sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் 2 - 19

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் 2 - 19

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் 2 - 19


ADDED : மார் 31, 2015 11:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2015 11:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த வேடன், தமயந்தியை விழுங்க முனைந்த பாம்பை, தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி கொன்றான். தமயந்தியும் பிழைத்தாள்.

அவளது அழகைக் கண்ட வேடன் மயங்கிப் போனான். அவன் பார்வையே தவறாக இருப்பதை தமயந்தி புரிந்து கொண்டாள்.

''வேடுவனே! என்னை அப்படி பார்க்காதே.... என்னைக் காப்பாற்றிய உனக்கு கோடி வணக்கங்கள். எனக்கு முடிந்தால் அபயம் கொடு. இல்லாவிட்டால் விலகிச் செல். மாறாக, தவறான எண்ணத்துடன் பார்க்காதே... இது பாவம்!'' என்றாள்.

அவன் காதில் அவளின் பேச்சு விழவே இல்லை. தமயந்தி, கைகளைக் கூப்பியபடி,''வேடுவனே! நீ எனக்கு உயிர் தந்து தந்தையாகி விட்டவன். உன் மகள் போன்ற என்னிடம் தவறாக நடக்காதே...'' என்று அவனுக்கு தர்மத்தை எடுத்துச் சொன்னாள்.

ஆனால், அவன் அதைக் கேட்கவே இல்லை. அவளை அணைக்க முயன்றான். இதுவரை பரிதவிப்புடன் பேசிய தமயந்தி, அப்படியே ஆவேசம் கொண்டாள்.

''அடேய் நில்! என்னை யாரென்று நினைத்தாய்? தேவர்கள் என்னை தேவியாக்கிக் கொள்ள எண்ணி வந்த போதும், மனதில் வரித்த

மணாளனையே கணவனாக எண்ணி அவரையே மணம் செய்து கொண்டவள். அவரையன்றி வேறொருவரை கற்பனையிலும் நான் எண்ணியதில்லை. தேவனுக்கு ஒப்பான நளச்சக்கரவர்த்தியின் அப்பழுக்கு இல்லாத பதிவிரதை என்பது சத்தியமானால், எந்த காமாக்னியால் என்னைத் தீண்ட எண்ணுகிறாயோ, அதனாலேயே நீ அழிந்து போவாய்'' என்று சபித்தாள்.

அங்கே அதிசயம் நிகழத் தொடங்கியது. அந்த வேடன் மேல் விண்ணில் இருந்து ஒரு மின்னல் அவன் மீது பாய்ந்தது. அதில் அவன் கருகிச் சாம்பலாகிப் போனான்.

தமயந்தி அடுத்த நொடி ஆகாயத்தைப் பார்த்து வணங்கியபடி, ''தர்மதேவனுக்கு என் நன்றிகள்! இந்த வனத்தில் எனக்கு நீங்கள் என் பதியை அடையும் வழியையும் காட்டுவீர்களாக...'' என்று பிரார்த்தனை செய்த படி நடந்தாள்.

அதுவோ மிகக் கொடிய வனம். கல்லும், முள்ளும் அன்னம் போன்ற தமயந்தியின் கால்களை வருத்தின. அவள் ஆடை பல

இடங்களில் கிழிந்திருந்தது. நல்ல வேளையாக, சேதி நாட்டுக்குப் போகும் வணிகர்கள் கூட்டமாகச் சென்றனர். அவர்களோடு சேர்ந்து கொண்டாள். நளன் தன் கண்ணில் படமாட்டானா என்று தத்தளித்தாள்.

அந்த வணிகர்கள் ஒரு காட்டாற்றின் கரையில் இரவுப் பொழுதைக் கழிக்க, கூடாரம் அமைத்து தங்கினர். ஆனால், அன்று இரவு அவர்களுக்கு யானை வடிவில் சோதனை காத்திருந்தது. கூட்டமாக வந்த யானைகள் வணிகர்களின் கூடாரத்தைக் கிழித்து வீசியதோடு, அவர்களை மிதித்துக் கொன்றது. சிலர் தப்பி ஓடினர். தமயந்தியும் ஓடினாள்.

ஓரிடத்தில் தபோவனம் அவளுக்குத் தென்பட்டது. அதில் மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். தமயந்திக்கு அடைக்கலம் கொடுத்து, உண்பதற்கு கனிகளைக் கொடுத்தனர். காலமெல்லாம் இவர்களோடு இருக்கலாமா என்று எண்ணினாள்.

காரணம்....?

அந்த தபோவனத்தின் அழகு. ஒருபுறம் பூத்துக் குலுங்கும் வாச மலர்கள், மறுபுறம் பழ மரங்கள், இன்னொரு புறம் அன்னங்கள் தவழும் பொய்கை, மயில்கள், மான்கள் கூடித் திரியும் பசுமைப் புல்வெளி..

அந்த நாளில் தமயந்தி, அரண்மனையின் அந்தப்புரத்தில் வாழ்ந்த காலம் நினைவுக்கு வந்தது. இந்நிலையில், அங்குள்ள மகரிஷிகள் அவள் யார் என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு ஆசியளித்தனர்.

''அம்மா! இது சோதனையான காலம்! விரைவில் இந்த காலம் கழிந்து நல்ல காலம் பிறக்கும். உன் கணவனோடு சேர்ந்து நல்வாழ்வு பெறுவாய். நளன் மீண்டும் மன்னராக ஆட்சி நடத்துவான். நம்பிக்கையோடு இரு,'' என்றனர்.

பொழுது புலர்ந்தது. வனத்தில் தமயந்தி மட்டும் ஓரிடத்தில் கிடக்க, தபோவனம், மகரிஷிகள், மலர்ச்செடிகள் அனைத்தும் காணாமல் போயிருந்தன.

'தான் கண்டது கனவு என தெரிந்து கொண்ட தமயந்தி அங்கிருந்து நடந்தாள். கண்டது கனவு என்றாலும், எல்லாம் நன்மையாக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவழியாக அவள் சேதி நாட்டை அடைந்தாள். வளம் மிகுந்த அந்த நாட்டில், எல்லோரும் நல்ல ஆடை உடுத்தி மங்களகரமாக இருக்க, தமயந்தி மட்டும் ஆடை கிழிந்த கோலத்தில் பைத்தியம் போல இருந்தாள். தெருவில் விளையாடும் பிள்ளைகள் கூட அவளைச் சுற்றி வந்து கற்களை வீசி துன்புறுத்தத் தொடங்கினர்.

தமயந்தி இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

பிரஹஸ்தவர் நளோபாக்யானத்தை இப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் விட்டு விட்டு, பாண்டவர்களைப் பார்த்தார். திரவுபதியின்

கண்களில் கண்ணீர் பீறிட்டு வந்தது. மற்றவர்கள் முகத்திலும் கலக்கம் தெரிந்தது.

தர்மன் திரவுபதியின் கண்ணீரைத் துடைத்தவனாக, ''அழாதே! குலமகள் அழக்கூடாது. எதையும் தாங்க வேண்டும்!'' - என்றான்.

''தமயந்தியின் நிலை என்னை கலக்கி விட்டது பிரபு! நளனை விரும்பி மணந்ததற்கு 12 ஆண்டுக்கு பிறகு, அவளுக்கு இப்படி ஒரு இழிவா? கலிபுருஷன் என்பவன் இத்தனை இதயம் இல்லாதவனா... ச்சே!''- என்று அவளிடம் சலிப்பும் வெளிப்பட்டது.

''முனிவரே! நளோபாக்யானத்தை நீங்கள் பாதி கூட கூறவில்லை. ஆனால், இதற்கே நாங்கள் கலங்கி விட்டோம். இன்னமும் சம்பவங்கள் உள்ளதா! இல்லை.. தமயந்தி சேதிநாட்டில் கண்டு கொண்டாளா?'' -என்று கேட்டான் பீமன்.

''பீமா...இனி தான் பெரிய சோதனை நடந்தது. பாவம் நளன். தமயந்தியைப் பொறுத்தவரையில் அவன் நினைத்தது ஒன்று... நடந்தது வேறொன்று....''

''வேகமாக கூறுங்கள். உருக்கமான நள வரலாறு எங்களுக்கு ஒரு பாடமாகட்டும்....'' என்றான் நகுலன்.

''சொல்கிறேன்... சேதி நாட்டு வீதியில், தமயந்திக்கு தற்காலிகமான ஒரு விடிவு காலம் பிறந்தது.

சேதி நாட்டு மன்னன் சுபாகுவின் மனைவி பல்லக்கில் வந்து கொண்டிருந்தாள். அவளின் பார்வை தமயந்தி மீது பட்டது. தமயந்தியும்

ஒரு பட்டத்தரசி தானே? அதற்கான லட்சணம் இல்லாமல் போகுமா என்ன?

ராணியின் மனம் தமயந்தியைக் கண்டு உருகியது. தன்னுடன் அழைத்துச் சென்று நடந்ததையெல்லாம் விசாரித்தாள். ஆனால்,

தமயந்தி ராணியிடம் தான் விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகள் என்றோ, நிடத நாட்டு மன்னன் நளனின் மனைவி என்றோ உண்மையைச் சொல்லவில்லை. கணவனைத் தேடி அலையும் அபலை என்று மட்டும் கூறினாள்.

அவளது தன்மானம், அங்கே முழுமையாக அறிமுகம் செய்து கொள்ளத் தடை செய்தது.

ராணி தமயந்தியை அடைக்கலமாக ஏற்றதோடு, தன் மகள் சுனந்தாவின் தோழியாகவும் இருக்கும்படி கூறினாள்.

தமயந்தியும் சம்மதித்தாள். இருந்தாலும், சில நிபந்தனைகளை விதித்தாள். அவை சற்று விசித்திரமானவை.....!

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us