
சென்னையில் மீஞ்சூர் அருகே உள்ள மேலுார் திருவுடையம்மனை காலையிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மனை மதியமும், வட திருமுல்லைவாயில் கொடியிடையம்மனை மாலையிலும் ஒரே நாளில் தரிசிப்பவர்கள் எல்லா நன்மைகளும் பெறுவர். இம் மூன்றிலும் நடுநாயகமாக விளங்கும் திருவொற்றியூர் அம்மன் மீது பக்தி கொண்ட சிறுவனை உலகம் கொண்டாடுமாறு ஞானியாக்கினாள் அம்பிகை.
அவளின் கருணைக்காக இன்றும் ஏங்குவோர்கள் அச்சன்னதியில் தரிசனம் செய்வதை காணலாம்.
படிப்பதற்காக அண்ணன் வீட்டில் வளர்ந்த சிறுவனுக்கு தெய்வவழிபாட்டில் மட்டும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியா திரிகிறாய் என கண்டித்தார் அண்ணன். அதையும் மீறி, கோயில் திறந்ததில் இருந்து நடைசாத்தும் வரைக்கும் நடைபெறும் எல்லா பூஜைகளிலும் கலந்து கொண்டு அங்குள்ள குருக்கள், பெரியோர்கள், துறவிகளுக்கு உதவி செய்தவாறு அங்கேயே பொழுதைக் கழித்து வந்தான். இப்படியே அவன் இருப்பதால் ஒரு நாள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்பதற்காக வீட்டின் கதவை அடைத்து படுத்து விட்டார் அண்ணன்.
அன்று கோயிலில் நடந்த விழாவை பார்த்து விட்டு வீட்டிற்கு வர வெகு நேரமாகி விட்டது. இந்த நேரத்தில் கதவை தட்டினால் அண்ணன் கண்டிப்பாரே என நினைத்து வீட்டுத்திண்ணையிலேயே உறங்கினான் சிறுவன்.
சிறிது நேரம் கழித்து அவனது அண்ணி அவனை எழுப்பி 'வெறும் வயிற்றில் துாங்காதே இதை சாப்பிடு' என்றாள். 'இப்போது தானே நீங்கள் வந்து சாப்பாடு கொடுத்தீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை' என்றான் அவன். 'இல்லை நான் சாப்பாடு தரவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது.'என கேட்டாள் அண்ணி.
அண்ணியின் வடிவில் வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் தான் என்பதை உணர்ந்தான் சிறுவன். அவனே பிற்காலத்தில் ஞானியான வள்ளலாராக வலம் வந்தார். இவர் அன்பே வடிவான சிவன் மீது பாடிய பாடலை படித்தோம் என்றால் எல்லா உயிர்களிடமும் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதைப்படித்தால் புகழ் பெறுவோம்.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபேர் ஒளியே
அன்புரு வாம்பர சிவமே.