தாரி பெருமூச்சு விட்டனர்.

''அரசும் அதிகாரமும் இருப்பதால் மட்டும் நல்வாழ்வு அமைந்திடாது. அருளும் அமைதியும் நிரம்பியதே நல்வாழ்வு! அது பாண்டவர்களிடம் உள்ளது'' என பிராமணர் கூறும் போது சகுனியின் வருகை நிகழ்ந்தது.

''என்ன அந்தணா... பாண்டவ புராணம் படிக்கிறாய் போல தெரிகிறதே? எங்கள் அரசரின் மனதில் கவலையை உருவாக்க உன்னை அனுப்பியுள்ளனரோ?'' என்று தொடக்கமே இடக்காக இருந்தது சகுனியிடம்.

'' இல்லை சகுனியாரே! நான் வந்திருப்பதே அவர்களுக்குத் தெரியாது. நானாகவே அரசர் பாண்டவர் குறித்து கேட்கவும் சொன்னேன்''

''சரிசரி... இட்டுக் கட்டியது போதும்! புறப்படுங்கள்... தானம் பெற வந்திருந்தால் நெல்லையும் பொன்னையும் பெற்றுச் செல்லுங்கள். இனி இது போல ராஜ தரிசனம் செய்து தோன்றியதை பேசுவதை விட்டு விடுங்கள். நீர் ஒரு பிராமணர் என்பதால் உம்மை இத்தோடு விடுகிறேன்'' என சகுனி கடுமை காட்டவும் பிராமணர் அவமானப்பட விரும்பாது விலகிச் செல்லத் தொடங்கினார்.

''சகுனி... என்ன இது? பிராமணனிடம் இப்படியா பேசுவது?'' என திருதராஷ்டிரர் மறுத்தும் பயனில்லை.

''அரசே! ஒருவர் உங்களை சுலபமாக ஏமாற்றி விட முடியும். உண்மையில் பாண்டவர்கள் ஏற்றமுடன் எல்லாம் இல்லை. காட்டுவாசிகளைப் போல கனி, கிழங்கை உண்டு கொண்டு ஒவ்வொரு நாளையும் பயத்துடனும் பரிதவிப்புடனும் கழிக்கின்றனர். நம்மை பயமுறுத்த பிராமணரை அனுப்பியுள்ளனர்''

''சகுனி... நீ சொல்வது தான் உண்மையென்றால் நாங்கள் அதைக் கேட்டு மிக வருந்துகிறோம்''

''எதற்காக வருந்த வேண்டும்? அவர்கள் தவறுக்கு அவர்கள் அனுபவிக்கிறார்கள். அதற்கு மேல் அது குறித்து சிந்திக்க ஏதுமில்லை''

''அப்படி சொல்லாதே. புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும், மகரிஷிகளிடம் ஆசிகள் பெறுவதும், தினமும் அக்னி ேஹாத்திரம் புரிந்து தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும் ஆஹுதி அளிப்பதும் எத்தனை பெரிய புண்ணியச் செயல் தெரியுமா?''

திருதராஷ்டிரன் பிராமணர் கூறியதை வலியுறுத்திக் கூறும் போது விதுரனும் அங்கு வந்தான்.

''அண்ணா... சரியாகச் சொன்னீர்கள். இதுவே தெளிந்த சிந்தைக்கான பேச்சு. பாண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்'' என்றான்.

''விதுரரே! நீர் எப்போது என் பேச்சை ஒப்புக் கொண்டிருக்கிறீர்? எங்களோடு இருந்து கொண்டு எங்களுக்கு எதிராகச் சிந்திப்பது தானே உமக்கு வாடிக்கை. இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு வனவாச காலம் முழுவதிலும் பாண்டவர்கள் சேமிக்கும் புண்ணியத்தை துரியோதனனும் அவன் சகோதரர்களும் ஒரு மண்டலத்தில் பெற்றுக் காட்டுவார்கள். வனவாசத்துக்கு அஞ்சுபவனல்ல துரியோதனன். இதை அவர்கள் செயல்படுத்தி முடித்த பிறகு உங்களோடு பேசுகிறேன். இப்போது வருகிறேன்'' என்ற சகுனி அடுத்து நேராய் வந்து நின்றது துரியோதனனிடமும் கர்ணனிடமும் தான்.

''என்ன மாமா முகம் சிடுசிடுவென உள்ளது?''

''கேள்விப்பட்ட செய்தி அப்படி ஆக்கி விட்டது துரியோதனா''

''அப்படி என்ன கேள்விப்பட்டீர்கள்''

சகுனியும் பிராமணர் கூறிய சகலத்தையும் கூறி முடித்து, தான் இறுதியாக சொல்லி விட்டு வந்ததையும் கூறினான்.

''சபாஷ் மாமா... சரியான பதிலைத்தான் கூறியுள்ளீர். எனக்கும் இந்த பாண்டவர்கள் வனத்தில் என்ன பாடுபடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று ஆசை. ஒரு கல்லில் இரு மாங்காய். நாமும் வன மகோத்சவம் புரிந்தது போலாயிற்று. பாண்டவர்களையும் பார்த்து எள்ளி நகைக்கவும் நல்ல வாய்ப்பு'' என்று எக்காளமிட்டு சிரித்தான். கர்ணனும் சேர்ந்து கொண்டான்.

''துரியோதனா... நான் எள்ளென்றால் நீ எண்ணெய்யாக ஆகி விடுகிறாய். நீ, நான், கர்ணன் என்று நாம் மட்டும் சொன்னால் போதாது. நீங்கள் உங்கள் பத்தினிகளையும் அழைத்து வாருங்கள். நம் காவலுக்கு தளபதிகளும், வீரர்களும் வரட்டும். வனத்தில் நாம் ஏகாந்தமாய் இருக்க வேண்டும். அதை அந்த பாண்டவக் கூட்டம் கண்டு புழுங்க வேண்டும். அவர்களை நாம் சீண்டவும் செய்ய வேண்டும். அவர்கள் கோபம் கொண்டு நம்மை எதிர்க்க வந்தால் விட்டு விடக் கூடாது. அவர்கள் கைகால்களை முடமாக்கியோ இல்லை வனவாசத்திலேயே அவர்களின் வரலாற்றை நாம் முடித்து விட வேண்டும்''

''மாமா... இப்படி நீங்கள் சொல்வது கூட கேட்க இன்பமாக உள்ளது. சொல்லப் போனால் அவர்களை அழிக்க நல்ல சந்தர்ப்பமும் கூட... என்ன சொல்கிறாய் கர்ணா'' என்றான் துரியோதனன்

கர்ணனிடம் மவுனம்!

''ஏன் இந்த மவுனம் கர்ணா?''

''இப்போது அவர்கள் குறித்த பேச்சும் சிந்தனையும் தேவைதானா நண்பா?''

''நீ என்ன சொல்ல வருகிறாய்?''

''வனப்பிரவேசம் என்னும் பெயரில் வம்பு வளர்க்கச் செல்வது சரியாகப் படவில்லை''

''அவர்கள் நம் எதிரிகள். அவர்களை அழிக்க கிடைக்கும் வாய்ப்பை விடக் கூடாது என்று நான் கருதுகிறேன். இது தவறா?''

''தவறு சரி என்ற கோணத்தை விடு. இது நேர்மையா? வீரமா? அந்த கோணத்தில் சிந்தித்திடு''

''என்ன கர்ணா... நீயும் விதுரனைப் போல சிந்திக்கிறாய்? பாண்டவர் மீது உனக்கும் கூடவா பரிவு?''

''நிச்சயமாக இல்லை. அதே சமயம் நமக்கென்று சில கட்டுப்பாடுகளும், தார்மீக விதிகளும் உள்ளதே? அவர்களை காட்டுக்கு அனுப்பியதே பெரும் தவறு என்று நம்மிலேயே பலர் நினைக்கின்றனர். இந்நிலையில் அவர்களை தேடிச் சென்று வம்புக்கிழுத்து வீழ்த்த நினைப்பது அந்த தவறுக்கு வலு சேர்க்காதா?''

''பிறர் நினைப்புக்கு முக்கியத்துவம் தந்தால் இப்போது இருக்கும் இந்த அதிகாரம் நம்மிடம் நிலைத்திருக்காது கர்ணா! அவர்கள் இந்த அதிகாரம் நம்மை அழிப்பதற்கான சக்திகளை சேகரித்து வருகின்றனர். வனவாசம் முடிந்து திரும்பினால் நாட்டை பங்கிட்டாக வேண்டும் இல்லாவிட்டால் யுத்தம் புரிந்தாக வேண்டும். அப்போது புரிய வேண்டிய யுத்தத்தை அவர்கள் முழுபலம் பெறும் முன் இப்போதே புரிவது தானே புத்திசாலித்தனம்?'' என்ற சகுனியின் கருத்தை துரியோதனனும் வேகமாய் ஆமோதித்தான்.

''மிகச் சரியாக சொன்னீர்கள் மாமா... கர்ணா...எதிரி விஷயத்தில் நாம் முந்துவதும் முனைவதுமே மிகவும் சரி. மாமா... நீங்கள் வனப்பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என துரியோதனன் தன் முடிவை உத்தரவாகவே பிறப்பித்தான். கர்ணனால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. மறுநாளே நுாற்றுக்கணக்கான ரதங்களில் கவுரவர்களின் வனப்பிரவேசம் தொடங்கியது.

அந்த பிரவேசத்தை விண் மீதிருந்து ஒரு தேவன் கவனித்தவனாக இந்திரனிடம் சென்று கூறினான். இந்திரன் உடனேயே பாண்டவர்கள் குறித்து கவலை கொண்டான். தன் அம்சத்தில் பிறந்த பிள்ளைக்கு ஈடான அர்ஜுனன் மீதான பாசம் இந்திரனை ஒரு முடிவெடுக்கச் செய்தது. அதன் விளைவாக 'சித்திரசேனன்' என்ற மகாபலம் பொருந்திய கந்தர்வனை அழைத்தான் இந்திரன்!

--தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us