ADDED : ஜூலை 14, 2023 11:41 AM

ஊர்மிளன்
முத்கலரை வணங்கி நின்ற துர்வாசர் அவரை போற்றவும் தொடங்கினார்.
'முத்கல மகரிஷி! உங்களை மனதார வணங்குகிறேன். உங்களைப் பற்றி கேள்விப்பட்ட போது நம்ப முடியவில்லை. மனிதன் சில காலங்களுக்கே புலன்களை அடக்க இயலும் என்பது என் கருத்து. ஆனால் நீங்கள் அதை உடைத்து விட்டீர்கள்.
உடல் இன்பங்களுக்கு நீங்கள் துளியும் இடம் தருவதில்லை என்பதை உணர்கிறேன். உடல் சார்ந்த துன்பங்களைக் கூட பொருட்படுத்தவில்லை. முனிவர்களும், ரிஷிகளும் எல்லா காலத்திலும் அப்படியே இருக்க முடியாது. ஆனால் நீங்கள் இருந்து வருகிறீர்கள். ரிஷிகள், முனிகள், தவசிகள் என சகலருக்கும் தலைமை ஏற்று வழிகாட்டவும் தகுதி படைத்தவராகிறீர்கள். உமக்கு சொர்க்கம் சித்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வரத்தை என் தபோசக்தியை எல்லாம் திரட்டி உங்களுக்கு அளிக்கிறேன்.
இனியும் நீங்கள் உஞ்சவிருத்தி செய்து வாழத் தேவையில்லை. சொர்க்கம் செல்வீராக'' என வரமளித்தார் துர்வாசர். அளித்த கையோடு மறைந்தும் போனார்.
வரம் உடனே செயல்பட தொடங்கியது. விண்மீது அன்னரத விமானம் கிண்கிணி மணிகள் ஒலித்திட, மிகுந்த ஒளியோடும் சொர்க்க தேவ துாதனான ஊர்மிளன் என்பவனுடன் முத்கலர் முன் வந்து நின்றது. ஊர்மிளன் ரதத்தில் இருந்து குதித்து இறங்கினான். முத்கலர்
முன் வந்து பணிவோடு வணங்கியபடி, ''மகரிஷியே... ரதத்தில் ஏறுங்கள். உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் கடமை எனக்கு விதிக்கப்பட்டுள்ளது'' என்றான். முத்கலரோ புன்னகைத்தபடி, '' நீ யாரப்பா சொல்'' என்றார்.
''என் பெயர் ஊர்மிளன். சொர்க்கத்தை நிர்வகிப்பவன். தேவேந்திரன் என் தலைவன்'' என்றான்.
''மகிழ்ச்சி. நான் சொர்க்கம் பற்றி எல்லாம் சிந்தித்ததே இல்லை.
இந்த பூ உலகிலேயே ஒரு நலம் மிக்க வாழ்வை வாழ்ந்து கொண்டு
தானிருக்கிறேன். துர்வாசர் என் மீதுள்ள பிரியத்தால் சொர்க்க வரம் அளித்து அதனால் நீயும் என்னை அழைத்துச் செல்ல வந்து விட்டாய். மகிழ்ச்சி. அதே வேளை சொர்க்கம் பற்றி அறியாமல் நான் வருவது சரியல்ல. எனவே சொர்க்கம் எப்படிப்பட்டது என விளக்குவாயா என்ற முத்கலரை ஆச்சரியமுடன் பார்த்தான் ஊர்மிளன்.
''என்ன பார்க்கிறாய்''
''சொர்க்கம் பற்றி சிந்தித்ததில்லையா''
''இல்லை''
''இறப்புக்கு பிறகான இலக்கே அது தானே''
''நான் அவ்வாறில்லை''
''சொர்க்கம் பற்றி கேட்டுக் கொள்ளுங்கள்.
நான் ஒருமுறை தான் சொல்வேன். இரண்டாம் முறை சொல்ல
என்னால் முடியாது''
''அப்படியே ஆகட்டும் சொல்''
''மகரிஷி... சொர்க்கலோகமே துன்பங்களின் சாயை துளியும் இல்லாத ஒரு உலகம். இந்த உலகிற்குள் பாவிகளோ, நாத்திகர்களோ, புண்ணிய பலம் இல்லாதவர்களோ நுழைய முடியாது. தர்மம் புரிந்தவர்கள், விரதம் இருந்தவர்கள், புலன்களை அடக்கியவர்கள், யாத்திரையாக சென்று புனித தீர்த்தங்களில் நீராடியவர்கள், குருவருள் பெற்றவர்களாலேயே சொர்க்கத்திற்குள் செல்ல முடியும்.
இந்த லோகத்தில் தான் முப்பத்தி மூவாயிரம் யோசனை அளவிலான பொன்மயமான மேரு என்ற மலை இருக்கிறது. இந்த மலையில் நீரூற்றுகள், ஓடைகள், அருவிகள், குளங்கள், ஆறுகள் என சகலமும் இருக்கின்றன. இந்த லோகத்தில் ஒளிக்கு மட்டுமே இடம். வெப்பமோ, இருளோ எங்கும் இல்லை. இதமான நிழல் மட்டும் உண்டு.
அதே போல எல்லா வகை கனிமரங்களும், பருவ காலம் என்கிற கட்டுப்பாடு இன்றி ஆண்டு முழுவதும் கனிகளைத் தருவதாக உள்ளன. இந்த மரங்களில் அன்னத்தில் தொடங்கி சக்கரவாகம் உள்ளிட்ட சகல பறவைகளும் வாழ்கின்றன. துஷ்ட மிருகங்களுக்கோ, மாமிச பட்சிணிகளுக்கோ இடமில்லை. மான்களும், பசுக்களும், மயில்களும், குயில்களும் அச்சம் இன்றி எல்லோரிடமும் வந்து செல்லும்.
இந்த லோகத்தில் பசி, தாகம் எடுக்காது. அதனால் வியர்வை, மலம், மூத்திரத்துக்கு இடமில்லை. காலகதி இங்கு வருபவர்களுக்கு உடம்பளவில் நின்று விடும். எவ்வளவு உண்டாலும் அது உணர்வாக மட்டுமே இருக்கும். எனவே அவர்களுக்கு நரை திரை மூப்பு ஏற்படாது. அவர்கள் உடலும் ஒளி மிக்க தேவர்களின் உடல் போல் ஆகி விடும்.
சொர்க்கவாசிகள் நடந்தும் செல்ல முடியும் பறந்தும் செல்ல முடியும். தோன்றுதல் மறைதலும் விருப்பம் போல நிகழும். இங்கு பெரியவர் சிறியவர் பேதமும் கிடையாது. எனவே எவரும் எவரையும் வணங்கத் தேவையே இல்லை. செல்வந்தர், ஏழை என்ற பாகுபாட்டிற்கும் இங்கு இடமில்லை. எல்லோரும் இங்கு சமமானவர்களே! இங்கு அழுக்கிற்கோ, புழுதிக்கோ இடமில்லை. துர்கந்தம் எனப்படும் நாற்றத்திற்கும் இடமில்லை. இங்கே மனம் எதை எல்லாம் விரும்புகிறதோ அவைகள் தடைகள் இன்றி கிடைத்து விடும். ஒன்றை அனுபவிக்க கால அளவோ, தடைகளோ துளியுமில்லை. சுருக்கமாய் சொல்வதானால் திரும்பிய பக்கமெல்லாம் இன்பம் இன்பம் இன்பம் மட்டுமே! என்று ஊர்மிளன் சொர்க்கத்துக்கான விளக்கத்தை கொடுத்து முடித்தான். அதைக் கேட்ட முத்கலர் முகத்தில் பெரிய மகிழ்வோ திருப்தியோ தென்படவில்லை. மாறாக அவர் முகத்தில் சலனம்.
''என்ன மகரிஷி... எதனால் இந்த சலனம்''
''இப்படி இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகில் எப்படி எல்லோரும் இன்பமாக இருக்கிறார்கள்''
''இது என்ன கேள்வி... அதற்காக தானே சொர்க்கம் புகுந்துள்ளனர்?''
''இல்லை. இன்பம் என்பது இனிப்பை போன்றது. அதை அளவாகவே உண்ண முடியும். மிகுந்தால் திகட்டி விடும். தேன் கிண்ணத்தில் விழுந்து மூழ்கி விட்ட தேனீ போலாகி விடுவோம்''
''யாரும் என்னிடம் இப்படிச் சொன்னதில்லை. திகட்டத் திகட்ட இன்பத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதே வேளை அவர்களுக்கான சொர்க்க காலம் முடியவும் அவர்கள் தங்களின் மீதமுள்ள வினைப்பாட்டிற்கேற்ப பூமியில் திரும்பவும் இன்ப துன்பங்கள் நிரம்பிய ஒரு வாழ்வை வாழ்வதற்காக பிறந்து விடுகிறார்கள்''
''அப்படியா... சொர்க்கம் என்பது பிறவித்தளை இல்லாத ஒரு இடம் கிடையாதா?''
''சொர்க்கமும் சரி, நரகமும் சரி... கால வரையறை அங்கு உள்ளவர்களுக்கு உண்டு''
''ஹும்... எல்லாமே தற்காலிகம் தானா... நிரந்தரம் கிடையாதா''
''ஆம்... அதுவே சொர்க்க நரக லட்சணங்கள்''
''அப்படியானால் அந்த சொர்க்க வாழ்வு எனக்கு வேண்டாம். மீண்டும் பிறப்பு என்பதே இல்லாத, நித்ய அமைதியும், இன்பமும் கொண்ட லோகம் ஏதுமில்லையா''
''இருக்கிறது. ஆனால் அங்கு செல்வது எளிதன்று''
''அந்த லோகம் எங்குள்ளது? அதன் பெயர்''
''பிரம்ம லோகத்திற்கு மேல் வைகுண்ட லோகம் உள்ளது. இதுவே நித்ய அமைதிக்கும் திகட்டாத இன்பத்திற்குமான லோகமாகும்''
''இங்கு செல்லும் வழி''
''தவமே! காலத்திற்கு கட்டுப்பட்ட தவமல்ல... கட்டுப்படாத தவம். நீர் உஞ்ச விருத்தியை கூட நிறுத்திவிட்டு தவத்தில் ஆழ்ந்தால் அந்த தவமும் பல்லாயிரம் ஆண்டுகள் என்று நீண்டால் உங்களுக்கு அந்த நாரணன் இருப்பிடம் கிடைக்க கூடும்''
''நல்லது. உன்னால் நான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டேன்.
மகிழ்ச்சி. நன்றி''
முத்கலர் ஊர்மிளனுக்கு விடை கொடுத்தார். முத்கலரின் இந்த முடிவை அறிந்த பாண்டவர்களும் வியந்தனர்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்