
தவம் செய்து யோகங்கள் கைவரப் பெற்ற வரத யோகிக்கு கர்வம் ஏற்பட்டது. தன் சித்து விளையாட்டுகளை மற்றவர் முன் செய்து காட்டி புகழ் பெற்றார். ஒருநாள் அந்த ஊருக்கு துறவி வந்தார். அவரிடம் தன் சக்தியைக் காட்டி நன்மதிப்பு பெற யோகி முடிவு செய்தார்.
அவர் துறவியிடம், “நீண்ட நெடும் தவத்தின் பயனாக பறக்கும் சக்தியையும், தண்ணீரில் மூச்சை அடக்கும் சக்தியும் பெற்றுள்ளேன். மற்றவர்களுக்கு எளிதில் கைவராத பயிற்சிகள் இவை. “ என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார்.
அதைக் கேட்ட துறவி, “யோகியே! பறவைகள் வானில் பறக்கின்றன. புழுக்கள் பூமியின் அடியில் நீண்டகாலம் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீரின் ஆழம் வரை நீந்துகின்றன. இது போன்ற வாழ்க்கை எனக்கும் சாத்தியம் என்கிறீர்! அதனால் உமக்கும், உலகத்துக்கும் ஆகப் போவது என்ன!
மிக உயர்ந்த மனிதப்பிறப்பு எடுத்துவிட்டு புழுவாய், பறவையாய் வாழ்வதில் லாபமென்ன! தற்பெருமையைத் தவிர்த்து விட்டு தர்மத்தை, அன்பை மக்களுக்கு ஊட்டுங்கள். அதுவே உயர்வுதரும் இறைப்பணி,” என்றார்.
தற்பெருமை பேசிய யோகி தலை கவிழ்ந்தார்.
- விஷ்ணு வரதன்