ADDED : ஏப் 06, 2023 08:55 AM

வளைந்து பாய்ந்த சந்திரபாகா
ஞானேஸ்வரர் எழுதிய 'ஸர்வ சுக கோடீ ஸர்வ சாஸ்த்ர நிவடீ' எனத் தொடங்கும் 'அபங்'கின் பொருள்.
'எல்லா சுகங்களையும் எளிதில் அடையும் வழி கண்ணன் நாமத்தை இடைவிடாமல் கூறுவதுதான் என சாஸ்திரங்கள் எடுத்து உரைக்கின்றன. உலக விவகாரங்கள் எல்லாம் மாயை. பிறப்பு இறப்பைத் தாண்டுவதற்கு ஹரி நாமத்தை விட வேறுவழி கிடையாது. எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் அவை நாம ஜபத்தால் ஓடிவிடும். புலன்களை அவற்றின் போக்கிற்கு விடாமல் தெய்வ அனுபவத்திற்கு கொண்டு வாருங்கள். உயிர்களிடம் கருணை காட்டுங்கள். கண்ணன் உங்கள் மனதுக்கு அமைதியளிப்பார்.
என் குரு நிவ்ருத்தி தேவர் இந்த ஞானத்தை எனக்கு அருளினார்'.
...
'ஏம்ப்பா, என்ன இருந்தாலும் சாமியை புண்ட ரீகன் காக்க வைத்தது தப்பில்லையா? என மயில்வாகனன் கேட்டான்.
'எதற்காக காக்க வைத்தான் என்பதும் முக்கியம் தானே' என பதில் கேள்வியை வீசினாள் பத்மப்ரியா. அவளுக்கு ஏற்கனவே புண்டரீகன் சரிதம் ஓரளவுக்கு தெரியும்.
'அப்புறம் என்ன நடந்தது என்பதைக் கேட்டால் புரியும். தன்னைக் காக்க வைத்ததில் கண்ணன் கோபப்படவில்லை. சொல்லப்போனால் அவனது செயலைக் கண்டு மகிழ்ந்து 'இனி இந்நகரம் புண்டரீக புரம் எனப்படும்' என அருளினார். அதுவே பண்டரிபுரம் என்றானது'என்றார் பத்மநாபன்.
பின்னர் சிறையிலிருந்து குழந்தை கண்ணனை கூடையில் சுமந்தபடி வசுதேவர் கோகுலத்தை நோக்கி சென்றபோது யமுனையில் வெள்ளம் வந்தது மற்றும் அது அடங்கியது குறித்த சுவையான பின்னணியைக் குறிப்பிட்டார்.
'கண்ணபெருமானை வசுதேவர் துாக்கி வரப் போகிறார். அந்த குழந்தைக் கண்ணனின் காலைத் தொட வேண்டும் என யமுனை ஆர்வமாக இருந்தாள். ஆனால் வசுதேவரோ கண்ணனை ஒரு கூடையில் தன் தலை மீது சுமந்து கொண்டிருந்தார்.
எனவே குழந்தையின் காலைத் தொடும் முயற்சியில் யமுனை நீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்பியது. அதுவே வெள்ளமாகக் காட்சியளித்தது. இதை அறிந்த கண்ணன் தன் பாதத்தின் கட்டை விரலால் எழும்பிய நீரை தொட்டார். மகிழ்ச்சி அடைந்த யமுனை வெள்ளத்தைக் குறைத்துக் கொண்டாள். இரண்டாகப் பிரிந்து வசுதேவருக்கு வழி விட்டாள்'.
பத்மாசனி ரசித்து மகிழ்ந்தாள். மயில்வாகனனும் மைத்ரேயியும் ஆர்வத்துடன் கதையைத் தொடர்ந்து கேட்கத் தொடங்கினர்.
...
ராமபிரானின் கால்பட்டதும் கல்லாக இருந்த அகலிகை சாப விமோசனம் பெற்றது போல கண்ணனின் கால் பட்டதும் செங்கல்லாக இருந்த இந்திரன் சாப விமோசனம் பெற்று தேவலோகம் சென்றான்.
கண்ணன் இடுப்பில் கை வைத்தபடி செங்கல்லின் மீது புன்னகையுடன் நின்றிருந்தான்.
புண்டரீகன் பெற்றோருக்கு பணிவிடை செய்து முடித்தான். அவர்கள் படுத்துக் கொள்ள, புண்டரீகன் அவர்கள் கால்களை இதமாக பிடித்து விட்டான். அவர்கள் உறங்கத் தொடங்கினர்.
பின் வேகமாக கண்ணனை அணுகிய புண்டரீகன் நமஸ்கரித்து அவரைக் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்டான். 'நீ தவறு செய்யவில்லை புண்டரீகா. அன்னையும் தந்தையும் ஒவ்வொருவருக்கும் கண்கண்ட தெய்வங்கள்தான். அவர்களுக்குச் செய்யும் சேவை எனக்கு செய்வதாகும். பாவம் எல்லாம் நீங்கி புண்ணியனாக மாறி விட்டாய். என்ன வரம் வேண்டும் கேள்' என்றான் கண்ணன்.
'செங்கல்லின் மீது நின்ற பெருமானே. விட்டலன் என்ற பெயருடன் இந்தத் தலத்தில் தங்க வேண்டும். உன்னை வழிபடுவோருக்கு அருளை வாரி வழங்க வேண்டும்' என்றான்.
அப்படியே செய்வதாக வாக்களித்தான் கண்ணன். பிறகு 'நீ கேட்ட வரம் பிறருக்கானது. இப்போது உனக்கே உனக்கென்று ஒரு வரம் கேள்' என்றான்.
யோசித்த புண்டரீகன் 'கண்ணா, இந்தக் குடிலில் இருந்து சந்திரபாகா நதி சற்று தள்ளி இருக்கிறது. என் வயதான பெற்றோர்களால் தினமும் அங்கு சென்று ஸ்நானம் செய்துவிட்டு வரமுடியவில்லை. அந்த நீரை பாத்திரத்தில் சுமந்து எடுத்து வந்து தருகிறேன் என்றாலும் அவர்கள் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். நதியில் நேரடியாக ஸ்நானம் செய்வதுதான் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது என்கிறார்கள். இது தொடர்பாக ஏதாவது வரம் அளிக்க முடியுமா?'என்றான்.
அந்த வரத்தை அவன் கேட்டு முடித்த உடனேயே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. சந்திரபாகா நதி சற்று வளைந்து தன் திசையை மாற்றிக் கொண்டு அந்தக் குடிலின் வாயிலுக்கு அருகாமையில் வளைந்து செல்லத் தொடங்கியது.
புண்டரீகன் பரவசத்துடன் 'கண்ணா நீ குழந்தையாக இருக்கும்போது வசுதேவர் உன்னை சுமந்து கோகுலத்துக்குச் சென்றார். அப்போது யமுனையில் வெள்ளம் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அது இரண்டாகப் பிரிந்து வசுதேவருக்கு வழி விட்டது. இப்போது சந்திரபாகா நதி என் வேண்டுகோளை ஏற்று வளைந்து பாய்கிறது. உன் அருளுக்கு எல்லையே இல்லை' என கண்ணனைத் துதித்தான்.
விட்டலனின் புகழ் பாரெங்கும் பரவியது. அவனது புகழைப் பாடுவதில் தனி இன்பம் கொண்டனர் ஒரு தம்பதி.
பஸோபா, நங்கீதா பாய் ஆகிய அவர்கள் இருவரும் விட்டலனின் பரம பக்தர்கள். அவர்கள் தங்கியிருந்த பகுதி அரண். அது பண்டரிபுரத்தில் இருந்து அதிக துாரத்தில் இல்லை. தம்பதியர் இருவரும் அடிக்கடி பண்டரிபுரம் செல்வார்கள். சந்திரபாகா நதியில் குளித்துவிட்டு விட்டலனை தரிசனம் செய்வார்கள். இவர்களுக்கு பிறந்த மகன் சாவ்தா மாலி. அவனும் விட்டலனின் அருமை பெருமைகளை கேட்டுக் கொண்டே வளர்ந்தான்.
அந்தக் குடும்பம் ஒரு தோட்டத்திற்கு நடுவே அமைந்த குடிலில் வசித்து வந்தது. கால ஓட்டத்தில் பெற்றோர் இறந்து விட, சாவ்தா மாலி அனாதையானான். ஆனால் மனதில் தான் தனி ஆளாக இருக்கிறோமே என்ற எண்ணம் இல்லை. இதற்குக் காரணம் சுற்றியிருந்த தோட்டமும் மனதைச் சுற்றியிருந்த விட்டலனின் நாமமும்தான்.
தோட்டத்தில் விதைகளை விதைத்தார். தகுந்த மண், தண்ணீர் அளித்து அவற்றிற்கு உயிர் கொடுப்பார். அவை தளிர்விடும் போதும் மலர் விடும் போதும் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்த மலர்களைப் பார்க்கும்போது விட்டலனின் மலர்ந்த முகம் நினைவுக்கு வரும்.
ஆனால் சாவ்தா மாலி வித்தியாசமானவர். தன் கடமையை கடவுளுக்குச் செய்யும் தொண்டாக நினைத்தார். பண்டரிபுரம் செல்வதை விட நந்தவனத்தை அழகாகப் பராமரிக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அங்கேயே இருந்த ஒரு கண்ணன் ஆலயத்துக்கு அந்த மலர்களை அனுப்பினார்.
அதேசமயம் தோட்டத்தின் ஒவ்வொரு மலரும் விட்டலனையே அவருக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. விட்டலனைக் கடவுள் என்பதைவிட தனக்கு மிகவும் நெருக்கமான நண்பன், வழிகாட்டி என்ற எண்ணம்தான் மனதில் நிறைந்திருந்தது.
ஒருநாள் விட்டலன் அவர் தங்கியிருந்த குடிலுக்கு வர தீர்மானித்தான். அந்த விஜயத்தில் வேறு சில அணுக்கமான பக்தர்களையும் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்தான்.
-தொடரும்
ஜி.எஸ்.எஸ்.,
aruncharanya@gmail.com

