
அந்த சிருஷ்டி தண்டம் பிரம்மனுக்கு மகாவிஷ்ணுவால் அளிக்கப்பட்டதாகும். உயிர்களைப் படைக்கும் ஆற்றலை அதில் ஏற்றிய மகாவிஷ்ணு, ''இந்த தண்டமே படைப்புக்கான சக்தியை அளிக்கும். இது வேறு நான் வேறு அல்ல. இதை இழந்தால் படைப்புத் தொழிலை நடத்த முடியாது. எப்போதும் இது உன் வசம் இருக்கட்டும். நெடிய வாழ்வை உடைய அத்தி மரத்தால் ஆன இந்த தண்டம், உயிர்களை உருவாக்க தேவைப்படும் சக்தியை அளித்தபடியே இருக்கும். இதன் மூலமாக மண்ணில் பசுமைக்கும், அதற்கு மூலமான மழைக்கும் வழிகள் கண்டு உன் சிருஷ்டித்தொழிலை சிறப்பாக செய்...'' என்றார் மகாவிஷ்ணு.
வாணியின் கண்ணில் பட்ட அந்த சிருஷ்டி தண்டம், மகாவிஷ்ணு சொன்னதை எல்லாம் நினைத்துப் பார்க்கச் செய்தது. அதன் பின் பிரம்மாவிடமும் ஒரு மாற்றம்.
'இது இருக்கும் வரை 'மேலானவன் நானே'என பிரம்மா கருதுவதால் தான் தனது சிறப்பை ஏற்க மறுக்கிறாரோ என்று வாணிக்கும் தோன்றியது.
மொத்தத்தில் ஆதிமூலமான மகாவிஷ்ணு ஒரு திருவிளையாடலுக்கு ஆசைப்படவும், அதற்கேற்ப முதலில் அலைமகளான திருமகள் அசைந்தாள். பின் கலைமகள்... அவளைத் தொடர்ந்து பிரம்மாவும் நடந்திட நாடகத்தின் முக்கியச் சம்பவம் அரங்கேறியது.
வாணி பீடத்தின் மீதிருந்த பிரம்ம தண்டத்தை கையில் எடுத்தாள்.
''வாணி.. அதை ஏன் எடுக்கிறாய்?''
''இது என் வசமிருக்கட்டும்..''
''உனக்கு எதற்கு அது?''
''ஏன் உங்கள் வசம் தான் இருக்க வேண்டுமா? உங்களில் பாதியான என் வசம் இருக்கக் கூடாதா?''
''என் கடமைக்குரியது அது... உன் கடமைக்குரிய ஏடும், எழுதுகோலும், ஸ்படிக மாலையும், கமண்டலமும், பிறைநிலவும் இருக்கிறதே...''
''அந்த வரிசையில் இதுவும் சேரட்டும். எது மேலானது, எது முதலானது என தெரியாத உம்மிடம் இருந்தால், உம் படைப்பால் பிறப்பு எடுப்பவர்களும், உங்களைப் போலவே இருப்பார்கள். பொன், பொருளை பெரிதாக கருதும் சமூகம் உருவாவது படைப்புத் தொழிலுக்கோ, உலகிற்கோ நல்லதல்ல...'' என சொல்லிய வாணி அதற்கு மேல் பேச விரும்பாமல் சத்தியலோகத்தை விட்டு மறைந்தாள்.
பிரம்மன் திகைத்தான். தண்டத்தை வழங்கிய மகாவிஷ்ணுவின் முன் நாராயண மந்திரத்தை ஜபித்தபடி நிற்க மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வரவேற்றனர்.
''என்ன பிரம்மா...எங்கே இவ்வளவு துாரம்?'' என ஏதும் அறியாதவள் போல பேச்சைத் தொடங்கினாள் மகாலட்சுமி.
''தாங்கள் அறியாத ஒன்று இருக்குமா?'' என்ற பிரம்மா தனக்கும், வாணிக்கும் நேர்ந்த வாக்குவாதத்தை விவரித்தான். இறுதியில் வாணி சிருஷ்டி தண்டத்துடன் மறைந்து விட்டதையும் கூறி முடித்தான்.
மகாலட்சுமி சிரித்தாள். முத்துக்கள் தெறித்தது போல அந்தச் சிரிப்பு இருந்தது. அர்த்தம் காண இயலாத புன்னகை மகாவிஷ்ணுவிடமும் வெளிப்பட்டது.
''ஐயனே! என் கடமையைத் தடையின்றி தொடர வழிகாட்டுங்கள்'' என முறையிட்டான் பிரம்மன்.
''அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது'' என்றார் மகாவிஷ்ணு.
''என்ன அது?''
''பூவுலகில் அத்தி கிரியை அறிவாய் அல்லவா?''
''அறிவேன் ஐயனே! இந்திரன் சாபம் தீர உருவாக்கப்பட்ட தலம் அல்லவா அது?''
''சாப விமோசன தலம் மட்டுமல்ல... முப்பெரும் தேவியரான சக்தி, சரஸ்வதி, லட்சுமி மூவரின் வடிவமான காமாட்சி குடியிருக்கும் தலம். ஏகாம்பரேஸ்வரராக சிவன் அருளும் தலம். அங்கு நிகழும் ஒவ்வொரு நல்வினைக்கும் பன்மடங்கு லாபம் உண்டு. இங்கு பசுவுக்கு ஒரு வேளை தரும் உணவு ஆயிரம் மடங்கு பலனைத் தரும். இங்கு நிகழும் யாகங்கள் பன்மடங்கு புண்ணியம் தரும்''
''இதை நான் முன்பே அறிவேன். தங்களால் இப்போது தெளிவு பெற்றேன்''
''அப்படியானால் அத்திகிரி சென்று அஸ்வமேத யாகம் நடத்து. அதன் நோக்கம் சிருஷ்டி
தண்டத்தை பெற வழிவகுக்கும். சிறு தடை கூட குறுக்கிடாமல் வேள்வியை முடிக்கும் சமயம், நானே தோன்றி புதிய சிருஷ்டி தண்டத்தை அளிப்பேன்''
பிரம்மனும் அத்திகிரியில் வேள்வி நடத்த புறப்பட்டான்.
மகாலட்சுமி, ''சுவாமி... இப்போதே சிருஷ்டி தண்டத்தை தரக் கூடாதா? எதற்காக வேள்வி... அதுவும் பூலோகத்தில்... எனக்கு புரியவில்லையே''
''தேவி... சிருஷ்டி தண்டம் எத்தனை அரிதானது என்பதை உணர்த்த வேண்டுமே! வேதமும் அதன் வெளிப்பாடாகிய வேள்வியும் அரிதானது. வேதம் ஒலி மூலமானது. வேள்வி ஒளி மூலமானது. ஒலி, ஒளி மூலமே இந்த உலகம், நீ, நான், நாம் என பிரபஞ்சத்தில் உள்ள எல்லோருமே...! இதை கால காலத்திற்கும் தோன்றவிருக்கும் மானிடர்கள் அறியவே வேள்வியை பிரம்மன் மூலம் செய்யச் சொன்னேன். வேள்வியின் பரிசாக இழந்த சிருஷ்டி தண்டம் கிடைக்கும்''
''யாகத்தை காஞ்சியில் நடத்தினால் தான் சிறப்பு எனக் கூறி அங்கே ஒன்று பலவாகும் என்றீரே?''
''ஆம்...பசுவின் உடம்பு எங்கும் ரத்தம் ஓடினாலும், அது பாலாகி வெளிப்படுவது மடிக்காம்பின் வழியே தான்... அது போல பிரம்மன் நிகழ்த்தும் வேள்வி உலகிற்கு உரியதாக இருந்தாலும், அது வெளிப்பட ஒரு திருத்தலம் வேண்டும் அல்லவா? அந்த மடிக்காம்பு போன்ற தலமே காஞ்சி என்னும் அத்திகிரி''
''அற்புதம்... இன்னொரு சந்தேகம்... வாணியிடம் இருக்கும் சிருஷ்டி தண்டம் இதன் பின் என்னாகும்?'' - மகாலட்சுமி கேட்க வேண்டிய கேள்வியைத் தான் கேட்டாள்.
தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்