sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 3

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 3

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 3

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 3


ADDED : ஆக 25, 2023 10:28 AM

Google News

ADDED : ஆக 25, 2023 10:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரி என்னும் அர்ச்சா பக்தை

ராமனைப் பார்க்காதவர்களும் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவன் மீது பக்தி கொள்வர் என்பதற்கு சிறந்த உதாரணம் வேடுவப் பெண் சபரி. சிறு வயதிலிருந்தே அவர் மீது பக்தி கொண்டிருந்தாள்.

அவனது தோற்றத்தைக் கற்பனையால் செதுக்கி மனதில் பதித்திருந்தாள். 'அர்ச்சாயாம் சபரி' என சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று இவளை விவரிக்கிறது.

தன் குலத்தைச் சார்ந்த குகனைத் தன் தம்பியாக ராமன் ஏற்றுக்கொண்டதை அறிந்திருந்தாள். இவ்வாறு பண்பு சார்ந்த சம்பவங்கள் தெரியத் தெரிய அவளது மனதில் ராமன் உயர்ந்து நின்றான்.

அவரை நேரில் தரிசிப்பதே வாழ்நாளின் குறிக்கோள் என்றும், அதற்காக எத்தனை ஆண்டு காத்திருந்தாலும் சரி என்றும் முடிவு செய்தாள்.

பம்பை நதிக்கரையிலுள்ள காட்டில் வசித்த சபரி, தினமும் அந்த வழியே மதங்க முனிவர் சீடர்களுடன் செல்வதைக் கவனித்தாள். ராம தரிசனத்துக்கு முனிவர் வழிகாட்டுவார் எனத் தோன்றவே அவரது அன்பைப் பெற நினைத்தாள். அன்றிலிருந்து காட்டில் விளைந்த சுவையான காய்கள், கனிகள், கிழங்குகள், மலர்கள், இவற்றோடு முனிவர் செய்யும் வேள்விக்கு சுள்ளிகள் என சேகரித்துக் கொண்டு வழியில் அவற்றை வைத்து விட்டு மறைந்து நிற்பாள்.

தங்களுக்கு இப்படி உதவும் நபர் யார் என மதங்கர் அறிய விரும்பினார். எல்லோரும் தேடினர். அப்போது சபரி வெளிப்பட்டு நான்தான் என்றாள்.

வயதான அவளுக்குத் தன் ஆசியையும் வழங்கினார். உங்கள் ஆசிரமத்தில் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன் என சபரி தெரிவித்தாள். நல்லவர்களுடன் பழகினால் ராம தரிசனம் கிடைக்கும் என நம்பினாள்.

மதங்கரும் அவளின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னுடன் அழைத்துச் சென்றார். குடிலில் முனிவருக்கும் அவரது சீடர்களுக்கும் தாய்போல அனைத்து உதவிகளையும் செய்தாள் சபரி. தன் தீர்க்க தரிசனம் மூலம் ராமன் விரைவில் அந்தப் பகுதிக்கே வருவான் என முனிவர் சொன்னதில் மகிழ்ச்சி கொண்டாள். தன் நாயகனைத் தான் போய் தரிசிப்பது போக, அவனே தன்னிடம் வருவான் என்ற செய்தி அவளை மெய்சிலிர்க்க வைத்தது. கடவுளே உற்ஸவராக ஊர்வலம் வந்து பக்தனின் வீட்டு வாசலில் வந்து நின்றால் பேரானந்தம் தானே!

சபரி காத்திருந்தாள். ஒவ்வொரு நாளும் கடக்கக் கடக்க, இன்று வருவான், நாளை வருவான், நாளை மறுநாளாவது வருவான் என நம்பிக்கையைத் தளர விடாமல் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டாள். ஆனால் ஒருநாள் அவள் எதிர்பாராத சோதனையை அனுபவிக்க நேர்ந்தது.

ஆம், மதங்க முனிவரும், அவரது சீடர்களும் தம் தெய்வ வலிமையால் இந்த பூவுலகை நீத்து மேலுலகம் சென்றடைந்தனர். ஆனால் அவ்வாறு போகும் முன்பாக சபரியிடம், 'உன் பொறுமை வீணாகாது அம்மா. நீ உறுதியுடன் காத்திருக்கலாம். ராமன் உன்னைக் காணாமல் போகமாட்டான். அவனே உன்னை நாடி இந்த ஆசிரமத்துக்கே வருவான். கவலை கொள்ளாதே' என உறுதியளித்து விட்டு புறப்பட்டார் மதங்க முனிவர்.

அவ்வாறே சபரி காத்திருந்தாள். ஆனாலும் அவள் தன் வழக்கத்தை மாற்றவில்லை. அன்று வரவில்லையா, அந்தப் பொருட்களை பிரசாதமாக அனைவருக்கும் அளித்தாள்.

நாட்கள் செல்லச் செல்ல அவளின் மனதில் நம்பிக்கையின் பலம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ராம தரிசனத்துக்குப் பிறகுதான் தன் கண்கள் மூடுவது என்ற வைராக்கியம் அவளை 'கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்றி கொலோ களிக்கும் நாளே' என கம்பரின் வாக்குபடி பக்தியுடன் காத்திருக்க வைத்தது.

இதற்கிடையில் சீதையைப் பறிகொடுத்த வேதனையில் அவளைத் தேடி ராமனும் லட்சுமணனும் காட்டில் அலைந்தனர். அப்போது வழியில் கவந்தன் என்னும் அரக்கனை அவர்கள் எதிர்கொண்டனர். இந்திரனின் தாக்குதலால் அரக்கனின் தலை அவனது வயிற்றிற்கு இறங்கி வந்து விட்டது. எதிர்ப்படுவோரை பற்றி இழுத்துத் தன் வயிற்றுக்குள் தள்ளி கபளீகரம் செய்யும் கொடியவன் அவன். ராம லட்சுமணரைப் பார்த்த அவன் அன்றைக்குத் தனக்கு திருப்தி தரும் தீனி கிடைத்ததாக மகிழ்ந்தான்.

அவனது விசித்திர வடிவத்தைக் கண்டு இருவரும் வியந்தனர்.

அவனுடைய தோள்கள் மீதேறி வெட்டி வீழ்த்தினர். அலறிச் சாய்ந்தான் கவந்தன். சாபம் நீங்கி அழகிய கந்தர்வனாகக் காட்சியளித்தான். தனக்கு விமோசனம் அளித்த ராமனுக்கு நன்றி தெரிவித்தான். அவர்கள் சீதையைத் தேடிச் செல்வதை அறிந்து 'நீங்கள் அன்னை சபரியை சந்தியுங்கள். அவர் ருசியமுக பர்வதத்தில் வசிக்கும் சுக்ரீவனை அடையும் வழியைச் சொல்வார். சுக்ரீவன் மூலமாக சீதையை எளிதாக மீட்க முடியும்,' என அரிய தகவலை அளித்தான்.

அதை ஏற்ற ராமனும், லட்சுமணனும் முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தனர். வெகு தொலைவிலிருந்தே இனிய நறுமணத்தை தென்றல் சுமந்து வந்து சபரியிடம் சேர்த்தது. பளிச்சென முகம் மலர்ந்தாள் சபரி. காத்திருந்த நாட்கள் அவளது வயதை அதிகரித்திருந்தாலும், நம்பிக்கை மட்டும் இளமையாக துளிர்த்திருந்தது. பம்பை நதிக்கரையோரம் வந்த அந்தப் பரம்பொருளைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தாள். 'என் அருந்தவத்துக்கு எல்லை அணுகியது; இன்றுதான் என் புண்ணியம் பூத்தது' என்று சொல்லி மகிழ்ந்தாள்.

தான் சேகரித்த புத்தம் புது பழங்களை சமர்ப்பித்து, 'புசியுங்கள் எந்தையே' என மண்டியிட்டுக் கேட்டாள்.

'அம்மா' என நெகிழ்வாக அழைத்தான் ராமன். 'தங்களை சந்தித்ததில் பாக்யவானானேன். என் துன்பத்தை தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். எனக்கு உதவக்கூடிய சுக்ரீவன் இருப்பிடத்தை காட்டியருளுங்கள்' என ராமன் வேண்டினான்.

அவளும் ருசியமுக பர்வதம் செல்லும் வழியை விவரிக்க சீடனைப் போல கேட்டான் ராமன்.

தான் பிறவிப்பயன் அடைந்ததை எண்ணி மகிழ்ந்த சபரி யோகக் கனலை உருவாக்கி அதில் புகுந்து தானே மோட்சத்தை அடைந்தாள். மோட்சம் அளிக்கும் பரம்பொருளான ராமனே அதற்கு சாட்சியாக இருந்தார்.

இடைவிடாமல் ராமநாமத்தையே அர்ச்சனையாக(அர்ச்சா பக்தி) ராம நாமத்தையே சுவாசித்து ஆனந்தத்தில் திளைத்த சபரியின் இறுதி மூச்சும் 'ராம, ராம..' என்றே ஒலித்தது.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us