
இப்படியும் ஒரு பண்டிகை, கொண்டாட்டம், நல்லெண்ணம், சமத்துவம், சகோதரத்துவம் இருக்க முடியுமா?
இத்தனை உணர்வும் ஒட்டு மொத்தமாக ஆக்கிரமிக்கும் விழா உண்டென்றால் அது பொங்கல் தான். தமிழர்கள் பண்பாட்டின், தோழமையின், இயற்கை வழிபாட்டின், ஆரோக்கிய வாழ்வின் முன்னோடிகள்.
இத்தனைக்கும் ஒற்றை பதில் பொங்கல்தான்.
நம் முன்னோடிகள், தெய்வம் என்றும், கடவுள் என்றும் தனியான கற்பிதங்களை கும்பிடும் முன்பே, தங்களை வாழ வைக்கும் இயற்கையை இறைவனாக கொண்டாடினர். தங்கள் உழைப்பையும், வியர்வையையும், அறுவடையையும், ஆனந்தத்தையும் திருவிழாவாக கொண்டாட முடியும் என்பதை சொல்வது தான் பொங்கல்.
தைப் பொங்கல், தலைப் பொங்கல், மகர சங்கராந்தி, அறுவடைத் திருநாள், கரும்பு திருநாள், மஞ்சள் திருநாள், சர்க்கரைப் பொங்கல் திருநாள், போகிப் பெருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் இப்படியெல்லாம் உழைப்பை கொண்டாட ஒரு திருநாள். வாழ்க்கை, உழைப்பு, இறைமை, கோயில், பக்தி எல்லாமே ஒரே நேர் கோட்டில் அமைய வேண்டும் என்பதை வாழ்வியலாக கோர்த்து கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்.
'கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்பது நிதர்சனம்.
இனிப்புச் சுவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் தரும். இனிப்பு ஒருவருக்கு அமுதமாகும். இனிப்பு ஒருவருக்கு விஷமாகும். இனிப்பு ஒருவருக்கு விருந்தாகும். ஒருவருக்கு மருந்தாகும்.
ஒருவருக்கு இறை; ஒருவருக்குத் திரை; ஒருவருக்குக் கடவுள்; ஒருவருக்கு கல்; ஒருவருக்கு மந்திரம்; ஒருவருக்குத் தந்திரம்; ஒருவருக்கு உண்மை; ஒருவருக்கு இன்மை.
எனவே, இறை உணர்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கோடு போட்டு, கட்டம் போட்டு, சட்டம் போட்டுச் சொல்ல முடியாது. இறை உணர்வு என்பது காற்று போன்றது; கையால் பிடிக்க முடியாதது; உருவமற்றது; உணரத்தான் முடியும்.
இப்படிப்பட்ட இறைமையை நம்மவர்கள் கலப்பையாக, ஏராக, உழவு மாடுகளாக, விதையாக, விளைச்சலாக, அறுவடையாக, செல்வமாக, செழிப்பாக பார்த்தார்கள்; சூரியனை தெய்வமாகப் பார்த்தார்கள்; மாடுகளை தெய்வமாகப் பார்த்தார்கள்; கன்றுகளை தெய்வமாகப் பார்த்தார்கள்.
தோகையுடன் கூடிய கரும்புகள், குலை குலையான மஞ்சள், பசும் வாழை இலைகள், செழிப்பான பழங்கள், காய்கறிகள், புத்தரிசி, பருப்பு, வெல்லம், பசும்பால் என்று எல்லாமே இறைமையின் அவதாரம் தான்.
சோம்பி இருக்கச் சொல்லாததே இறைமை; வீணடிக்காத வாழ்க்கையே இறைமை; உழைப்பே இறைமை; வியர்வையே இறைமை; இந்த உன்னத உணர்வின் வெளிப்பாடே பொங்கல் விழா.
இந்தக் கருத்தாக்கத்தின்படி, பிரபஞ்சமே பெருங்கோயில்; புனித மண்ணே திருநீறு; மழை நீரே தீர்த்தம்; எல்லாமே இறைமை என்று வணங்கலாம்.
குடும்ப உறவுகள்; சகோதர பாசம்; ஐந்தறிவு ஜீவன்களிடமும் அன்பு; முன்பின் அறியாதவர்களிடமும் பாசம்;
உழைப்பவர்களிடமும் மரியாதை என்பதே நாம் இறைமைக்கு செய்யும் பூஜை. உழைப்பவர்களின் வியர்வை காயும் முன் கூலியை கொடுக்க வேண்டும்;
உழைத்தவன் வயிறு காயும் முன்பே சோறு கொடுக்க வேண்டும் என்பது தான் பொருளாதாரம் சொல்லும் வேத மந்திரம். இறைமைக்கும், மனிதனுக்கும், பிற உயிரினத்திற்கும் சோறே பெருந்தெய்வம் என்பதை உரக்கச் சொல்லவே பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இன்றைக்கு எந்தக் கோயிலுக்குச் செல்வது? எந்த இறைவனை வணங்குவது? என்பது பற்றிய சிந்தனை எதுவுமே தேவையில்லை.
உழைத்து கருத்திருக்கும் உழைப்பாளர்களை கும்பிடலாம்; செழித்து சரிந்திருக்கும் செந்நெல்லை கும்பிடலாம்; கரும்பை கும்பிடலாம்; வெல்லத்தை கும்பிடலாம்; பொங்கி வழியும் பசும்பாலை கும்பிடலாம்; தித்தித்திருக்கும் சர்க்கரை பொங்கலை கும்பிடலாம்; காளைகளை கும்பிடலாம்; காணும் பொங்கலில் ஊர்வலம் வந்து காணும் எல்லாவற்றையும் கும்பிடலாம்.
எல்லை இல்லாத இறைமையை எங்கெங்கும் உணர்வதே பேரின்பம்; காணும் காட்சியெல்லாம் கடவுளை உணர்வதே பேரின்பம்; ஒவ்வொரு சுவாசத்திலும், வியர்வை துளியிலும், செயலிலும், கடமையிலும், உறவிலும், உயர்விலும் இறைமை என்பது தான் நிஜமான இறைமை; நிஜமான இறைவன்; பொங்கலே இறைவன்; இறைவனே பொங்கல்.
இன்னும் சொல்வேன்
அலைபேசி: 94440 17044
ஆண்டாள் பிரியதர்ஷினி