
சின்னஞ்சிறு பெண் போலே
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே
ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்...
பெண் அவளின் கண்ணழகை
பேசி முடியாது
பேரழகுக் கீடாக
வேறொன்றும் கிடையாது
மின்னலைப் போல் மேனி
அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள்
எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் ஜடை போட்டு
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக
நர்த்தனம் ஆடிடுவாள்
இந்த பாடல் எப்போதுமே என்னை உருக்கும்.
சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எப்போதுமே என்னை நிறைக்கும்.
அன்றொரு நாள்... மதுரை மண்... மீனாட்சிஅன்னை திருக்கோவில் பிரகாரம்... அம்மையை தரிசித்து விட்டு பொற்றாமரைக் குளத்து அருகே அமர்ந்து இருந்தேன். அந்த படிக்கட்டின் குளுமை... சுத்தக் காற்றின் குளுமை... அந்த தண்ணீரின் குளுமை... எல்லாமே குளுமையிலும் குளுமை.
அந்த நேரத்தில் மனதில் ஓடிய பாடல்- சின்னஞ்சிறு பெண் போலே..
ஸ்ரீதுர்க்கை ஆனால் என்ன? மீனாட்சி ஆனால் என்ன?
கன்னியாகுமரி சிறுமியானால் என்ன? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆனால் என்ன? காசி விசாலாட்சி ஆனால் என்ன?
வைஷ்ணவி தேவிஆனால் என்ன?
எல்லாமே அம்மையின் வடிவம் தான்....
அன்னையின் வடிவம் தான்....
மனசில் பாடல் இசைக்க இசைக்க- என் கண்ணில் கட்டுப்படுத்த முடியாமல் கன்னத்தில் வழிந்தது.
''ஏம்மா... அழறே.....? மனசு வலிக்குதா?''
ஏதோ குரல் என்னை உலுக்கியது. எதிரே ஒரு சிறுமி... பத்து வயது இருக்கும். பளிச்சென்ற புன்னகையும், ஒருவித வெளிச்சமுமாக இருந்தாள்.
''மனசு வலி இல்ல. மனசு நிறைவு... அம்மை மனசுக்குள்ள நுழைஞ்சிருந்தா... அந்த சந்தோஷம்... ஆமா.. நீ யாரு? தனியாவா வந்திருக்கே?''
''நா மீனாட்சியோட மக...''
''எந்த மீனாட்சி?''
''இந்த மீனாட்சி... வேற யாரு?''
தீர்க்கமான பதில்.
''உன் அம்மா எங்கே?''
''மீனாட்சி தான் என் அம்மா...''
அவளின் பத்து வயசை மீறிய பக்குவமான பதில்.
என் பக்கத்தில் உட்கார்த்தி வைத்தேன். அவளின் பிஞ்சு விரலை பிடித்துக் கொண்டேன். வேறேதும் பேசத் தோன்றவில்லை.
''எனக்கு அம்மா அப்பா யாருமே கிடையாது. பாட்டி தான் வளர்த்தாங்க. அவங்களும் போன வருஷம் செத்துப் போயிட்டாங்க. உறவுக்காரங்க யாருமே என்னை சேர்த்துக்கலே.. எங்க வீட்டுக்கு வந்திடாதே... போ... பிச்சை எடுத்துப் பொழைச்சுக்கோன்னு விரட்டிட்டாங்க.''
''பிச்சையா எடுக்கறே?''
''ம்ஹும். ஒரு வீட்டுல பாப்பாவைப் பார்த்துக்கறேன்... கொஞ்ச நேரம் கோயிலுக்கு வந்திட்டு போவேன். இந்த மீனாட்சி தானே என் அம்மா... அவளைப் பார்த்து பேசிட்டு போவேன்...''
சன்னமான குரல். சத்தியமான வார்த்தை. அந்தச் சிறுமியை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
''உனக்கு ஏதாவது தரணும் போல இருக்கு. ரூபா தந்தா வாங்கிப்பியா?''
தயக்கமாகத் தான் கேட்டேன்.
''ரூபா வேண்டாமா... வேலை பண்ற வீட்டிலேயே சாப்பாடு. அவங்களே பாவாடை, சட்டை தந்திடுவாங்க. தலைக்கு எண்ணெய் தந்திடுவாங்க.''
உறவு ஒன்றுமே இல்லாத குழந்தை... பணம் ஒன்றுமே இல்லாத சிறுமி... ஆனால், எதற்குமே ஆசைப்படாமல் பணம் ஏதும் வேண்டாம் என்கிறாளே. எத்தனை பெரிய போதனை... எவ்வளவு பெரிய துறவு இது....
எனக்கு மனசு கசிந்தது.
''எனக்காக இதை வாங்கிக்கோ செல்லம்...''
நூறு ரூபாய் தாளை அவள் கையில் திணித்தேன்.
ரூபாயோடு எழுந்தவள் ஓடினாள்.
பிரகாரத்தில் இருந்த உண்டியலில் அதைப் போட்டு விட்டு, மறுபடியும் என்னிடம் ஓடி வந்தாள்.
''எனக்கு ஏதாச்சும் தரணுமா?'
''ம்...''
''எனக்கு ஒரு முத்தம் குடுங்கம்மா.. அதுக்குத் தான் எங்கம்மா இல்லியே...''
வாரி கட்டியணைத்து சிறுமிக்கு முத்தம் தந்தேன். சின்னஞ்சிறு பெண்ணின் கன்னத்தில் மீனாட்சி வாசம் வீசியது. அது கடவுளைத் தரிசித்த நொடி.. மீனாட்சியை தரிசித்த நொடி....
ஆண்டாள் பிரியதர்ஷினி