
நான் நடந்தேன் அன்றைக்கு, கிட்டத்தட்ட ஆறுமாதம் கழித்து நடந்தேன். இடது காலையும் ஊன்றி யாரையும் பிடித்துக் கொள்ளாமல் நடந்தேன். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் இந்த மாயம் நடக்கும் என்று ஆறு மாதம் முன்பு யாராவது எனக்கு சொல்லி இருந்தால் கேலியாகச் சிரித்திருப்பேன். ஆனால், மாயங்களும் மாயா ஜாலங்களும் வாழ்வில் இயல்பாக நடக்கின்றன. இதை நான் உணர ஆறு மாதங்கள் ஆயின.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2016 செப்.9, திங்கள்கிழமை... ரிஷிகேஷ்...
அதிகாலை நேரம்...பனியும், குளிரும் கலந்து மனசெல்லாம் மனோரஞ்சித வாசனை நெகிழ்ந்த நேரம்.
சிவன் தரிசனம் நெஞ்சில் சுமந்து ஹெலிகாப்டர் சரிவில் கால் வைத்தது தான் தெரியும். இடது பாதம் சட்டென்று எசகுபிசகாக வழுக்கியது. காலில் போட்டிருந்த ஷூவைத் தாண்டி பாதம் விறுவிறுவென வீங்கியது.
ஒற்றை வினாடி தான்! வாழ்க்கை திசை மாறியது. எலும்பு முறிவு.. அறுவை சிகிச்சை.. மருத்துவமனை வாசம்...வீட்டோடு முடக்கம்.. நிற்கவில்லை.. நடக்கவில்லை... நிமிரவில்லை..குனியவில்லை. ஏதுமே செய்யாத முதல் மூன்று மாதங்கள்... ஜன்னல் வாழ்க்கை தான் எனக்கு வாய்த்தது.. செவ்வக வாழ்க்கை.. செவ்வக ஜன்னலுக்கு இந்த பக்கம் நான்.. அந்த பக்கம் உலகம்...
நான் நகராமல் கிடந்தேன். உலகம் வேகமாக நகர்ந்து கொண்டே இருந்தது. காலில் மாவுக்கட்டுடன் வலிவாழ்க்கை. ஏதாவது துரும்பு கிடைக்காதா? ஏதாவது வழி கிடைக்காதா?
ஏதாவது வெளிச்சம் கிடைக்காதா? இப்படி எல்லாம் தத்தளித்த காலகட்டம்.
என் கணவர் பாலரமணி எனக்கொரு சேதி சொன்னார். “மனசின் வலியையும், தேடும் வழியையும் ஒரு தாளில் எழுதித்தா. கொளஞ்சியப்பர்கோவிலில் ஒரு வித்தியாசமான பிரார்த்தனை இருக்கிறது. அங்கே, இந்த வேண்டுதலை ஒரு பிராது மாதிரி மூலவருக்குத் தர வேண்டும். பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்” என்பதே என்னவர் எனக்குச் சொன்னது.
நான் நடக்க வேண்டும். இது நடக்குமா? இது தான் என் பிராது (வேண்டுதல்). கண்ணீர் மொழியில், வலியின் வார்த்தையில், நம்பிக்கை சுமந்து எழுதித் தந்தேன். எனக்காக, என்னவர் பிரார்த்தனை செய்து கொளஞ்சியப்பரிடம் வேண்டுதல் பிராது கொடுத்தார்.
நம்பினால் நம்புங்கள். நான் கொளஞ்சியப்பர் கோவில் பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி நடந்தேன். மூன்று மாதம் முன்பு எழுதிக் கொடுத்த பிராது வேண்டுதலை வாபஸ் பெற்று கொளஞ்சியப்பருக்கு அர்ச்சனை செய்தேன் என்பது நம்ப முடியாத நிஜம்.
அது ஒரு வித்தியாசமான கோவில்.
படாடோபம் இல்லை, பகட்டு இல்லை, ஆரவாரமான அலட்டல் இல்லை, எளிய கிராமத்துக் கோவில். கோவிலுக்குள் ஆடுகள், குரங்குகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு காலத்தில் நந்தவனமாக இருந்த இடத்தில் இப்போது இரும்பு வலைக்குள் இருக்கும் மான்களுக்கு பக்தர்கள் காய்கறி, பழம் வாங்கித் தருகிறார்கள். கொளஞ்சியப்பர் சுயம்பு... பக்கத்திலேயே அண்ணன் விநாயகர்... ஒரு பக்கத்தில் முனியப்பர்.. காலை 6:00 - இரவு 9:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அர்ச்சனையும், அபிஷேகமும், பூஜையும் தொடர்ந்து கொண்டேயிருப்பது கண் கொள்ளாக்காட்சி. கொளஞ்சியப்பர் பீடம் விஸ்வரூபம் அல்ல. ஓரடி உயரமே உள்ள சுயம்பு. பார்த்தால் பரவசம் பொங்குகிறது. துாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு சோறுாட்ட மாட்டோமா என்று மனசு பரபரக்கிறது. 'அதோ நிலா பாரு... ஆ காட்டு' என்று பருப்பு சாதம் ஊட்டி விட வேண்டும் என்று அடிவயிறு துடிக்கிறது.
ஒரு நடை போய் வாருங்கள். மனசின் அழுத்தத்தை, பாரத்தை, வலியை, வேதனையை, கண்ணீரை, கவலையை, மூச்சுத்திணறலை, பரிதவிப்பை, பரபரப்பை எழுதி கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கொடுங்கள். தீர்வு கிடைத்ததும், கோவிலில் அர்ச்சனை செய்து பிராதை திரும்ப பெறுங்கள். இது மாயமல்ல, மந்திரமல்ல; மாயாஜாலமல்ல எனக்கு, என் காலுக்கு நேர்ந்த நிஜம்.
முருகன் தகப்பன்சாமி அல்லவா...
ரிஷிகேஷ் சிவனின் திருவிளையாடலை கொளஞ்சியப்பராக, மகன் சரி செய்த சத்தியசாட்சி நான்.
கொளஞ்சியப்பரே சரணம்.
ஆண்டாள் பிரியதர்ஷினி