sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனசில் பட்டதை.... (35)

/

மனசில் பட்டதை.... (35)

மனசில் பட்டதை.... (35)

மனசில் பட்டதை.... (35)


ADDED : டிச 15, 2017 10:33 AM

Google News

ADDED : டிச 15, 2017 10:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''குரங்கு போல தாவும் மனசு''

''குரங்கு போல அலைபாயும் மனசு''

''குரங்கு மாதிரி அபகரிக்கும் ஆள்'' இப்படியாக, சொலவடைகள் நம்மிடம் உண்டு. இவை எல்லாமே பொதுப்புத்தி கட்டுக்கதைகள் என நிரூபிக்கும் ஒற்றை அவதாரம் அனுமன். மனித அவதாரத்துக்குத் தான் உச்சங்கள் சாத்தியம் என்பதை மறுதலிக்கும் ஒற்றை அவதாரம் அனுமன்.

பக்தியின் உச்சம் அனுமன்.

பண்பின் உச்சம் அனுமன்.

துாய்மையின் உச்சம் அனுமன்.

துணிவின் உச்சம் அனுமன்.

பராக்கிரமத்தின் உச்சம் அனுமன்.

தொண்டின் உச்சம் அனுமன்.

தெய்வீகத்தின் உச்சம் அனுமன்.

துறவின் உச்சம் அனுமன்.

படைப்பின் உச்சம் அனுமன்.

சேவையின் உச்சம் அனுமன்.

சிறப்பின் உச்சம் அனுமன்.

உயர்வின் உச்சம் அனுமன்.

உயிரின் உச்சம் அனுமன்.

இன்று நேற்றல்ல... விபரம் தெரியாத

சிறுவயது முதலே எனக்கான ஈர்ப்பு அனுமன்...

குழந்தை மாதிரி இடுப்பில் எடுத்து வைத்துக்கொள்ளும் சிறு உருவம் என்றாலும் சரி...

விஸ்வரூபம் எடுத்துக் கடல் தாண்டிய பெரு உருவம் என்றாலும் சரி...தன்னைக் குறுக்கி கை கூப்பும் ஏதுமறியா அன்பு உருவம் என்றாலும் சரி... எனக்கான கதாநாயகன் அனுமன். எனக்கான சூப்பர் ஸ்டார் அனுமன். உப்பிய வாயும், கன்னமும், முகத்தில் பொங்கித் ததும்பும் பக்தியும், ராம ராம ராம என பிரவகிக்கும் நாமமும் எப்போதுமே எனது பிரேமைக்கு உரியவை. அந்தச் சிறு வயதில் துவங்கி, இன்றும், நாளையும், அப்போதும், இப்போதும், எப்போதும் நான் பிரமிக்கும் அவதாரம் அனுமன்.

குறைந்த வார்த்தை, நிறைந்த அர்த்தம் என்பதான ராமாயணக்காட்சி ''கண்டேன் கற்பினுக்கு அணியை'' என்று சொல்வதாகட்டும், எந்த ஒரு மூலிகை என இனம் பிரிக்க முடியாமல் சஞ்சீவி பர்வதத்தை துாக்கி வருவதாகட்டும், பட்டாபிஷேகத்தில் ராமன், சீதை முன்பு வாய் பொத்தி, கை கூப்பி அமர்ந்திருக்கும் நிலையாகட்டும், எல்லாமே ஒரு பாடம்.

எந்தெந்த இடத்தில், தனக்கு இடப்பட்ட பணிக்கேற்ப எப்படிச் செயலாற்றுவது என்பதை சொல்லித்தரும் அவதாரம் அனுமன்.

ஊறு, கடிது ஊறுவன; ஊறுஇல் அறம் உன்னா

தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர

ஏறும் வகை எங்கு உளது?

''இராம'' என எல்லாம் மாறும்;

அதின் மாறு பிரிது இல்

- இப்படியாக ராம பக்தி கொண்டிருக்கும் அனுமனை குழந்தை என கொண்டாடலாம்; நண்பன் என கொண்டாடலாம்; தெய்வம் என கொண்டாடலாம். ஜீவாத்மா, பரமாத்மா என்றும் கொண்டாடலாம்.

மலைப்பகுதியில், காட்டுப்பகுதியில் திரியும் போது, நாம் உண்ணும் உணவையே கேட்டுப் பெறும் அனுமன் எளியவன். எந்த விதமான பிரத்யேக அலங்காரமும் இல்லாமல், செந்துாரம் மட்டுமே பூசிய அனுமன் எளியவன். வாயு மைந்தன் சிறுவனாக இருந்த போது, சூரியனை பழம் என்று கருதி அதைப் பறிக்க, பறந்த அனுமன் எளியவன். அனைத்துக் கலைகளையும் சூரியனிடம் இருந்து ஒற்றை நொடியில் பெற்ற அனுமன் எளியவன்.

பராக்கிரமசாலிகள் எல்லாப் பொழுதிலும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த தேவையில்லை. சரியான பொழுதில் ஆக்ரோஷத்தையும், ரவுத்திரத்தையும், வலிமையையும் வெளிப்படுத்துதலே ஞானத்தின் உச்சம். இந்தப் பாடத்தை வாழ்க்கை பாடமாக எனக்கு கற்று தருபவன் அனுமன்.

இந்தியாவின் பல ஊர்களிலும் அனுமன் தரிசனம் செய்திருக்கிறேன். எல்லாத் திருத்தலங்களிலும், செல்லக்குழந்தை என்ற உணர்வும், பாசமும், அனுமன் மீது ஆழ்ந்த பக்தியும், ஆழமான அன்பும் மேலோங்குவதை உணரமுடியும்.

எல்லா உயிருக்கும் அன்பு செய்ய வேண்டும் என்பதை வாழ்வியலாக உணர்த்தும் தத்துவம் அனுமன். மனித உயிர் மட்டுமே உன்னதம் என்பது உண்மையல்ல என்பதையும் வாழ்வியலாக உணர்த்தும் தத்துவம் அனுமன். பக்தியும், பண்பும், பிரம்மச்சரிய ஒழுக்கமும் மனிதக் கருத்தாக்கம் மட்டுமல்ல, இதை உணர்த்தும் தத்துவம் தான் அனுமன்.

மனத்துாய்மை, குணத்துாய்மை, சொல் துாய்மை, செயல் துாய்மை, சிந்தனைத் துாய்மை, அத்தனையும் வாழ்வியலாக கொண்டால் இறையருள் கிடைக்கும். இறைமையோடு ஒருங்கிணையும் பாக்கியம் கிடைக்கும்.

இறைமையின் அருளுக்கு பாத்திரமாகும் வரம் கிடைக்கும். இதற்கு நிதர்சன சான்று அனுமன்.

கோயம்புத்துார் ராமநாதபுரம் தன்வந்திரி கோயில் உள்ளே குடி கொண்டிருக்கும் அனுமனின் பேரழகு கண் கொள்ளாக் காட்சி. முத்துமணி அலங்காரத்தோடு கம்பீரமான, அனுமன் கருணைக்கடலாக காட்சியளிப்பார். நாமக்கல் ஆஞ்சநேயர் மாயத்தின் அடையாளம். மெய்ஞானத்தின் அடையாளம். அவன் சஞ்சீவி. சிரஞ்சீவி.

எல்லாம் இருந்தாலும் மனசுக்கு நெருக்கமான அனுமன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துாணோடு துாணாக எளிமையாக காட்சியளிக்கும் அனுமன் சிறிய திருவுருவம். ஆனால் அவன் பராக்கிரமத்தின் அதிர்வலைகளை அங்கு நின்றாலே உணர முடியும். அங்கு சுவாசித்தாலே உணர முடியும். உடலும் உயிரும் சேர்ந்து சிலிர்க்கும்.

நமது நெஞ்சில் அனுமனை பதிந்து வைப்போம். நமது மூச்சில் அனுமனை பதிந்து வைப்போம்.

நமது பேச்சில் அனுமனை பதிந்து வைப்போம்.

நமது வாழ்வில் அனுமனை பதிந்து வைப்போம். அதன்மூலம் நமது சுவாசத்தில் பராக்கிரமம் பொங்குவதை உணர முடியும். நமது வாசத்தில் துணிவு பொங்குவதை உணர முடியும்.

நம்மையே நம்மால் உணர முடியும். ''ஆட்றா ராமா... ஆட்றா ராமா...'' என்று குரங்காட்டி ஆட்டுவிப்பது அனுமனை என்கிற புரிதல் இருந்தால் உயிர்கள் அனைத்துக்கும் அன்பு செய்தல் நமக்குச் சாத்தியமாகும். பண்பு செய்தல் நமக்குச் சத்தியம் ஆகும்.

-இன்னும் சொல்வேன்

ஆண்டாள் பிரியதர்ஷினி

அலைபேசி: 94440 17044






      Dinamalar
      Follow us