sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 32

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 32

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 32

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 32


ADDED : ஆக 21, 2023 03:17 PM

Google News

ADDED : ஆக 21, 2023 03:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அணு முதல் அண்டம் வரை எல்லாம் நானே

நதிக்கரையில் துர்வாசரின் ஐந்தாயிரம் சீடர்களும் ஒருசேர ஏப்பம் விட்ட சப்தம் அந்த பகுதி முழுவதும் கேட்டது. அவர்கள் தங்களின் வயிற்றைத் தொட்டு தடவிப் பார்த்தும் கொண்டனர். பசி உணர்வு என்பதே இல்லாதபடி ஒரு பூரண நிறைவு. மனதிலும் ஒரு இனம்புரியாத அமைதி.

துர்வாசர் அந்த நிறைவையும், அமைதியையும் எண்ணி ஆச்சரியப்பட்டார். அவர் முகத்தில் சிந்தனைக் கோடுகள். அருகில் இருந்த பிரதான சீடன் ஒருவன், ''குருநாதா... இந்த நதிக்கு விசேஷ சக்தி இருக்கிறதா... பசியும் களைப்பும் பறந்து விட்டதே!'' எனக் கேட்டான்.

''ஆம்... எனக்கும் அதே உணர்வு தான்! அது மட்டுமல்ல... என் மனதில் இனம் புரியாத அமைதி, தெளிவு''

''நம் சீடர்களைப் பாருங்கள். அவர்களின் முகங்களிலும் ஒரு தெளிவு''

துர்வாசரும் தன் சீடர்களை நதிக்கரையிலுள்ள மேட்டின் மீது நின்று பார்த்தார். அவர் பார்க்கும் போது சிலர் சாப்பிட்ட மயக்கத்தால் கொட்டாவி விட்டனர். சிலரோ மரத்தடிகளில் துாங்கவும் தொடங்கி விட்டனர்.

''குருவே... இந்த நதி சாதாரண நதியல்ல. இதற்கு விசேஷ சக்தி இருக்கிறது. அதனால் தான் எல்லோரிடமும் ஒரு நிறைவு. சிலருக்கு உறக்கமே வந்து விட்டது பாருங்கள்''

''உண்மை தான்''

கங்கையில் மூழ்கினால் தான் உடல், உள்ளம் இரண்டும் பாவம் விலகி லேசாகும். இந்த சித்ரா நதிக்கும் கங்கையின் சக்தியோ இல்லை அதன் சங்கமமோ இருக்க வேண்டும்''

''நாம் இப்போது பாண்டவர் குடிலுக்குச் சென்று விருந்தை உண்ண வேண்டுமே. என்ன செய்யப் போகிறோம்''

''என்ன செய்யப் போகிறோமா... இப்போது வயிறும், மனமும் இருக்கும் நிலையில் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாளை வருவதாக தகவல் அளித்து விடலாமா''

''இப்போது அங்கே பிரசாதம் தயாராக இருக்குமே. நாளை வரை அது கெடாமல் இருக்குமா''

''அந்த உணவை ஒரு முகூர்த்த நேரத்திற்குள் உண்ண வேண்டுமே. காலம் தப்பினால் தோஷம் உண்டாகும். அதன் துாய்மை போய் அந்த உணவும் அற்ப உயிர்களுக்கு என்றாகி விடும்''

''அப்படியானால் அது பாண்டவர்களுக்கு ஏமாற்றமாகி அவர்கள் வருந்தும் நிலை தோன்றி விடுமே''

''ஆம். நாம் இப்போது இக்கட்டான நிலையில் இருக்கிறோம். விருந்துக்கு வருவதாக சொல்லி விட்டு சொல்லாமல் விடுவது என்பதோ அவமதிப்பது போன்றது. மகாபாவம்''

''இப்போது என்ன செய்யப் போகிறோம் குருவே... தாங்கள் துரியோதனனுக்கு வேறு வாக்கு கொடுத்துள்ளீர்கள்'' சீடர்களின் பேச்சு துர்வாசரை சிந்திக்கச் செய்தது. அவரும் இந்நிலை ஏன் ஏற்பட்டது என ஞான திருஷ்டியில் பார்க்கலானார்.

அவரது மனக்கண்ணில் கிருஷ்ணன் தெரிந்தான். அவன் குழலிசைக்க பாண்டவர்கள் மட்டுமில்லாமல் பறவைகள், விலங்குகள், செடி, கொடிகள் என எல்லாம் சொக்கிக் கிடப்பது தெரிந்தது. மானசீகமாய் துர்வாசரும், ''கிருஷ்ணா... எல்லாம் உன் லீலை தானா...உன் திருப்தியும், மகிழ்வும் தான் நாங்கள் மட்டுமின்றி சகல உயிர்களும் மகிழ்ச்சியுடன் இருக்க காரணமா'' என முணுமுணுத்தபடி கைகளைக் கூப்பி, ''கிருஷ்ண... கிருஷ்ண...'' என்று உருகத் தொடங்கினார். சீடர்களும் தங்களை மறந்து கிருஷ்ண நாமத்தை சொல்லத் தொடங்கினர்.

...

இதற்கிடையில் காட்டிலுள்ள குடிலில் கிருஷ்ணன் தன் வேணு கானத்தை நிறுத்தி விட்டு பாண்டவர்கள், திரவுபதியை பார்த்தான். திரவுபதி இரண்டு மான்களுக்கு நடுவில் அவற்றை அணைத்தபடி நின்றிருந்தாள். அருகிலுள்ள மரங்களில் எல்லாம் இலைகளே தெரியாதபடி பறவைகள் அமர்ந்திருந்தன. செடிகளில் மொட்டுக்கள் எல்லாம் மலர்ந்திருந்தன.

அப்படி ஒரு சொக்கிப் போன சூழல்!

அவர்கள் எல்லாருமே கூட மெல்ல உணர்வுநிலைக்கு வந்து தாங்கள் இருப்பது காம்யக வனத்தில் என்பதை அறியலாயினர்.

''கிருஷ்ணா... மெய் மறக்கச் செய்து விட்டாய். உன் குழலிசைக்கு இப்படி ஒரு சக்தியா'' என சகாதேவன் கைகூப்பியபடி கேட்டான்.

''கிருஷ்ணா ஏன் இசையை நிறுத்தினாய். தொடர்ந்திடு. நாங்கள் மெய் மறந்திருக்கவே விரும்புகிறோம்'' என்றான் நகுலன்.

''சரிதான். துர்வாசர் வரப் போவது தெரியாமல் நான் தான் விளையாட்டாக இசைத்தேன். நீங்களும் அவரை மறந்து மயங்கி விட்டீர்களே'' என கிருஷ்ணன் கேட்டபோது முன்பு வந்த துர்வாசரின் சீடர்கள் அப்போது அவர்களின் எதிரில் பணிவாக வணங்கி நின்றனர்.

அதைக் கண்டதும் பாண்டவர்களுக்கு உதறல் ஏற்பட்டது. ''பாண்டவர்களே... நாங்கள் துர்வாசரிடம் இருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறோம்'' என பணிவுடன் கூறினர். அவர்களின் கண்களுக்கு கிருஷ்ணன் புலனாகவில்லை.

''என்ன செய்தி... அவருக்கான விருந்து குறித்து தானே'' என்று பீமன் முன் சென்று கேட்டான்.

''ஆம்... ஆனால் அவர் விருந்துண்ணும் நிலையில் இல்லை. இனம் புரியாத பசியற்ற நிலையுடன், வயிறு நிரம்ப உண்டால் உண்டாகும் களைப்பும் ஏற்பட்டு விட்டது. அதனால் அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பி ஓய்வெடுக்க உத்தேசித்துள்ளார்.

இப்போது விருந்துண்ண இயலாத நிலையில் இருப்பதால் தயாராக உள்ள உணவை எல்லாம் கிருஷ்ணார்ப்பணம் செய்யச் சொல்லி உத்தரவு.

அதே சமயம் விருந்தை உண்டால் ஏற்படும் நிறைவும் மகிழ்வும் உண்டாகி விட்டதால் தன் பூரண நல்லாசிகளை உங்களுக்கு அளித்ததையும் கூறச் சொன்னார். இதற்காக வருந்தாமல் அருள் கூர்ந்து பொறுத்தருள வேண்டியுள்ளார்''

இப்படி கூறிவிட்டு பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றனர். பாண்டவர் விக்கித்துப் போய் நிற்க, கிருஷ்ணனின் கால்களில் திரவுபதி விழுந்தாள். கிருஷ்ணன் அவளை எழுப்பி, ''அக்னிப்புஷ்பம் நீ... இப்படியா மானிடன் காலில் விழுவது; இப்போது என்னாகி விட்டது என்று இந்த நெகிழ்ச்சி''

கிருஷ்ணன் கேட்ட வேகத்தில் அவள் ''அண்ணா... நீயா மானிடன்? எங்களை எப்போதும் காத்து நிற்கும் பரமபுருஷன் அல்லவா நீ... எத்தனை பெரிய ஆபத்தில் இருந்து காத்திருக்கிறாய்? இன்று இங்கே இருக்கும் அட்சய பாத்திரத்தைக் கொண்டு நீ துர்வாசருக்கும், எங்களுக்கும் மட்டுமல்ல... உலகுக்கே ஒரு செய்தியை கூறியுள்ளாய். கண்ணுக்குப் புலனாகாத அணு முதல் அண்டம் வரை எல்லாம் நானே என உணர்த்தி விட்டாயே''

பரமனின் மூச்சே வேதம். அவன் அசைவே உலக இயக்கம் என்ற ஞானியர் கருத்தை நாங்கள் இன்று நிதர்சனமாக உணர்ந்தோம். அந்த பரமனே நீ தான் என்றும் அறிந்தோம். உன்னை நாங்கள் என்னவென்று சொல்லித் துதிப்போம்?'' என திரவுபதி கண்ணீர் பெருக்கினாள். பாண்டவர் ஐவரும் கிருஷ்ணன் முன் மண்டியிட்டு நின்றனர்.

...

துர்வாசரால் வரவிருந்த துன்பம் கிருஷ்ண லீலையால் நீங்கிய நிலையில் சிந்து தேசத்தின் அதிபதியான ஜெயத்ரதன் என்பவனால் பாண்டவருக்கு அடுத்த கட்ட சோதனை ஏற்பட்டது. காம்யக வனத்திற்குள் வேட்டையாட நுழைந்த ஜெயத்ரதன் அருவியில் நீராடிய திரவுபதியைக் காண நேரிட்டது. திரவுபதியின் அழகில் மயங்கிய அவன், ''அப்சர சுந்தரிகளை விட அழகான இவள் யார் என்பதையும் அவள் வரலாற்றையும் அறிந்து வா. நான் அவளை மணக்க விரும்புகிறேன்'' என்று தன் வலதுகையாக செயல்படும் கோடிகாஸ்யனிடம் தெரிவித்தான்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்

98947 23450






      Dinamalar
      Follow us