ஒரு ராஜா அமைச்சரை அழைத்தார்.
''மந்திரியாரே! இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் சூட்டி அவரை வணங்குகிறார்கள். ஏன் இவ்வளவு உருவத்தைப் படைத்திருக்கிறார்கள்?'' என்றார்.
மந்திரி சிரித்தார்.
''ராஜா! கடவுளின் பெயரில் தான் வித்தியாசம் இருக்கிறதே தவிர அவர் யாராலும் அறியப்பட முடியாதவர் என்ற கருத்தில் மாற்றமில்லை,'' என்றவர் ஒரு துணியை எடுத்தார்.
''இது என்னவென்று தெரியுமா?'' என்றார்.
''இதென்ன பிரமாதம், துணி...'' என்றார் ராஜா.
அதை இடுப்பில் கட்டிய மந்திரி ஒரு வேலைக்காரனை அழைத்து, ''இது என்னப்பா?'' என்றார்.
''துண்டு'' என்றான் அவன்.
அந்தத் துணியை தன் மேல் போட்டுக் கொண்டு, ''இப்போது இது என்ன?'' என்று கேட்டார்.
''அங்கவஸ்திரம்'' என்று பதிலளித்தான் அவன்.
அதையே தரையில் விரித்து, ''இப்போது இதற்கு என்ன பெயர்?'' என்றார்.
''படுக்கை விரிப்பு'' என்று பதிலளித்தான் அவன்.
இப்போது ராஜாவை நோக்கிய மந்திரி,''அரசே! துணி என்பது ஒன்று தான். ஆனால், இதுவே அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடுகிறதல்லவா! அதைப்போல, கடவுளுக்கு, அவரவருக்கு விருப்பமான வடிவம் தந்து வழிபடுகிறார்கள். பொருள் ஒன்று தான். வடிவம் தான் வேறு,'' என்றார்.
புரிந்து கொண்ட ராஜா, அமைச்சரைப் பாராட்டினார்.

