sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விட்டலனின் விளையாட்டு - 1

/

விட்டலனின் விளையாட்டு - 1

விட்டலனின் விளையாட்டு - 1

விட்டலனின் விளையாட்டு - 1


ADDED : மார் 27, 2023 08:42 AM

Google News

ADDED : மார் 27, 2023 08:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெற்றோரை புறக்கணித்த புண்டரீகன்

ஏக்நாத் மகராஜ் எழுதிய 'மாஜே மாஹேர பண்டரீ, விட்டல உபா விடேவரீ' என்று தொடங்கும் 'அபங்க்' பாடலின் பொருள்.

'செங்கல் மீது விட்டலன் நிற்கும் பண்டரிபுரம் என்னுடைய தாய் வீடு. இங்கு பக்தர்கள் 'ஜெய ஜெய' என பக்தி கோஷம் எழுப்புகிறார்கள். கையில் கொடிகளுடன் தாள கோஷத்துடனும் ஆனந்த நடனம் செய்யும் பக்தர்களை கண்டேன். நான் விட்டலனின் திருநாமத்தை முழுமையாக உணர்ந்தேன்'.

'அப்பா, எங்க வகுப்பில் பசங்கள் பெயர் சின்னதா இருக்கு. எனக்கு மட்டும் ஏனப்பா பெரிய பெயரை வச்சீங்க?' மயில்வாகனனின் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டது.

பத்மநாபன் சிரித்தார். 'அதனால் என்ன? நீ பெரிய ஆளா வரும்போது உன் பெயர் தனித்துவமாய் தெரியும். அதனாலேயே பல குழந்தைகளுக்கு உன் பெயரை வைப்பார்கள். தவிர ஆறுமுகப் பெருமானின் அழகான பெயராச்சே மயில்வாகனம்'. அவருக்கு மயில் வாகனம்கிறதாலே அந்தப் பெயர்'

எட்டு வயது மயில்வாகனன் சமாதானம் அடைந்து விட்டான். ஆனால் அவனது தங்கை மைத்ரேயி தன் பங்குக்கு ஒரு கேள்வி கேட்டாள்.

'அம்மாவுக்கு எதுக்காக பத்மாசினின்னு பேர் வச்சாங்க?'

அப்போது அங்கு வந்து சேர்ந்த பத்மாசினி தன் மகளின் தலையை அன்புடன் தடவியபடி 'பத்மம் என்றால் தாமரை. தாமரையை ஆசனமாகக் கொண்டவள் லட்சுமி தேவி. அதனால் எனக்கு அந்தப் பெயரை வச்சாங்க' என்றாள்.

அப்போது மயில்வாகனன் ஒரு கேள்வியை கேட்டான். 'அப்பா, நம்ம பூஜை அறையில் ஒரு சாமி இருக்கே. நீங்க கூட அவரை பாண்டுரங்கன்னு சொல்லி இருக்கீங்க. ஆனால் நம்ம வீட்டுக்கு ஒரு தடவை வந்த என் சிநேகிதன் ராஜு 'அது பாண்டுரங்கன் இல்லே. விட்டலன்'னு சொன்னான்'.

'முருகரை கந்தன், ஆறுமுகன், மயில்வாகனன்னு பலவிதமா சொல்வோம் இல்லையா,அதுபோல பாண்டுரங்கன், பண்டரிநாதன், விட்டலன் எல்லாமே ஒரே சாமியைத்தான் குறிக்கிறது' என்றார் பத்மநாபன்.

'எதனால அப்பெயர்கள்?'

'பண்டரிபுரத்தில் இருப்பதால் பண்டரிநாதன். ஹிந்தியில் ரங்க் என்பது நிறத்தை குறிக்கும் சொல். பாண்டு என்றால் வெண்மை. வெள்ளை நிறத்தில் இருப்பதால் பாண்டுரங்கன்'.

'கண்ணன் வெள்ளை நிறமா அப்பா?'

'கறுப்பு நிறம்தான். சொல்லப்போனால் பண்டரிபுரத்தில் உள்ள அவனது திருவுருவம் கறுப்பாகத்தான் உள்ளது. ஆனாலும் கடவுளைப் பலவிதமாக அழைப்பது பக்தர்களின் வழக்கம்தானே. கண்ணனைக் கூட நீலமேக வண்ணன் என்பார்கள். தவிர வட இந்தியாவில் சலவைக் கற்களில்தான் கண்ணனை வடிவமைப்பார்கள். அதனால் அப்படி அழைத்திருக்கக் கூடும்'.

'அப்போ விட்டலன் என்றால்?'

'மராத்தி மொழியில் விட் என்பது செங்கல்லைக் குறிக்கும். செங்கல்லின் மீது ஏறி நின்றதால் விட்டலன் எனப் பெயர்' என்றார் பத்மநாபன்.

'முருகப் பெருமான் மயில் மீதிருக்கிறார். மகாலட்சுமி தாமரை மீது இருக்கிறாள். யாராவது செங்கல் மீது நிற்பாங்களா?' கேள்வியைக் கேட்கும் போதே சிரிப்பு வந்தது மயில்வாகனனுக்கு.

காரணத்தை விளக்கினார் பத்மநாபன். மற்றவர்கள் ஆர்வத்துடன் அமர்ந்துகொண்டனர்.

அந்தக் கதை சுவையானது மட்டுமல்ல பல நன்னெறிகளை உணர்த்துவதும் கூட.

அசுரர்களும் தேவர்களும் எப்போதுமே எதிர் எதிரணிதான். ஒருமுறை விருத்திராசுரன் என்பவன் இந்திரனோடு போரிட்டான். ஆனால் அவனால் வெல்ல முடியவில்லை. பலத்தால் முடியாததை தவத்தால் அடைய முடியும் என நினைத்தான். காட்டிற்குச் சென்று கடவுளை எண்ணி தவம் புரிந்தான். இது குறித்துக் கேள்விப்பட்டு விருத்திராசுரனின் தலையைத் துண்டித்தான் இந்திரன்.

இறக்கும் போது அசுரனின் பார்வை சற்று தொலைவில் கிடந்த செங்கற்களின் மீது பட்டது. அவன் இந்திரனை நோக்கி 'நீ போர் விதிகளை மீறினாய். நான் தவம் செய்யும் போது என்னைக் கொன்றாய். நீ செங்கல்லாக மாறி பூமியில் கிடப்பாயாக' என்று சொல்லி உயிர் விட்டான். இந்திரன் பதறியபடி திருமாலை நோக்கி வேண்டினான்.

'இந்திரனே... ஒருவன் தவம் செய்யும்போது அவனைக் கொன்றது குற்றமே. தவிர அவன் செய்த தவத்தின் பலனால் விருத்திராசுரன் அளித்த சாபம் பலிக்கத்தான் செய்யும். என்றாலும் தேவலோகத்தின் தலைவனான உனக்கு ஒரு சலுகை அளிக்கிறேன். புண்டரீகனின் ஆசிரமத்துக்கு அருகே செங்கல்லாக கிடப்பாய். உன்மீது நான் எப்போது நிற்கிறேனோ அப்போது சாபம் தீரும்' என்றார் திருமால்.

காலமாற்றம் எவ்வளவு ஆச்சரியமானது! இந்திரனால் ஏமாற்றப்பட்டு அதனால் தன் கணவர் அளித்த சாபத்தால் அகலிகை கல்லானாள். இப்போது அதே இந்திரன், ஒரு அசுரனின் சாபத்தால் கல்லாக மாற வேண்டிய கதி ஏற்பட்டது.

அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தவன் ராமன் என்றால் இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்தது திருமாலின் மற்றொரு அம்சமான கண்ணன்.

புண்டரீகனின் வாழ்க்கையின் முற்பகுதி பாவங்கள் நிறைந்தது. ஒருவன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தான் அவன்.

ஜன்னு என்ற வேதியரும் அவரது மனைவி சாத்யகியும் தங்களின் ஒரே மகனான புண்டரீகனை பாசமுடன் வளர்த்தனர். மகன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தனர். இதற்கெல்லாம் நன்றி பாராட்டாத அவன், அப்படியெல்லாம் செய்வது பெற்றோரின் கடமை என நினைத்தான். இளைஞனான பின் பெற்றோரை அலட்சியப்படுத்தினான். தகாத வார்த்தைகளைப் பேசினான். தகாத பெண்களுடன் உறவாடினான். மனைவி இருந்தால் திருந்தி விடுவான் எனக் கருதிய பெற்றோர் திருமணம் நடத்தினர். ஆனாலும் பலனில்லை. தவறான வாழ்க்கையே தொடர்ந்தான். அறிவுரை கூறிய பெற்றோரை உதைத்தான்.

ஒருமுறை அவனது மனைவி 'காசி என்னும் புனிதநகரம் இருக்கிறது. அங்கே ஒருமுறை சென்று வரலாம்' என்று சொல்ல காசிக்குச் செல்ல திட்டமிட்டனர். ஊர் மக்கள் அவனிடம், 'காசிக்கு செல்லும் போது பெற்றோரையும் அழைத்துச் செல்ல வேண்டும்' என்றனர். வெறுப்புடன் பெற்றோருடன் கிளம்பினான்.

காசியைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் முதுமையை பொருட்படுத்தாமல் அவர்களும் கிளம்பினர். ஆனால் அவர்களைப் பார்த்து ஊரே அதிர்ச்சியடைந்தது.

குதிரையில் மகனும், மருமகளும் ஏறிச் செல்ல பெற்றோ​ர் நடந்தே பயணித்தனர். அது மட்டுமல்ல, 'ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறீர்கள்?' என அவர்களை கோபித்தான். பெற்றோருக்கு ஓய்வளிக்காமல் தொடர்ந்து நடக்க வைத்தான்.

வழியில் காடுகளை கடக்க வேண்டியிருந்தது. ஒருநாள் இரவில் குடிசை ஒன்றில் நால்வரும் தங்கினர். அசதியின் காரணமாக பெற்றோர் உறங்கத் தொடங்கினர்.

புண்டரீகனுக்கு உறக்கம் வரவில்லை. பெற்றோரைப் பார்க்க பார்க்க வெறுப்பு வந்தது. அவர்களை மேலும் பார்க்கப் பிடிக்காமல் குடிசைக்கு வெளியே வந்த போது வியப்பு காத்திருந்தது.

கோரமான உருவத்தோடு காட்சியளித்த மூன்று பெண்கள் அந்தப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். புண்டரீகன் தங்கியிருந்த குடிசைக்கு எதிர்ப்புறம் இருந்த ஆசிரமம் போன்ற குடிலுக்குள் நுழைந்தனர்.

யார் இவர்கள்? எதற்காக நள்ளிரவில் ஆசிரமத்துக்குள் நுழைகிறார்கள்? அங்கு வசிப்பவர் யார்? புண்டரீகன் மனதில் கேள்விகள் எழுந்தன. விடைதான் கிடைக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து அங்கிருந்து மூன்று பெண்கள் வெளிப்பட்டனர். சற்று முன் உள்ளே நுழைந்த அதே மூன்று பெண்கள்தான். இப்போது அவர்கள் தோற்றம் முழுவதுமாக மாறிவிட்டிருந்தது. லட்சணத்துடன் ஜோதிமயமாக காட்சி அளித்தனர்.

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us