தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்


ADDED : மார் 22, 2016 02:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2016 02:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொங்கு நாட்டில் பவானி என்ற சிவத்தலம் அருகில் உள்ளது பூநாச்சி கிராமம். இங்கு வசித்த சிதம்பரம் ஜோதிடர், லட்சுமியம்மாள் தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு வாய்க்கவில்லை.

ஒருமுறை லட்சுமி அம்மாள் முன் ஒரு நாகம் படமெடுத்து ஆடியது. அதற்கு கற்பூரம் காட்டியவுடன் அங்கிருந்து மறைந்து விட்டது. இதன்பிறகு நாகாசலம் என அழைக்கப்படும் திருச்செங்கோட்டிற்கு 12 அமாவாசையன்று சென்று விரதமிருந்து இத்தம்பதியர் தரிசனம் செய்து வந்தனர். அதன்பின் இறையருளால் முதலில் பெண் குழந்தையும், அதன் பின் ஆண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து 1870, நவம்பர் 25ல் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். குழந்தைக்கு 'அர்த்தநாரி' என்று பெயரிட்டு வளர்த்தனர்.

இளம்பருவத்தில் தந்தையை இழந்தார் அர்த்தநாரி. படிப்பில் நாட்டம் இல்லாததால் மல்யுத்தம், சிலம்பம் ஆகியவற்றைக் கற்றார்.

இவருக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் நடத்தப்பட்டது. மனைவியைக் காப்பாற்ற மைசூரு சென்று அரண்மனை சமையல்காரராக பணி செய்தார். அப்போது அவருக்கு இறை நாட்டம் எல்லாம் கிடையாது. தனது 22 வயதில் மைசூருவில் நடந்த ஒரு திருமணத்திற்குச்

சென்றார். அங்கு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளைக்கு வலிப்பு நோய் வந்து விட்டது. எனவே பெண் வீட்டார் அந்த மாப்பிள்ளையை ஏற்க மறுத்தனர்.

திருமணத்திற்கு வந்த அர்த்தநாரியை மணமேடையில் மாப்பிள்ளையாக அமரச் செய்து இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.

இரண்டாம் திருமணம் நடந்த மூன்று ஆண்டுக்குள் முதல் மனைவியும், அவரது மூன்று குழந்தைகளும் இறந்து விட்டனர். இதையடுத்து சில நாட்களில் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த இரு பெண் குழந்தைகளும் இறந்து போயினர். இதனால் மனம் வெறுத்த அர்த்தநாரி விரக்தியுடன் அலைந்தார். இதற்கிடையில் பட்டகாலிலே படும் என்று சொல்வது போல அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. எவ்வளவோ வைத்தியம் செய்தும் பலன் கிடைக்கவில்லை.

அரண்மனையில் இருந்த சக வேலைக்காரன் ஒருவனின் வழிகாட்டுதல்படி, தன் இரண்டாவது மனைவி, மகன் நரசிம்மன் ஆகியோருடன் பழநி புறப்பட்டார். நான்கு ஆண்டுகள் கோவிலிலேயே தங்கினார். கோவிலைச் சுத்தப்படுத்தி மெழுகி, முருகப்பெருமானுக்கு மலர் பறிப்பது போன்ற தொண்டுகளைச் செய்தார். 48 நாட்கள் அபிஷேகப் பால் மட்டுமே சாப்பிட்டு வந்த அர்த்தநாரிக்கு முருகனருளால் வயிற்றுவலி நீங்கியது.

ஒருமுறை மதுரையில் இருந்து வந்த தேவதாசி, பழநி கோவிலில் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல் பாடி நடனமாடினாள். அந்தப் பாடலைக் கேட்ட அர்த்தநாரி மெய் மறந்து நின்றார். ஆனந்தக் கண்ணீர் பெருகிட முருகன் இந்தப் பாடல் மூலம் தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தார். ஆனால், அர்த்தநாரிக்கு அந்த திருப்புகழ் பாடலை எப்படி பாடுவது என்று தெரியவில்லை.

ஒரு சிறுவன் உதவியுடன் திருப்புகழ் பாடல்களையும் பாடத் தொடங்கினார். அவரை ஊரார் 'மைசூரு சாமி' என்று அழைக்கத் தொடங்கினர். 1912ல் திருவண்ணாமலைக்குச் சென்று ரமணரைத் தரிசிக்கும் பேறு பெற்றார். பின் சென்னை சென்று அங்கிருந்த செங்கல்வராய பிள்ளை என்பவரின் வீட்டில் தங்கி அன்னதானம் செய்து வந்தார். ஒருமுறை முருகனே சிறுவனாக வந்து அவர் கொடுத்த

அன்னதானத்தை ஏற்றார்.

இதன் பிறகு வடநாட்டு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற அர்த்தநாரி, திருவண்ணாமலை திரும்பி 15 நாட்கள் ரமணரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். ரமணர் அவரை வெளியேறும்படி கூறவே அர்த்தநாரி மிகவும் வருத்தம் அடைந்தார். வரும் வழியில் சேஷாத்ரி சுவாமிகளைச் சந்திக்கும் பேறு பெற்றார்.

அவர் அர்த்தநாரியிடம், 'நீ வள்ளிமலையில் தவம் செய்து கொண்டிரு. நான் அங்கு வருவேன்,'' என்று அருள்புரிந்தார். அதன் பின்பே ரமணர், தன்னை திருவண்ணாமலையில் இருந்து வெளியேற்றியதன் காரணம் புரிந்தது.

சென்னை- பெங்களூரு ரோட்டில் திருவல்லம் என்னும் திருத்தலம் உள்ளது. இங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது.

இவ்வூரில் தான் குறமகளான வள்ளி இருந்தாள். தினைப்புனம் காத்து தவமிருந்து முருகப்பெருமானைத் தன் கணவராகப் பெறும் பேறு பெற்றாள். முருகனின் புனிதமான பாதங்கள் பட்ட அந்த இடத்தில் அர்த்தநாரியும் தவம் செய்யத் தொடங்கினார். அதன்பின் பல

தலங்களுக்கும் சென்று, திருப்புகழின் புகழை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது.

ஆங்கிலப் புத்தாண்டு நாளில் பலரும் கேளிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த எண்ணத்தை மாற்றி முருகனை தரிசிக்கும் வழக்கத்தை மக்களிடம் உண்டாக்க விரும்பினார். 1918 ஜனவரி முதல் நாளில் திருத்தணியில் 'திருப்புகழ் படிவிழா' என்னும் நிகழ்ச்சியைத் தொடங்கி

வைத்தார். அவர் அன்று தொடங்கி வைத்த அந்த விழா இன்றும் சிறப்பாக நடந்து வருகிறது.

பல இடங்களிலும் அவர் திருப்புகழ் சபையைத் தொடங்கினார். 1944 ல் பழநியில் திருப்புகழ் மாநாடு நடத்தினார். 'திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை' என்னும் நூலையும் வெளியிட்டார். சேஷாத்ரி சுவாமிகள் சமாதியடைந்த பிறகு கீரி வடிவம் எடுத்து தினமும் வள்ளிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததோடு, முருகனுக்கு படைத்த வெல்ல அன்னத்தை சாப்பிட்டு வந்தார். வள்ளிமலையில் தங்கியிருந்ததால் 'வள்ளிமலை சுவாமிகள்' என்று அர்த்தநாரி அழைக்கப்பட்டார்.

சிறுவயதில் சங்கீத ஞானம் இல்லாத சுவாமிகளுக்கு வள்ளிநாயகி ஒருமுறை காட்சியளித்தாள். தன் பெயரை 'பொங்கி' என்று எழுதிக் காட்டினாள். சுவாமிகளும் அதன் பிறகு வள்ளியின் சிலை ஒன்றை வடித்து 'பொங்கி வைஷ்ணவி' என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தார்.

1950 நவம்பர் 22ல் சமாதி அடைந்தார். வள்ளிமலையில் சுவாமிகள் தவம் செய்த குகையிலேயே அவரின் சமாதி இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us