
ராமானுஜரின் கருத்தைக் கேட்டு அதிர்ந்தவர்களில் சிலர் அவரிடம் '' சுவாமி! தாங்கள் பேசிய பேச்சு எங்களை சிந்திக்க வைக்கிறது. இம்மண்ணுக்கு சோதனைகள் வரக் கூடும் என்பதை தங்களின் ஞானத்தால் உணர்ந்து எச்சரிப்பதாகவே தோன்றுகிறது.''
''ஆம்... காலம் எப்போதும் ஒன்று போல செல்வதில்லை. இந்த கலியுகத்தில் பக்தியும், ஒழுக்கமுமே ஒருவரை கரை சேர்க்கும். அதில் கறை ஏற்பட்டால் திரும்ப பிறப்பெடுத்து அல்லல்பட நேரிடும்''
'' அப்படியானால் பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் சோதனை ஏற்படப் போகிறதா சுவாமி...? ''
''என் எச்சரிக்கை பொதுவானது.... அதை எண்ணி கவலைப்படத் தேவையில்லை. எம்பெருமான் இருக்கிறான். இந்த தலமே விமோசனத்தலம் தானே? ''
'' உண்மை...எம்பெருமானோடு எங்களை நெறிப்படுத்தும் நீங்கள் உள்ளவரை கவலையில்லை. உங்கள் வடிவிலே அந்த வரதனைக் காண்கிறோம்'' எனக் கண்ணீர் மல்கினர்.
''சீடர்களே! நான் இப்பகுதியில் பிறந்து வளர்ந்து வரதனால் ஆளான போதிலும், ஸ்ரீரங்கத்திலும் பணிகளை ஆற்ற வேண்டியுள்ளது. ராமபிரானே வணங்கிய அந்த மூர்த்தியும், ஆராதனைகளும் அனைவருக்கும் முக்கியம். சிறிது காலம் அங்கிருந்து தொண்டாற்ற அனுமதித்திட வேண்டும்''
'' இப்படி சொல்லித் தான் அமுதனார் உங்களை அழைத்துச் சென்றார். இப்போதெல்லாம் வரதனை விடவும், அந்த அரங்கனே தங்களை அதிகம் ஆட்கொள்கிறான் போலும்'' என ஒருவர் சளைத்துக் கொண்டார்.
''இவன் வேறு அவன் வேறு என எண்ணினால் நீங்கள் என் சீடர்களேயல்ல...அவனில் எங்கும் பேதமில்லை! அவன் படைப்பான நம்மிலும் பேதங்கள் இல்லை. அவரவர் கடமையை உணர்ந்து பணிபுரிந்தால் போதும்... எந்நாளும் குறைவுமில்லை''
''நீங்கள் என்ன தான் சொன்னாலும் தாயைக் பிரிந்த கன்றாக நாங்கள் கருதுகிறோம். அரங்கமும் காஞ்சியும் ஒரு ஆற்றின் இரு கரை சேர்ந்த ஊர்களாக இருக்கக்கூடாதா என எண்ணுகிறோம்''
'' நல்ல கற்பனை!'' என சிரித்த ராமானுஜர் ''நான் ஒரு சன்னியாசி.... ஓரிடத்தில் மரம் போல் நிற்பது கூடாது. தல யாத்திரை புரிவதும், தீர்த்தங்களில் நீராடுவதும் என் கடமை. எனவே அரங்கவாசியானாலும் யாத்திரைக்காரனாகவும் இருப்பேன். வைணவ நெறியை பரப்புவதும், வளர்ப்பதுவுமே என் நோக்கம். நீங்கள் அதை உணர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்'' என ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.
முன்னதாக, ''எம்பெருமான் கருணை மிக்கவன். அவதாரம் எடுத்து வரும் அவன், நமக்காக அவதார புருஷர்களையும் அனுப்பித் தருவான். காஞ்சி மண் அது போல பலரைக் காணப்போகிறது'' என்றார்.
அவர் வாக்கிற்கேற்ப அம்மண்ணில் ராமானுஜரின் அடியொற்றித் தோன்றியவரே வேதாந்த தேசிகர்.
ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜர் 1057 முதல் 1096 வரை ஸ்ரீரங்கத்தில் தொண்டாற்றினார். பெரும் சோதனைக்கு ஆட்படக்கூடும் என்ற அவரது கருத்திற்கேற்ப, சோழ மன்னன் வைணவத்தை புரிந்து கொள்ளாததோடு, சைவமே பெரிது என பாகுபாட்டுடன் நடந்தான். ராமானுஜர் இருக்கும் வரை சைவம் வளராது எனக் கருதி அவரைக் கொல்லவும் துணிந்தான். ஆனாலும் எம்பெருமானின் கருணை, கூரத்தாழ்வான் வடிவில் ராமானுஜரை அங்கிருந்து
வெளியேறச் செய்து, கர்நாடகம் திருநாராயணபுரத்தில் தொண்டாற்ற வழிவகுத்தது. இதனால் தான் பஞ்ச நாராயணர்கள் நமக்கு கிடைத்தனர்.
குருவாகிய ராமானுஜருக்காக சோழனிடம் தன்னை சிக்க வைத்துக் கொண்ட கூரநாராயணர் ''உன் போன்ற சிறுமதி படைத்தவர்களை பார்ப்பது கூட பாவம்; அப்படி பார்த்த கண்களை தோண்டி எறிகிறேன்'' எனச் செய்து சோழனை நடுங்கச் செய்தார். குருவுக்காக மட்டுமின்றி தாம் சார்ந்த கொள்கைக்காகவும் கண்களை இழந்து எம்பெருமானையே சிலிர்க்க செய்தார் கூரநாராயணர் !
அதை அறிந்து ராமானுஜர் வருந்தியதோடு சீடர்களை எண்ணி நெகிழ்ந்தார். கர்நாடகம் சென்ற போது, அந்நாட்டு ெஹாய்சாள மன்னன் விட்டல தேவராயனை சமணத்தில் இருந்து வைணவத்திற்கு மாறச் செய்தார். அவன் விஷ்ணுவர்த்தன் என்றானான். அவன் உதவியோடு திருநாராயணபுரத்தில் கோயில் கட்டினார். அதுவே மேல்கோட்டை.
சோழன் மறைந்த பின், ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் நுாறு வயதைத் தொட்டார். சேவை மேலும் தொடர்ந்தது. 'நித்ய கிரந்தம், கீதா பாஷ்யம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சங்கிரகம், ஸ்ரீவைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், சரணாகதி கத்யம்' என ஒன்பது நுால்களை இயற்றினார். கி.பி.1137ல் திருநாடு அலங்கரித்தார்.
இவருக்கு பின் இவரின் கூற்றுப்படியே காஞ்சியை ஒட்டிய திருத்தண்கா அல்லது துாப்புல் என்னும் ஊரில் வேதாந்த தேசிகனைப் பிறப்பித்தான் எம்பெருமான்! 1268ம் ஆண்டு புரட்டாசி மாத திருவோண நட்சத்திர நாளில் பிறந்த இவரால் காஞ்சி வரதன் பெரிதும் ஆராதிக்கப்பட்டான்.
காஞ்சி என்றால் எப்படி ராமானுஜரை எண்ணாமல் இருக்க முடியாதோ, அப்படியே வேதாந்த தேசிகனையும் எண்ணாமல் இருக்க முடியாது. அனந்தசூரி என்ற வைஷ்ணவருக்கும், கோதா ரம்பைக்கும் பிறந்தவர் வேங்கடநாதன் என்னும் வேதாந்த தேசிகர்!
திருமலைக் கோயிலின் மணி அம்சமாய் பிறந்தவர். ஒருநாள் கனவில் கோதா ரம்பையை திருமலைக்கு வரவழைத்த எம்பெருமான் தனக்கான ஆராதனை மணியை கொடுத்து விழுங்கிடச் சொல்ல அவளும் விழுங்கினாள்! எல்லாம் கனவில்!
நிஜத்தில் திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆராதனை மணியும் காணாமல் போய் இருந்தது! ஜீயரின் கனவில் திருவேங்கடமுடையான் தோன்றி, 'கோதா ரம்பையிடம் கொடுத்து மணியை விழுங்கச் சொன்னேன். அதனால் அவள் பிள்ளைப் பேற்றுக்கு ஆளாவாள். அப்பிள்ளை வைணவத்தை பரப்பி அதிசயங்கள் நிகழ்த்துவான்' என்றான். ஜீயரும் தேசிகனின் வருகைக்கு தயாரானார்.
மணியை விழுங்கியதாக கனவு கண்ட அன்றே கருவுற்ற கோதா ரம்பையும் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் குழந்தை பெற்றாள். 'திருவேங்கடநாதன்' என பெயரிட்டு மகிழ்ந்தனர். வைணவ சம்பிரதாயப்படி ஐந்து வயதிலேயே அட்சர அப்யாசம் செய்தனர். ஏழாம் வயதில் உபநயனம்!
தந்தையிடம் அவன் வேதம் கற்றான். நடாதுார் அம்மாளிடம் இதிகாசங்களோடு பதினெட்டு புராணங்களும் அறிந்தான். இருபது வயதில் பாண்டித்யம் பெற்றவனாகி திருமங்கை என்ற பெண்ணை மணந்தான். இந்நிலையில் அவனது மாமா அப்புள்ளார் ஒரு நற்செயல்
புரிந்தார்.
ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று உபதேசம் பெற்று திரும்பிய நிலையில் அணிந்திருந்த பாதுகைகளில் ஒன்று அப்புள்ளாரிடம் இருந்தது. அதை பெட்டியில் வைத்து தந்த அப்புள்ளார் '' ராமானுஜ நெறியில் அவரை குருவாக வரித்துக் கொண்டு நீ உன் கடமைகளை செவ்வனே செய்வாயாக'' என்றதோடு தான் அறிந்த கருட மந்திரத்தை உபதேசித்தார். கருடநதி பாய்ந்திடும் திருவஹீந்திரபுரம் சென்று அங்கிருந்த தேவநாதன் சமேத செங்கமல நாச்சியாரை வணங்கி, அருகிலுள்ள குன்றின் மீதுள்ள அரசமரத்தடியில் அமர்ந்து ஜபம் செய்தான் வேங்கடநாதன்!
இந்த எண்ணம் அவனுக்குள் ஏற்பட அத்திவரதனே காரணம்! மனைவியுடன் காஞ்சியில் வசித்த போது அத்திகிரி வரதனை தரிசித்த பிறகே உண்ணும் பழக்கம் கொண்டிருந்தான். ஒருநாள் எம்பெருமானுக்கு திரையிடப்பட்டு அலங்காரம் நடந்தது. அந்த நேரம் கருட விக்ரகத்தை பார்த்ததும், கருடமந்திரம் ஜபிக்க தொடங்கினான். அப்போது '' வேங்கடநாதா.....திருவஹீந்திரபுரம் சென்று கோடி ஜபம் புரிவாயாக. கருட தரிசனமும், ஹயக்ரீவ மந்திர உபதேசமும் உனக்கு நிகழும். அது உன்னை ஞானச் சூரியனாக்கும். உன்னால் பல சாதனை நிகழவிருக்கிறது'' என ஒலித்த அசரீரிக் குரலே திருவஹீந்திரபுரத்தில் தேசிகனை ஜபம் செய்யத் துாண்டியது.
கோடி முறை ஜபிப்பது சாதாரண விஷயமல்ல. திருவுடையோர்க்கே அது சாத்தியம். வேங்கடநாதனுக்கும் அது சாத்தியமாயிற்று! நாட்கள் சென்ற வண்ணமிருக்க ஒரு மண்டலம் கழிந்தது. கோடி இலக்கை எட்டிய நிலையில், தாடி, மீசையுடன் அள்ளி முடிந்த சடையுமாக ஞானச்சூரியனாக பிரகாசித்த வேங்கடமுடையானை நோக்கி வானில் கருடனும் பறந்து வந்தான்!
தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்