sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 10

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 10

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 10

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 10


ADDED : அக் 20, 2023 05:21 PM

Google News

ADDED : அக் 20, 2023 05:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரிசடை என்னும் தாய்

தன் தந்தையான விபீஷணனின் நல்ல குணங்களைக் கண்டு வியந்தாள் திரிசடை. அண்ணன் ராவணனின் தவறைக் கண்டித்து குரல் கொடுத்தவன் விபீஷணன். இத்தகையவனுக்கு மகளாகப் பிறந்தததை எண்ணி திரிசடை பெருமை கொண்டாள்.

பிறன் மனை விரும்புவது அரக்கரின் குணம் என இறுமாப்புடன் இருந்தான் ராவணன். சீதைக்கு முன்பிருந்தே கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கவர்ந்து அந்தப்புரத்தில் அடைத்தான். அப்போதெல்லாம் அண்ணனின் தகாத செயலை விபீஷணன் கண்டிக்கவே செய்தான்.

திரிசடைக்கு வியப்பு என்னவென்றால் அரக்கியான கேகசிக்குப் பிறந்த ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை வரிசையில் தன் தந்தையார் மட்டும் எப்படி நற்குணம் பெற்றார் என்பதுதான். கல்லுக்குள் ஈரம் என்பது இதுதான் போலிருக்கு?

நற்குணமுள்ள தந்தைக்கு துணைநிற்க வேண்டும் எனக் கருதினாள் திரிசடை.

அதே சமயம் ராவணனை பயமுறுத்தியும், மாயாஜாலம் செய்தும் சீதையின் மனம் மாறவில்லை. அவள் போக்கிலேயே போய் மனதை மாற்ற ஒரு பணிப்பெண்ணை நியமிக்க விரும்பினான் ராவணன். அதற்கானவள் தன் தம்பி மகள் திரிசடை என தேர்வு செய்தான்.

அதற்கு திரிசடையும் சம்மதித்தாள். இந்த வாய்ப்பின் மூலம் தந்தையின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என நம்பினாள். 'ராமன் வருவான்; ராவணனை வீழ்த்துவான்' என்ற நம்பிக்கையை சீதைக்கு ஏற்படுத்த வேண்டும் என எண்ணினாள். அசோகவனத்தில் பணிப்பெண்ணாக இருப்பதை தந்தை விபீஷணன் விரும்பவில்லை என்பது அவளுக்கு புரிந்தது. ராவணனுக்கு எதிரான திட்டங்களை தந்தையிடம் விவரித்தாள். ஆனால் அண்ணன் தவறை உணர்ந்து சீதையை ஒப்படைப்பதோடு ராமனிடம் சரணாகதி அடைய வேண்டும் என எதிர்பார்த்தான் விபீஷணன்.

அசோக வனத்தில் இருந்த சீதை தன்னை நோக்கி வரும் பெண் முற்றிலும் மாறுபட்டவளாக இருப்பது கண்டு வியந்தாள். புன்சிரிப்புடன் வந்த திரிசடை, தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாள். தன் பெரியப்பா ராவணன் என்றும், தந்தை விபீஷணன் என்றும் தெரிவித்தாள்.

மாயஜாலம் மூலம் தன் மனதை மாற்ற விரும்பும் ராவணனின் முயற்சியோ என பயந்தாள் சீதை. ஆனால் திரிசடையின் சாந்த முகம், கருணையை வெளிப்படுத்தும் கண்கள், நிதானமான தோரணை எல்லாம் சீதையின் மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை ஏற்படுத்தின.

சீதையிடம், 'அம்மா, கவலை வேண்டாம். ஸ்ரீராமன் உங்களை மீட்டுச் செல்வார். ஆனால் எனக்கு உள்ளூர பயம் ஒன்று உண்டு. அதாவது ஒரு நபர் யாரையாவது எப்போதும் நினைத்துக் கொண்டேயிருந்தால் அந்த நபரும் அவரைப் போலாகி விடுவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியானால் ஸ்ரீராமனையே நினைக்கும் நீங்கள் அவர் நினைவால் அவராகவே மாறி விட வாய்ப்புண்டு'' என்றாள் திரிசடை.

'இதென்ன விபரீதம்?' எனக் கேட்டாள் சீதை.

'பயப்படாதீர்கள். நீங்கள் எப்படி அவரை நினைக்கிறீர்களோ, அதேபோல அவரும் உங்களையே நினைப்பார்? அப்படியானால் நீங்கள் ஸ்ரீராமனாக மாறினால் அவர் சீதையாகி விடுவார், அப்போது சரியாகி விடும் அல்லவா' என கலகலவென சிரித்தாள் திரிசடை.

கபடமற்ற சிரிப்பு அவளின் துாய மனதைக் காட்டியது. அதோடு அவள் சொன்ன விதம் கேட்டு சீதை மகிழ்ந்தாள். காவலாக வந்தவள், காமுகன் ராவணனின் விருப்பத்துக்கு இசைய வைக்க வந்தவள், சீதைக்கு ஆதரவு தரும் தோழியாகி, ஆறுதல் சொல்லும் தாயும் ஆனாள். 'அன்பினால் தாயினும் இனியவள்' என சீதையை மகிழச் செய்தவள் திரிசடை.

அவளின் வரவு சீதைக்குப் புத்துயிர் அளித்தது. 'ராமன் மீட்பான்; ராவணன் அழிவான்' என்ற நம்பிக்கை மனதில் வலுப்பெற்றது.

ராவணன் நோக்கம் நிறைவேற சீதையின் தந்தையான ஜனகரின் மாயத் தோற்றத்தைக் காட்டினான். அசோக வனத்தில் தந்தை ஜனகர் வருவார் என எதிர்பாக்கவில்லை. மாயம் கண்டு மயங்கிய அவளிடம், 'அம்மா, ராவணனின் விருப்பத்தை நீ நிறைவேற்று' என ஜனகர் அறிவுறுத்திய போது துடித்துப் போனாள் சீதை. 'ஒரு தந்தை மகளுக்குச் சொல்லும் அறிவுரையா இது! என்ன கொடுமை! அதுவும் ராஜரிஷியான தன் தந்தையா இப்படி சொல்வது' என நிலை குலைந்தாள். 'நீங்கள் என் தந்தையாக இருக்க முடியாது. இப்படி ஒரு கேவலத்தை அவரால் சிந்திக்க முடியாது. உங்கள் எண்ணம் பலிக்காது' என மாய ஜனகனை விரட்டினாள்.

அப்போது அருகில் இருந்த ராவணன், 'உன் தந்தை அறிவுறுத்தியும் மறுக்கிறாயே. ஆகவே உனக்கான தண்டனை, இந்த ஜனகனைக் கொல்வதுதான்' என வாளை உருவினான். அந்த நேரத்தில் போர்க்களத்தில் கும்பகர்ணன் இறந்தான் என்ற செய்தி அங்கு கிடைக்கவே ராவணனும், மாயஜனகனும் அங்கிருந்து மறைந்தனர்.

சிலையாகிப் போன சீதையை மென்மையாக தொட்டாள் திரிசடை. ' அம்மா மயங்காதீர்கள்... மாய ஜனகனாக வந்தவன், ராவணனின் தளபதி மருத்தன்தான். உள்ளத்தில் உறுதி இருந்தால் மாயம் என்ன செய்யும்?'

உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாறியே

வந்தவன் மருத்தன் என்று உள்ளம்ஓர் மாயை யான்

அந்தம் இல் கொடுந்தொழில் அரக்கன் ஆம்எனா

சிந்தையில் உணர்த்தினள் அமுதின் செய்கையாள்

-கம்பர்

திரிசடையின் ஆறுதல் வார்த்தை சீதையின் கவலையை போக்கியது. இனி எந்த மாயத்துக்கும் கலங்கக் கூடாது என தீர்மானித்தாள். இந்த நிகழ்வுக்குப் பின் திரிசடையை தாயாக மதித்தாள் சீதை.

சுற்றி நின்ற அரக்கியரில் இருந்து

இவள் எவ்வளவு மாறுபட்டிருக்கிறாள்.

அதே சமயம் திரிசடை தன்னையும்

பாதுகாக்க வேண்டியிருந்தது. சீதைக்கு ஆறுதல் சொல்வது ராவணனுக்குத் தெரிந்தால், திரிசடையின் தலையை வெட்டவும் அவன் தயங்க மாட்டான். பெரியப்பாவுக்கும் போக்கு காட்டி, சீதைக்கும் தைரியம் ஊட்டி வந்தாள்.

மனைவியைப் பிரிந்து வாடும் ராமனுக்கு ஆதரவாக விபீஷணனும் செயல்பட்டான். விபீஷணனின் மனைவி 'சரமை' என வால்மீகி குறிப்பிட்டாலும், கம்பர் ஏனோ அந்தக் பாத்திரத்தை காவியத்தில் காட்டவில்லை.

அரக்கர் குலத்தில் பிறந்தும் மனித நேயத்துடன் வளர்ந்து, தன்னையும் அப்படியே வளர்த்து வரும் தந்தையை நினைத்து நெகிழ்ந்தாள் திரிசடை.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us