
உலகத்தின் எந்தக் கோடீஸ்வரன் ஆகட்டும். எந்த ராஜாவோ, ராணியோ ஆகட்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரி பாரபட்சமின்றி தரப்படுவது, ஒரு நாளின் 24 மணி நேரம்.
கடவுளுக்கு பிடித்தவர் என்பதால் ஒரு நாளின் நீளம் அதிகமாவதில்லை. கடவுளுக்கு நெருக்கமில்லாதவர் என்பதால் நாளின் நீளம் குறைவதுமில்லை. கடவுளுக்கு எல்லா உயிரும் சமம் தான். நீதியின் முன் அனைவரும் சமம் என்பது சில சமயங்களில் மாறலாம். ஆனால், கடவுளின் முன் அனைவரும் சமம் என்பது எந்த சமயத்திலும் மாறுவதே இல்லை.
இதற்கெல்லாம் சத்திய சாட்சி தான் சூரியன், சந்திரன், மழை, காற்று, பூமி எல்லாமே அதன் கடமையை சரிவர செய்கிறது. அவற்றுக்கு கேள்விகள் கிடையாது. கடமை தவறுதல் கிடையாது. விருப்பம் கிடையாது, வெறுப்பும் கிடையாது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று கடமையே கண்ணாக கிடப்பவை.
நமக்கு தான் கடவுள் மீது கோபம், வெறுப்பு, கேலி, ஆங்காரம், நம்பிக்கை இன்மை, கிண்டல் எல்லாம் உண்டு.
கேள்வியே கேட்காத, சந்தேகமே கொள்ளாத, வெறுப்பே உணராத, கேலியே செய்யாத இறை நம்பிக்கை. இதையெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கோயிலாக ஏறி, இறங்கும் போதும், நம் மனசின் பாரத்தை இறைவனிடம் இறக்கி வைத்தால் போதும். ''சாமி.. நீ தான் பொறுப்பு... பிரச்னையை சமாளிக்கும் தெம்பு, தைரியம், நம்பிக்கை எல்லாமே நீ தான் தர வேண்டும்...'' இப்படி மனசார வேண்டுதல் வைக்க கற்று கொள்ள வேண்டும்.
சமீபத்தில் மலேசியா சென்ற போது, பத்துமலை முருகன் கோயில் சென்றோம் நானும் என் கணவரும். எத்தனையோ பேர் சென்று வந்து கதைகதையாக சொன்ன பத்துமலை முருகன் கோயில். நுாற்றுக் கணக்கான படிகள் ஏறி, குகைக்குள் குடைந்து வடிவமைக்கப்பட்டிருக்கும் நவீன குடைவரை கோயிலாகத் தோன்றியது பத்துமலை முருகன் கோயில்.
ஒவ்வொருவரின் தெய்வீக அனுபவமும், ஒவ்வொரு தத்துவத்தை, ஒவ்வொரு கருத்தாக்கத்தை உணர்த்தின. எல்லாம் சரி தான். ஒரு வருடம் முன்பு தான் முறிந்து போன கால், அந்த நெடிய வலி, அது கொண்டு வரும் வீக்கம்... இத்தனையும் என்னோடு இருக்கும் போது நான் எப்படி பத்துமலை முருகன் கோயிலின் நுாற்றுக் கணக்கான படிகளை ஏறி, மலை மீதுள்ள முருகனை தரிசிக்க முடியும் என்பது மலைப்பாகவே இருந்தது. கனவாகவே இருந்தது. கேள்விக் குறியாகவுமே இருந்தது.
அந்த சமயத்தில் தான் எனக்கு கையில் கிடைத்தது ஒரு வாழ்வியல் புத்தகம் ''LIMITLESS'' என்ற புத்தகம். NICK VUJICIC என்னும் அற்புதமானவரின் வாழ்வியல் நுால்.
''கடவுளிடம் நம்பிக்கை கொள். நம் வாழ்க்கைக்கான கடவுளின் திட்டங்கள், நம் கற்பனையை விடவும் பிரமாண்டமும், வீரியமும் கொண்டவை. தவறுகளை கடவுள் செய்வதே இல்லை...'' என்பதான நம்பிக்கையை ஒவ்வொரு பக்கத்திலும் விதைத்திருக்கும் நுால்.
நிக் வுஜிசிக். நம்மால் நம்ப முடியாத அளவுக்கு நம்பிக்கையான மனிதர்.
அவருக்கு இரு கைகளும் கிடையாது. தோள்பட்டை வரைக்குமே தோள் என்னும் உறுப்பு உண்டு. அப்புறம் மார்பு, இடுப்பு.
இடுப்புக்குக் கீழே தொடை, கால்கள் என்றெல்லாம் ஏதுமற்றவர். முகம், தோள், மார்பு, வயிறு, இடுப்பு வரைக்கும் தான் அவர் உருவம். நடக்க முடியாது. தவளை மாதிரி தாவித்தாவித் தான் நகர வேண்டும். ஆனாலும் அவர் நம்புகிறார். தன் பிறப்பும், இருப்பும் மிகச் சிறப்பானதாக வேண்டும் என்பதால் தான் கடவுள் தன்னை இப்படி படைத்திருக்கிறார் என்பது நிக் நம்பிக்கை.
இந்த உருவத்தோடு நிக், ஊர் உலகம் சுற்றி வந்து தன்னம்பிக்கை உரையாற்றுகிறார் என்பதை சொன்னது புத்தகம். படித்ததில் இருந்து எனக்கு மலையளவு நம்பிக்கை.
இத்தனை அற்புத ஆசீர்வாதங்களை எனக்கு அருளியிருக்கும் கடவுளுக்கு தெரியாதா? நுாற்றுக்கணக்கான, படி ஏறி வரும் நம்பிக்கை எனக்குள் படிப்படியாக உருவானது.
நானும், என் கணவரும் ஒவ்வொரு படியாக ஏறத் துவங்கினோம். புறாக்கள் கூட்டம், குரங்குகள் கூட்டம், மரங்கள், செடி, கொடிகள், உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்கள், துாறிக் கொண்டிருந்த மழை வாசனை, உச்சியில் 272 படிகள் எல்லாமாக என்னை எப்படி மேலே ஏற்றி சென்றது என்று எனக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு படியாக எப்படி ஏறினேன்? யார் ஏற்றி விட்டார்? எங்கே போனது என் கால் வலி? கால் வீக்கம்? மனசின் தயக்கம்? எப்படி நடந்தது இந்த மாயாஜாலம்?
அத்தனை படிகள் ஏறி ஏறி குகைக்கோயில் தரிசனம் கிடைத்த போது அந்த பாக்கியம். அந்தப் பெரும்பேறு... அடடா... அடடடா... இயற்கையாக அமைந்திருக்கும் குகைகள். அதன் உயரம், நீளம், அகலம், ஆழம் எல்லாமே இறைமை. அத்தனை உயரம் ஏறி வந்து, முருகன் தரிசனம் பெற்றேன் என்பது நானா செய்தேன்? எப்படி....
எப்படி ஏறினேன்? எப்படி மறுபடியும் இறங்கினேன்?
நம்பிக்கை. நான் படிகள் ஏறியது கால்களால் அல்ல. நிக் மாதிரி என் மனசின் நம்பிக்கையால். நமக்குள் இருக்கும் ஆற்றலை, சக்தியை, வீரியத்தை, திறமையை, உணர வேண்டிய இடம், செல்ல வேண்டிய இடம், மருத்துவமனை என்பதை தாண்டி இறைத்தலங்கள் தான்; கோயில்கள் தான். இறை நம்பிக்கை தான் அருமருந்து. இறை பக்தி தான் பேரமுது.
இறை அன்பு தான் பெரு நம்பிக்கை. நான் வாழ்கிறேன், இறைமையால் மட்டுமே.
- முற்றும்
- ஆண்டாள் பிரியதர்ஷினி
அலைபேசி: 94440 17044