ADDED : செப் 02, 2023 05:40 PM

காஞ்சி மஹாபெரியவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை முன்னாள் அமைச்சர் கே.ராஜாராம் விளக்குகிறார்.
''எனக்கு விவசாயத்துறை பொறுப்பு தரப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் வறட்சி நிலவியது. காஞ்சி மஹாபெரியவரின் நினைவு வரவே, காஞ்சிபுரம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியை முடித்ததும், மடத்திற்கு சுவாமிகளைத் தரிசிக்க வருவதாக தகவல் அனுப்பினேன். மடத்தின் பொறுப்பாளர் திரு. நீலகண்ட அய்யர் சிறுவயது முதலே என்னை நன்றாக அறிந்தவர். என்னைக் கண்டதும், 'இன்னும் ராஜாராம் வரவில்லையா?' என பெரியவா கேட்டார். இப்போது கண் அயர்ந்து துாங்குறார்' என்றார்.
'நான் சுவாமிகளைத் தரிசித்து விட்டு மட்டும் செல்கிறேன்' என அவர் படுத்திருந்த மேடைக்கு எதிரில் நின்று கும்பிட்டேன். ஓரிரு நிமிடத்தில் சுவாமிகள் எழுந்தார். என்னைப் பார்த்ததும், 'எப்போ வந்தே?' எனக் கேட்டார். 'இப்போ தான் சுவாமி' என்றேன். 'எதற்காக என்னைப் பார்க்கணும் என தகவல் அனுப்பின?' எனக் கேட்டார்.
'எங்கும் மழையில்லே... இந்த நேரத்தில் விவசாயத்துறை அமைச்சர் பதவி தந்துள்ளார்கள். மழையில்லாமல் போனால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எப்படி கிடைக்கும்?
யாகம் செய்தால் மழை வரும் என்கிறார்கள், தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளவே நேரில் வந்தேன்' என்றேன். கண்மூடி தியானித்து விட்டு, 'நாளைக்கே காமாட்சியம்மன் கோயிலில் யாகம் நடத்த ஏற்பாடு செய்றேன்' என்றார். சுவாமிகளுக்கு நன்றி சொல்லி விடைபெற்றேன்.
அன்று மாலையில் செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் துாங்கியபடி ஸ்ரீபெரும்புதுாரை நோக்கிப் பயணித்தேன். திடீரென பலத்த காற்று வீசவே எழுந்து விட்டேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். காரின் முன் கண்ணாடி மீது குடத்தில் இருந்து கொட்டுவது போல் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்படியொரு கனமழை! காஞ்சி மஹாபெரியவர் கொடுத்த வாக்குறுதி சில மணி நேரத்திற்குள்ளாகவே பலித்தது. பூமி எங்கும் குளிர விவசாயத்துக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைத்தது'' என்றார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.