
ஒவ்வொருவர் வாழ்க்கையும், அனுபவமும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொருவரும் உணர்கின்ற இறைமையும் ஒவ்வொரு மாதிரி. இந்த வேறுபாடும், வித்தியாசமும் மட்டும் தான் இந்த வாழ்க்கையின் அலாதி சுவாரஸ்யமே...
காலம் காலமாக பழக்கப்பட்ட பாதை பாதுகாப்பானது என்கிறது ஒரு கூட்டம். புதிய பாதை தான் சுவாரஸ்யமானது என்பது இன்னொரு கூட்டம். புதிது எதுவுமே வேண்டாம் என்பது ஒரு மனநிலை. பழையது எதுவுமே வேண்டாம் என்பதும் ஒரு மனநிலை. எந்த மனநிலை நமக்கு சவுகர்யமாக இருக்கிறது என்பதில் தான் நமது விடியலும், இரவும் நிர்ணயமாகிறது.
ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் ஓர் அலாதியான கருத்தாக்கம் சொல்கிறது.
''கங்கையில் ஆடியும் கடலில் மூழ்கியும்
நோன்புகள் நோற்றும் தானங்கள் செய்தும்
பிறவிகள் நுாறும் எடுத்த பின்னரும்
ஞானமில்லையேல் முக்தியும் இல்லையே...''
இதையே எல்லாப் பொழுதும் என்னை வழி நடத்தும் கவிதையாக நான் நினைப்பேன். வெளிப்புற அடையாளங்கள், பூச்சுகள், உருவங்கள் என்று வழிபாடு செய்வது ஒருவகை. காற்றாக கரைந்து, கற்பூரமாக நிறைந்து, நேற்றாக, இன்றாக, நாளையாக, எப்போதும் நிறைந்திருக்கும் காலத்தின் அரூபம் போல மனதை பழக்கப்படுத்துவது ஒரு வகை.
உருவமும் எனக்குப் பிடிக்கும். அருவமும் எனக்குப் பிடிக்கும். பாதாதி கேசம், அலங்காரமும் எனக்கு பிடிக்கும். துறவுக் கோலமும் எனக்கு இசைவானது தான். சம்பிரதாயங்களும் எனக்கு ஈர்ப்பானது தான். மரபு சாராத விஷயங்களும் எனக்கு விருப்பமானது தான். பட்டுப் பீதாம்பரமும் ஓர் அழகு. பழநியாண்டியின் கோவணமும் ஓர் அழகு.
கங்கை பேரழகு. கையளவு தீர்த்தமும் ஓர் அழகு. திருவண்ணாமலை தீபம் பேரழகு. அகல் விளக்கு ஒளி ஓர் அழகு. விஸ்தாரமான வழிபாடு பேரழகு. வெறுமனே கைகூப்பி நிற்பதும் ஓர் அழகு.
பிரம்மாண்டமான பிரகாரம் பேரழகு. உள்ளங்கை அளவு சிறிய கோயிலும் ஓர் அழகு. கோயிலுக்கு செல்வது என்பது பேரழகு.
கோயிலுக்கு செல்லாமல், நல்ல மனசோடு யாருக்கும் தீங்கு செய்யாமலிருப்பதும் ஓர் அழகு. உபவாசம் பேரழகு. பரம திருப்தியாக சாப்பிட்டு வாழ்த்துவதும் ஓர் அழகு. மவுனம் பேரழகு. ஆசிகள் சொல்லி வாழ்த்துவதும் ஓர் அழகு. சம்பிரதாயமான இசை பேரழகு. எந்த அர்த்தமும் இல்லாத மழலைச் சொல் ஓர் அழகு. இளமை பேரழகு. உடல் முழுதும் சுருக்கங்களுடன் கூடிய முதுமை ஓர் அழகு. பசுமை இலை பேரழகு. சருகும் ஓர் அழகு. எல்லாமே நமது பார்வையில் தான் நிர்ணயமாகிறது.
ஆத்திகம் எனக்கு பிடிக்கவில்லை.
நாத்திகம் என்பதும் பிடிக்கவில்லை.
மதத்தினைப் போலொரு போதையில்லை இப்படிச்
சொல்வதால் நானொரு மேதையில்லை.
பூஜை புனஸ்காரம் நம்பவில்லை நான்
சடங்குகள் செய்தே வெம்பவில்லை
கட்டுக் கதைகளில் இஷ்டமில்லை நான்
வணங்காமல் சுவாமிக்கும் நஷ்டமில்லை.
உன் மதம் என்பது உன் வசதி
என் மதம் என்பது என் வசதி
எனதே உயர்வெனில் பெரிய சதி நம்
மனமே இறைவன்! நெஞ்சில் பதி!
பூமியே எனது பூஜையறை!
எனக்கென இல்லை வேறுகுறை!
ஒவ்வொரு உயிரும் அட்சதையே! அந்தக்
கோயிலில் உள்ளது கற்சிலையே!
அன்பு அன்பு என் மதம் என்பேன்!
புன்னகையே என் வழி என்பேன்!
பார்க்கும் உயிரெல்லாம் சுவாமியடா!
அந்தக் கல்லறை கூடக் கோயிலடா!
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில், ஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பட்ட திருக்கோயில், குற்றாலச் சாரலும், அருவியும் நம்மை ஆசீர்வதிக்கும் திருக்கோயில். அகத்திய மாமுனிவரால் நிர்மாணிக்கப் பட்டதாக சொல்லப்படும் திருக்கோயில். ஆடி மாதத்தில் ஒரு லட்சம் திருவிளக்குகள் ஏற்றப்படும் திருக்கோயில், சுயம்புவான குற்றாலநாதர், செண்பகக்குழல்வாய் மொழி, பராசக்தி அம்மை, பலாமரம் இதெல்லாம் எது சொர்க்கம் என்பதை நமக்கு சொல்லும்.
நம் கைக்கு பக்கத்திலிருக்கும் பொக்கிஷம், கைலாசநாதர் திருக்கோயில். யுகம் யுகமாய் பாடப்பட்ட தேவாரம் அந்த காற்றில் கலந்திருக்கிறது. காலம் காலமாக ஆசீர்வதிக்கும் ஆதிபழமையான திருநீறு, அந்த திருக்குற்றால மலைக்கே வாசனை தருகிறது. அம்மையப்பனின் தெய்வீக திருக்கோலம் நம் வாழ்க்கைக்கே வானவில் தருகிறது. அகத்திய மாமுனி பீடம் நம் தமிழுக்கு ஈரம் தருகிறது.
போதும் சாமி! இது போதும்! எனது இந்த வாழ்க்கைக்கு இந்த தரிசனம் பெரும்பேறு என்று சொல்ல வைக்கும் திருக்கோயில்.
குற்றாலத்தின் குரங்குகள் பாக்கியவான்கள்; குற்றாலத்தின் மக்கள், மரங்கள் பாக்கியவான்கள்; குற்றாலத்தின் சகலமும் பாக்கியவான்கள்; குற்றாலநாதரின் காலடியில் கைகூப்பி வணங்கும் போது எந்த வேண்டுகோளும், பிரார்த்தனையும், தேவையும் மனசில் தோன்றாது.
இது போதும் இந்த பாக்கியம் போதும். ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த ஆசீர்வாதம் போதும், என்பதே நம் மனசில் எதிரொலிக்கும்.
குற்றாலம் குளிர்ச்சியாக இருக்கும். குற்றாலீஸ்வரர் கோயில் வெப்பமாக இருக்கும். குற்றாலம் மூலிகை வாசனையோடு இருக்கும். குற்றாலீஸ்வரர் கோயில் ஜென்மாந்திர வாசனையோடு இருக்கும். குற்றாலம் நமது ஜனனம், மரணம் சொல்லும். நமது சுவாசத்தின் காரணம் சொல்லும். நமது கருப்பை இருப்பையும், கல்லறை இருப்பையும் குறியீடாக காட்டும். குற்றாலநாதரும் பராசக்தி அம்மையும் புனிதக் குறியீடுகள். புனித புதிர்கள். புதிர்களின் விடை தெரியும் முன், புதிர்களை அறிந்து கொள்வது அவசியம். புதிர் நம் சிற்றறிவு. புதிரின் பதில் பேரறிவு.
இன்னும் சொல்வேன்
அலைபேசி: 94440 17044
ஆண்டாள் பிரியதர்ஷினி