ADDED : ஜூன் 23, 2023 12:02 PM

தைத்யர்கள்
துரியோதனன் பிராயோபவேசத்தை கைவிட்டதை அறிந்த சகுனி, மாய தைத்யருக்கு நன்றி கூறி வணங்கிய நிலையில், மாயதைத்யரும் பாண்டவர்களிடம் கவுரவர்கள் தொடர்ந்து தோல்வியடையக் காரணம் திட்டமிட்டும், கூட்டுறவோடும் செயல்படாததே என்றார்.
''இனிவரும் நாட்களில் நான் அவர்களிடம் எந்த வகையிலும் தோற்றுவிடக் கூடாது. அதற்கு என்னவழி?'' என்று துரியோதனன் உடனேயே மாயதைத்யரிடம் கேட்டான். ''காந்தாரி புத்திரனே! வெற்றிக்கு பல காரணிகள் உள்ளன. ஆழ்மனதில் துளி அச்சம் இருந்தாலும் அது வெற்றியை குலைத்து விடும். ஆழ்மன நம்பிக்கை என்பது மிக முக்கியம். அந்த விஷயத்தில் உன்னை நீயே பரிசோதனை செய்து கொள். அடுத்து எதிலும் நீ முன் நிற்காதே. உன்னோடு இருக்கும் வரசித்தி படைத்தவர்களை முன்னிறுத்து''
''அப்படித்தானே இதுவரையிலும் நான் செயல் பட்டிருக்கிறேன்''
''கர்ணன், பகதத்தன், ஜராசந்தன், சிசுபாலன் என உனக்கு சினேகமானவர்களை நீ குறிப்பிடுவது புரிகிறது. ஆனால் இவர்களை விட பல மடங்கு சக்தி படைத்த உன் பாட்டன் பீஷ்மரை முன்நிறுத்தி யிருக்கிறாயா? உன் குருவான துரோணரை, உன் சித்தப்பனான விதுரனையும் மறந்து விட்டாய். இவர்களை முன்னிறுத்தி எதையும் செய்ய வேண்டும். உன்னை இப்போது என் மூலம் மீட்டது சகுனியே. சகுனியையும் முன்னிறுத்த வேண்டும்''
''நல்ல ஆலோசனை... ஆனால் என் பாட்டனும் சரி, குருவான துரோணரும் சரி, சித்தப்பா விதுரனும் சரி, பாண்டவர் மீது விரோதம் இல்லாமல் அல்லவா உள்ளனர்?''
''கவலைப்படாதே. தைத்யர்களான எங்களின் அசுர சக்தி உனக்கு கைகொடுக்கும். இவர்களை நாங்கள் ஆக்ரமித்தால் இவர்கள் புத்தியிலும் மாற்றம் உண்டாகி விடும்''
''அப்படியா''
'' சந்தேகம் வேண்டாம். தேவசக்திகள் எங்களுக்கு எதிரானவை. பாண்டவர்கள் தேவசக்திகள் கொண்டிருப்பதால் அவர்களும் எங்கள் எதிரிகளே! அதேசமயம் அவர்கள் எதிரியான நீயே இனி எங்கள் நண்பன். ஏன்... தலைவன் என்றும் சொல்வேன்'' மாயதைத்யர் சொல்லச்
சொல்ல துரியோதனன் புத்துணர்ச்சி பெற்றவன் போலானான்.
''மாயதைத்யரே! அப்படியானால் வரும் காலங்களில் உங்களின்
சக்தி எங்களுக்கு உதவும் என நம்பலாமா?''
''வாக்குறுதி அளிக்கிறேன். எங்களால் உன் வீரர்கள் அவ்வளவு பேரையும் வெறி பிடித்தவர்கள் போல் ஆக்க முடியும். உனக்கு எதிரான வர்களை கூட நாங்கள் ஆக்ர மித்தால் அவர்கள் உனக்கு ஆதரவாகி விடுவர்''
''பிராயோ பவேசம் இப்படி நன்மையில் முடியும் என நினைத்துக் கூட பார்க்க வில்லை''
''துரியோ தனன் மகிழ்ந்து மாயதைத்யர் கால்களில் விழுந்து வணங்கி னான். அதன்பின் சகுனி காலிலும் விழுந்து எழுந்தவன், ''மாமா... என் வரையில் நீங்களே எல்லாம்... என்னை மீட்டது மட்டுமல்ல. பாண்டவரை அழிக்க ஒரு புதிய சக்தி கிடைக்க காரணமாகி விட்டீர்கள்'' என அவரை புகழ்ந்தான்.
...
துரியோதனனை சகுனி பிரயோபவேசத்தில் இருந்து மீட்ட செய்தி பாண்டவரை அடைந்த போது பீமன் வாய்விட்டுச் சிரித்தான். நகுலன் அதை உணர்ந்து கேட்டான்.
''பீமண்ணா... எதற்கு கேலிச் சிரிப்பு?''
''இப்படியா சாகிறேன் சாகிறேன் என சொல்லி விட்டு ஒருவன் வாழ முற்படுவான்?''
''சகுனி இருக்கும்வரை துரியோதனனை அவன் விருப்பப்படி நடக்க விட மாட்டான் என்பது தான் தெரியுமே?''
''அதற்காக இப்படியா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவன் இனி நம் முகத்திலும் விழிப்பான்?''
''உன் கேள்வி அறவழி நடப்பவர்களுக்கே... துரியோதனாதியர்கள் சகலத்தையும் உதிர்த்தவர்களாயிற்றே?''
''அது மட்டுமல்ல... மாய தைத்யர்களை சகுனி நாடியுள்ளான். அவர்கள் தான் துரியோதனனை தடுத்து நிறுத்தியுள்ளனர்''
''தைத்யர்கள் அசுரர்களுக்கு நிகரான ஜால வித்தைக்காரர்கள்''
'யாராக இருந்தால் என்ன... நாம் நம் பாதையில் பயணித்து வனவாச காலத்தை நல்ல விதமாய் முடிப்போம். நமக்கு கிருஷ்ணன் துணை உள்ளது'' என்று தர்மன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். மிகவும் களைப்பாக இருக்கவும் உறங்கச் சென்றான். அதைக் கண்டு திரவுபதி ஆச்சரியப்பட்டாள். தர்மனின் உறக்கத்தில் ஒரு கனவு! அந்த கனவில் பாண்டவர்கள் அப்போதிருக்கும் துவதை வனத்தில் வாழ்ந்து வரும் மிருக ஜாதிகள் கூட்டமாக தர்மன் முன் நின்றன. அவைகளில் யானை பேசவும் செய்தது.
''தர்மராஜனே! நீயும் உன் சகோதரர்களும் வனத்துக்கு வந்த நாள் முதலாகவே நாங்கள் அழியத் தொடங்கி விட்டோம். உங்களுக்காக கவுரவப்படை வனத்திற்குள் நுழையும் என்றோ, அப்படி நுழைந்தவர்கள் எங்களை வேட்டையாடிக் கொல்வார்கள் என்றோ நாங்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.
ஆயிரக்கணக்கில் இருந்த எண்ணிக்கை இப்போது நுாறுக்கும் கீழ் சென்று விட்டது. எங்கள் இனம் வாழ்ந்திட நீயும் உன் சகோதரர்களும் இந்த வனத்தை விட்டு செல்ல வேண்டும் என விரும்புகிறோம். எங்கள் விருப்பத்தை ஈடேற்றுவாயா?'' என்று கேட்டது யானை. அதை மற்ற மிருகங்கள் ஆமோதித்து கோஷமிட்டன. அடுத்த நொடியே கனவு கலைந்து எழுந்தான்.
திரவுபதி''என்னாயிற்று சுவாமி. ஏதும் கனவோ'' என்று கேட்டாள்.
''ஆம். மிருகங்கள் கூட்டமாய் திரண்டு வந்து நீங்கள் இந்த வனத்தை விட்டு போய் விடுங்கள் என்றால் அது விசித்திரம் தானே?''
''மிருகங்கள் பேசியதா''
''ஆம். மிருகங்கள் சார்பில் ஒரு யானை பேசியது. நாம் இங்கு இருப்பதாலும், நமக்காக கவுரவர்கள் வனம் புகுந்ததாலும் மிருக இனம் வேட்டையாடப்பட்டு ஆயிரங்களில் இருந்த மிருகங்கள் நுாற்றுக்கணக்காகி விட்டதாம். மிச்சமிருக்கும் மிருகங்கள் இனியும் வாழ வேண்டுமென்றால் நாம் வனம் நீங்க வேண்டுமாம்''
''ஹூம்... இப்படிக் கூட ஒரு கனவா?''
''கனவு தான். ஆனால் அதை அலட்சியம் செய்து விட முடியாது''
''அப்படியானால் என்ன செய்வதாக உத்தேசம்''
''நாம் அந்த மிருகங்களின் விருப்பப்படி வனத்தை விட்டு விலகுவோம்''
''கனவு என்பது எண்ணங்களின் கசிவு. அது ஒரு பொய்யான தோற்றம். அதை நிஜம் போல கருதுவது சரியா?''
''நல்ல கேள்வி. பொதுவில் எனக்கு கனவு என ஒன்று வந்ததேயில்லை. அப்படிப்பட்ட எனக்கும் ஒரு கனவு இன்று வந்துள்ளது இதை எப்படி எண்ணக்கசிவு என்று கூற முடியும்?''
''நிஜம் என்று மட்டும் எப்படி கருத முடியும்?''
''காட்டில் உலா வரும் போது நானே சமீபத்தில் இந்த நிஜத்தை உணர்ந்தேன். கூட்டம் கூட்டமாய் திரிந்த யானைகளை இப்போது அங்கும் இங்குமாக தான் பார்க்கிறேன். மான்கள் முதல் குரங்குகள் வரை சகலத்தையும் நான் வனத்துக்குள் நுழைந்த போது பார்த்தது போல இப்போது பார்க்க முடியவில்லை''
''திரவுபதியும் தர்மனும் பேசிக் கொண்ட இத்தருணத்தில் மற்ற சகோதரர்களும் வந்து விட திரவுபதி தர்மனின் கனவைக் கூறி முடித்தாள். தர்மனின் விருப்பத்தையும் கூறி முடித்த நிலையில் அனைவரும் வனம் விட்டு விலகிச் செல்ல சம்மதித்தனர். அவ்வாறே நீங்கியவர்கள் அடுத்து காலை வைத்தது 'காம்யக வனம்' என்னும் வனத்தில்...
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்