ADDED : செப் 16, 2016 09:47 AM

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் என்பவர், திருப்பதி நந்தவனத்தில் பூக்களைப் பறித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தார். அவரைச் சோதிக்க விரும்பிய ஏழுமலையான், அர்ச்சகர் ஒருவரை அனுப்பி, சன்னிதிக்கு உடனே வரும்படி ஆணையிட்டதாக சொல்லச் சொன்னார்.
அர்ச்சகரும் அனந்தாழ்வானை அழைக்கவே, அவர் “வருகிறேன்” என்று சொன்னாரே தவிர, பெருமாளைக் காணச் செல்லவில்லை.
மாலை தொடுக்க நீண்ட நேரமாகி விட்டது. அதன் பின் பூக்கூடையைத் தலையில் சுமந்தபடி சன்னிதிக்குச் சென்றார். ஏழுமலையானோ கோபத்துடன் அனந்தாழ்வானிடம், “நான் அழைத்த போதே ஏன் இங்கு வரவில்லை. என் கட்டளையை மீறிய உன்னை மலையை விட்டு துரத்தினால் என்ன?” என்றார்.
“என் குருநாதர் ராமானுஜர் மலர் தொடுக்கும்படி கட்டளையிட்டிருந்தார். தெய்வத்தின் உத்தரவை விட குருவின் கட்டளையே உயர்ந்தது. அதை மீறி உமக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கில்லை. நீரும் என்னைப் போல இந்த மலைக்கு குடி வந்தவர் தானே! எனக்கும் உமக்கும் மலையில் சம உரிமை இருக்கிறது. நீர் வேண்டுமானால் என்னை விட சிலகாலம் முந்தி வந்திருக்கலாம். அவ்வளவு தான்,” என்று சட்டென பதிலளித்தார்.
“உன் குரு பக்தியை உலகிற்கு உணர்த்தவே இவ்வாறு நாடகமாடினேன். தெய்வத்தை விட குருவே உயர்ந்தவர் என்பதை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்,” என்று வாழ்த்தினார் ஏழுமலையான்.