
சத்ய லோகத்தில் பிரம்மன் யோக நிஷ்டையில் படைப்புத் தொழிலில் பரிபாலனத்திற்குள் இருந்தான். வீணையை மீட்டிக் கொண்டிருந்தாள் கலைவாணி. ''நாராயணா... நாராயணா...'' என உச்சரித்தபடி நாரதன் வரவும் நிமிர்ந்தாள். ஆயினும் விரல்கள் இசைத்தபடி இருந்தன.
இசை நாரதனையும் மயக்கியது. தன்னை மறந்து தலையசைத்தான். வீணை இசை வெள்ளமாய்ப் பெருகி சத்ய லோகத்தையே நிறைத்தது. நிஷ்டை கலைந்த பிரம்மதேவன் எழுந்து வாணியின் இசையை ரசித்தான்!
வாணி இசைப்பதை நிறுத்தி விட்டு புன்னகைத்தாள்.
''தாயே... ஏன் நிறுத்தினீர்கள். தொடருங்கள்'' என்றான் நாரதன்.
''ஆம் தேவி... உன் இசை என்னை நெகிழச் செய்தது.' என்றான் பிரம்மதேவன்
'' இருவரும் சொல்வது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆயினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமல்லவா? போதும் என எண்ணுகிறேன்'' என்றாள் வாணி.
''தாயே... தங்களிடம் பிடித்த விஷயமே இது தான். எதிலும் நிதானம்! தன்னடக்கம்...! தங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அதே சமயம் சிலரை நினைத்தால் சங்கடமாக இருக்கிறது''.
ஆரம்பமாகி விட்டது நாரதனின் லீலைக்கான செயல்பாடு.
''யார் அந்தச் சிலர்?'' என அவளும் நாரதனுக்கு இசைந்து கொடுக்கத் தொடங்கி விட்டாள்.
''அடடா... அறியாமல் உளறி விட்டேனே..! வேண்டாம் தாயே. நான் எதையும் சொல்லவுமில்லை. நீங்கள் கேட்கவுமில்லை...'' என சமாளித்தான் நாரதன்.
''நாரதா.. என்னிடமே மறைக்கப் பார்க்கிறாயா?''
''இல்லை தாயே! நீங்கள் வீணையில் வாசித்தது காம்போதி ராகம் தானே?''
பேச்சை மாற்றினாலும், வாணி மாறுவதாக இல்லை.
''ஏதோ நடந்துள்ளது... இல்லாவிட்டால் இப்படி பேசுவானா என்ன? இந்திர லோகத்தில் தான் ஏதாவது பிரச்னை உருவாகியிருக்க வேண்டும்... என யூகித்தாள் வாணி.
''நாரதா... இந்திர லோகத்தில் சிக்கலா... பேசக் கூடாததை இந்திரன் பேசி விட்டானா?'' என விடாது கேட்டாள்.
''தாயே விடுங்கள் என்றேனே... ஏன் விடாமல் கேட்கிறீர்கள்?''
'' எங்கே எது நடந்திருந்தாலும் சொல்! உனக்கு தீங்கு நேராது என உறுதி தருகிறேன். சொல்!''
''எனக்கு தீங்கா! தவறு தாயே...தீங்கு வந்தாலும் தாங்குவேன். ஆனால் உலகிற்கே தீங்கு வந்தால்?''
''உலகிற்கா.. என்ன சொல்கிறாய்? விபரமாகக் கூறு..''
''உலக மாந்தருக்கு முதலில் தேவையானது கல்வியா? செல்வமா?''
''இரண்டும் தான்...''
''முதலில் என்றேனே...''
''என்ன சந்தேகம்...கல்வி தான்!''
''இல்லை. செல்வம் தான் பெரிது... முதல் வணக்கத்திற்குரியவள் திருமகளே! மற்றவர்கள் எல்லாம் பின்பு தான்?''
''சொன்னது யார்?'' மவுனமாக இருந்த பிரம்மதேவன் இடையிட்டான்.
''தந்தையே தாங்களுமா சங்கடப்படுத்த வேண்டும்?''
''நாரதா... பீடிகை வேண்டாம். விஷயத்திற்கு வா...சொன்னது யார்?''
''அது..அது..அது..!''
''சொல்லப் போகிறாயா? இல்லையா?''
''சொல்கிறேன்... தரிசனத்திற்காக வைகுண்டம் சென்ற இடத்தில், லட்சுமித்தாயார் தான் இதைச் சொன்னார்கள்..!'' - நாரதன் கூறி முடிக்கவும் வாணியின் முகத்தில் கோபம் வெளிப்பட்டது.
''வாணி...வருந்தாதே! தன்னை ஒருவர் பெரிதாகக் கருதுவதும், பெருமை கொள்வதும் இயல்பு தானே?'' என்று சமாதானம் செய்த பிரம்ம தேவனை ஏறிட்டாள் வாணி
''நான் இப்படி பேசினால் சும்மா இருப்பீர்களா? இயல்பு என்றீர்களே... அது மனிதர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்... லட்சுமியோ அமிர்தம் கடைந்த போது அதன் பரிசாகத் தோன்றியவள்! அவளுக்கு எப்படி பொருந்தும்?'' என ஆவேசப்பட்டாள்.
'' நமக்குள் எதற்கு சர்ச்சை. கோபம் நமது எதிரி என நீ அறிந்தவள் தானே?''
''பிரபு... நான் எனக்காக வருந்தவில்லை. என் அம்சமான கல்வியே அழியாச் செல்வம். லட்சுமியின் செல்வம் அழிந்து போய் விடுவதுடன் பலரையும் பாவியாக ஆக்குகிறது. ஆனால் கற்றவர் பாவியே என்றாலும், ஞானத்தால் நற்கதி அடைவர். இதனால் தான் நாரதனும் உலகிற்கு தீங்கு என கூறியுள்ளான். இல்லையா நாரதா?''
''ஆம் தாயே...இந்த கருத்து பரவினால் என்னாகும்? மக்கள் பொருள் பெரிது என கருதி, அருட்செல்வமான கல்வியை அப்புறம் என நினைக்க மாட்டார்களா?''
''ஏதோ... நாரதன் முன் தன்னை மறந்து பெருமைப்பட்டுக் கொண்டு விட்டாள் திருமகள். இதை பெரிதுபடுத்தாதே..'' என பிரம்மா சமாதானம் செய்தான்.
''இல்லை தந்தையே.. இக்கருத்து பரவி விட்டது. இந்திரனிடம் கூட நான் கேட்டேன். அவனும் செல்வமே முதல் தேவை என கூறியதோடு ரிஷிகளும், ஞானிகளும் என்னை கல்வியாளன் என கருதியா வணங்குகின்றனர்? நான் தேவர்களின் தலைவன், பெரும் செல்வம் உடையவன், குபேரனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்பதால் தானே வணங்குகின்றனர். எனவே செல்வமே பெரிது; அதுவே முதலானது என கூறியதோடு வழிபாட்டில் லட்சுமி தேவிக்கே பிரதான இடம் என்றும் கூறினான்..!'' நாரதன் பேச்சில் சுருதி ஏறிக் கொண்டே போக வாணிக்கு கோபம் அதிகமானது. அவள் 'இந்திரா' என அழைத்ததும் அங்கே பிரசன்னமாகி வணக்கம் சொன்னான்.
''இந்திரா... ஏன் அழைத்தேன் தெரியுமா?'' என்றாள் வாணி. நாரதரைக் கண்டதும் அவனுக்கு விஷயம் புரிந்தது.
''இந்திரா நீ தேவர்களின் தலைவன். நீயே தவறாக வழிகாட்டலாமா?''
''தேவி.. என்ன கூறுகிறீர்கள்?''
''செல்வம் பெரிது என்றால் எத்தனை துன்பம் உருவாகும் என்பது தெரியவில்லையா?''
''உண்மை தான் தேவி.. மகாலட்சுமியை திருப்திப்படுத்தவே அப்படி சொன்னேன்...''
''அப்படியானால் என்னைத் திருப்திப்படுத்தவே இப்படி சொல்கிறாயா?'' இந்திரன் திருதிருவென விழித்தான்.
''என்ன விழிக்கிறாய்... தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இடத்திற்கு தகுந்த மாதிரி பேசலாமா? மன உறுதி வேண்டாமா?''
''நான் உறுதியானவன் தான் தேவி...அதனால் தான் மூவராகிய விஷ்ணுவுக்கும், சிவனுக்கும், பிரம்மனுக்கும் வாய்த்த வாகனங்களான கருடன், ரிஷபம், அன்னத்தை விட எனக்கு சக்தி மிக்க யானை வாகனமாக உள்ளது''
'' மூடன் போல் பேசுகிறாயே? யானை உனக்கு வாகனமானால் நீ உறுதியானவன் என பொருளா?அப்படியானால் அந்த யானையாகவே உன்னை மாற்றுகிறேன். இனி யார் உன்னை மதிக்கிறார்கள் என்றும் பார்க்கிறேன். இந்த நொடியே நீ யானையாகக் கடவாய். ஆதிசக்தியின் ஞானசக்தி நான் என்பது உண்மையானால் கல்வியே கரை சேர்க்கும் என்பது உண்மையானால் சாபம் பலிப்பதாக...'' என சபித்தாள். மறுகணமே இந்திரன் மதம் கொண்ட யானையாக மாறினான்.
பிளிறியபடி வைகுண்டம் நோக்கி ஓடத் தொடங்கினான்!
தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்