sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விட்டலனின் விளையாட்டு - 5

/

விட்டலனின் விளையாட்டு - 5

விட்டலனின் விளையாட்டு - 5

விட்டலனின் விளையாட்டு - 5


ADDED : ஏப் 09, 2023 01:16 PM

Google News

ADDED : ஏப் 09, 2023 01:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்கள் இழந்தவருக்கு கைகொடுத்த விட்டலன்



ஸந்த் முக்தாபாய் எழுதிய 'ஸந்த ஜேணே' என்று தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.

உலகினர் கூறும் அபவாதங்களை ஸந்த்கள் சகித்துக்கொள்ள வேண்டும். கருணை இல்லாதவர்களிடமும் உயர்ந்த குணத்தை வெளிப்படுத்த வேண்டும். உயர்குணம் கொண்டவர்கள் பிற உயிர்கள் மீது தயவு கொள்வார்கள். யாரிடமும் கோபம் கொள்ளக் கூடாது. எல்லோரையும் கடவுளாகக் கருத வேண்டும். சமநோக்கு இருக்க வேண்டும்.

....

'பண்டரிபுர கோயிலில் உள்ள விட்டலனின் பாதங்களில் பக்தர்கள் தலையைப் பதித்து எடுக்கலாம். அதற்கு அனுமதியுண்டு. அந்தக் கணத்தில் பக்தர்கள் அடையும் சுகானுபவம் வார்த்தைகளில் விளக்க முடியாத ஒன்று' எனக் குறிப்பிட்டார் பத்மநாபன்.

'எங்களையும் ஒருமுறை நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டும்' என கூறிய பத்மாசனி 'அதிருக்கட்டும். நீங்கள் சொன்ன தோட்டக்காரர் கதையில் வேற சில பரம பக்தர்களும் வருகிறார்களே, விட்டலனின் பக்தர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்களோ?' என வியப்பாக கேட்டாள்.

'வியப்பதற்கு எதுமில்லை. சிவ பக்தர்களும் கூட ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்களே. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் ஒரே காலத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு ஒருவரோடு ஒருவர் இணைந்து பல தலங்களுக்கு சென்றிருக்கிறார்கள். திருநாவுக்கரசர் முதிய பருவத்தை எட்டிய போது, ஞானசம்பந்தர் இளம் வயதைச் சேர்ந்தவராக இருந்தார்.

இருவரும் திருப்புகலுாரில் சந்தித்துக் கொண்டனர். அங்கிருந்து பல தலங்களுக்கு சேர்ந்தே சென்றனர். பின் இருவரும் திருமறைக்காட்டை அடைந்தனர். அவர்கள் வருவதை அறிந்த அடியவர்கள் ஆனந்தமடைந்தனர். அவர்களை வரவேற்க மங்கல வாத்தியங்களை இசைத்தனர்.

இருவரும் கோயிலை வலம் வந்து உள்வாயிலுக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் கோயிலின் பிரதான வாசல் ​மூடப்பட்டிருந்தது. பல வருடங்களாக கதவு ​மூடி இருப்பதாகவும் பலர் முயன்றும், மூடிய கதவுகளைத் திறக்க முடியவில்லை என்றும் கூறினார்கள். பின்புற வழியாகத்தான் கோயிலுக்குள் சென்று வழிபடுவதாக கூறினர். இதைக் கேட்டு வருந்திய நாவுக்கரசர், 'பண்ணிநேர் மொழியாள்' எனத் தொடங்கும் பாடலை பாட, கதவுகள் திறந்தன. அனைவரும் ஆனந்தமாக உள்ளே சென்று தரிசித்தனர்'.

குழந்தைகள் இருவரும் புருவங்கள் உயர, ஈடுபாட்டுடன் இந்த நிகழ்வைக் கேட்க, பத்மநாபன் பாண்டுரங்க பக்தர்கள் குறித்து கூறலானார்.

'நீங்கள் கேட்ட கதையிலே கூட ஞான தேவர், நாமதேவர், கூர்ம தாசர், சாவ்தா மாலி ஆகியோர் ஒரே நேரத்தில் வருகிறார்களே. இவர்களில் பக்தர்களும் உண்டு. நண்பராகவே விட்டலனுடன் பழகியவர்களும் உண்டு' என்றார் பத்பநாபன்.

...

மனம் கடவுளிடம் ஒருமித்தால் உடல் ஊனம் ஒரு தடையே இல்லை என்பதற்கு அற்புதமான எடுத்துக்காட்டு கூர்மதாசர் சரிதம்.

பிறவியிலேயே கால்கள் இல்லாமல் பிறந்தவர் கூர்மதாசர் என்ற அந்தணர். மருத்துவர்கள் என்ன முயற்சித்தும் குறை தீரவில்லை. கைகளை ஊன்றியபடிதான் அவர் எங்குமே நகர வேண்டிய நிலை. அப்படிச் செல்லும்போது அவரது உள்ளங்கைப் பகுதிகள் ரணமாகும். அப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வார்.

ஆனால் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் அவர் தொடர்ந்து கைகளை ஊன்றியபடி சென்றது ஹரி நாம சங்கீர்த்தனம் நடக்கும் இடங்களுக்கு மட்டுமே. திருமாலின் பெருமைகளை அறிவதில் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு.

ஒரு முறை விட்டலன் குறித்த பெருமைகளை கதாகாலட்சேபம் சொல்பவர் அடுக்கினார். அதைக் கேட்டவுடன் விட்டலனின் பரம பக்தர் ஆனார் கூர்ம தாசர். உடனடியாக பண்டரிபுரம் விட்டலனை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அதேசமயம் உடனடியாக அல்ல, காலப்போக்கில் கூட தன்னால் பண்டரிபுரம் செல்ல முடியாது என்ற உண்மையும் மனதில் தைத்தது. கால்கள் இல்லாத நிலையில் அவரால் எப்படி செல்ல முடியும்?

என்றாலும் பார்ப்போரிடமெல்லாம் ஆவலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர்களில் சிலர் மவுனமாக இடத்தை விட்டு நகர்ந்தனர். மற்றவர்கள் அவரைப் பார்த்து எள்ளி நகையாடினர். 'கால்கள் இல்லாத நிலையில் இந்தக் கனவு எதற்கு உனக்கு' என்றனர்.

இது போன்ற சீண்டல்கள் அவரை பாதிக்கவில்லை. ஆனால் தன் வாழ்நாளுக்குள் விட்டலனை தரிசிக்க முடியாது போகுமோ என்ற ஏக்கம் அவரை மேலும் பாதித்தது. ஒருநாள் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். 'பண்டரிபுரத்தை நோக்கி யாத்திரையைத் தொடங்கி விடலாம். விட்டலன் எப்படியாவது ஒரு வழி காண்பிப்பான்'

மிகுந்த முயற்சிக்குப் பிறகு ஊர்ந்தபடி நகர்ந்து சென்று அந்த நகரின் எல்லையை அடைந்தார். அப்போது ஓர் இளைஞன் அங்கே வந்தான். 'இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?' எனக் கேட்டான். பண்டரிபுரம் செல்வதாக மெலிந்த குரலில் கூறினார் கூர்மதாசர். இளைஞனின் ஏளனச் சிரிப்பையும் கிண்டல் மொழிகளையும் எதிர்பார்த்த அவருக்கு வியப்பு காத்திருந்தது. அந்த இளைஞனின் முகத்தில் உற்சாகம் ததும்பியது. 'அப்படியா நல்லது நானும் பண்டரிபுரம் தான் செல்கிறேன். எனக்கு நீங்கள் வழித்துணையாக அமைந்து விட்டீர்கள்' என்றான்.

கூர்ம தாசருக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. 'ஐயா நீர் இளைஞர். கட்டுடலோடு காட்சி தருகிறீர்கள். ஆனால் நான் கால்கள் இல்லாதவன். இதை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லையா?' என்றார் ஆதங்கத்துடன்.

அந்த இளைஞன் அசருவதாக இல்லை. 'அதனால் என்ன? நான் என் வேகத்தைக் குறைத்துக் கொள்கிறேன். உங்களோடு சேர்ந்து செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்' என்றான். இருவருமாக நடந்தனர். வழியில் ஆங்காங்கே அந்த இளைஞன் உணவு சமைத்தான். சமைத்ததை கூர்ம தாசருக்கும் பரிமாறினான். அவருக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்தான்.

நடுவே சில இரவுகள் அவர்கள் காட்டில் தங்கியிருந்தனர். அப்போது அவருக்குப் பாதுகாப்பாக அவன் இருந்தான். கூர்மதாசருக்கு வியப்பு, ஆனந்தம். எங்கிருந்தோ வந்த இந்த இளைஞன் ஆதரவாக இருக்கிறானே. 'விட்டலா, நீ இவனை அனுப்பியதற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்' எனத் துதித்தார். இளைஞன் புன்னகை செய்து கொண்டான்.

பண்டரிபுரம் அடைய ஓரிரு நாள் இருந்த நிலையில் வழியில் வகுளாபுரி என்ற நகரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அங்கு அவர்கள் இருவருமாகச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் தோட்டக்காரராக விளங்கிய பரம விட்டல பக்தனான ஸாவ்தா மாலியின் பாடல் அந்த இளைஞனின் காதுகளில் விழுந்தது.

அந்த இளைஞன் உடனே சாவ்தா மாலி இருந்த இடத்தை நோக்கி விரைந்து செல்லத் தொடங்கிவிட்டான். கூர்மதாசர் ஏமாற்றத்துடன் வகுளாபுரி நகரில் தங்க நேர்ந்தது.

இனி தன்னால் விட்டலனை தரிசிக்க முடியாது என்ற ஏமாற்றம் கூர்மதாசரை அழுத்தியது. இவ்வளவு தூரம் வழித்துணையாக வந்த அந்த இளைஞன் திடீரென தன்னைக் கைவிட்டு விட்டானே எனக் கலங்கினார் அவர்.

கைவிடுபவனா கண்ணன்? வகுளாபுரி வரை துணைக்கு வந்தவன் (இளைஞனாக வந்தவன் விட்டலன் என்பதை யூகித்திருப்பீர்கள் தானே?) புண்டரீபுரத்துக்கு அவரை அழைத்துச் சென்றிருக்க மாட்டானா?

கூர்மதாசரை பண்டரிபுரத்துக்கு அழைத்துச் செல்லவில்லை கண்ணன். வகுளாபுரியிலேயே அவரை விட்டுச் சென்றதற்கு ஸாவ்தா மாலியின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பது ஒரு காரணம். வேறொரு முக்கிய காரணமும் உண்டு.

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us