ADDED : மார் 02, 2018 11:01 AM

ஒரு பாடசாலையில் சிவகுரு என்ற ஆசிரியரிடம் மாணவர்கள் பாடம் பயின்றனர். அங்கு மாணவன் ஒருவன் மற்றவர் பொருளை திருடினான். கையும் களவுமாக பிடிபட்ட அவனை மாணவர்கள் ஆசிரியரின் முன் நிறுத்தினர்.
அவனிடம் சிவகுரு, “திருடுவது குற்றம் என்று தெரியாதா?” என கேட்டார்.
இனி மேல் திருட மாட்டேன் என்று அவனும் உறுதியளித்ததால் மன்னித்தார்.
ஒரு வாரத்தில், மீண்டும் அவன் கைவரிசையைக் காட்ட மற்றவர்கள் பிடித்தனர்.
இந்த முறை மன்னிக்காமல் பாடசாலையில் இருந்து அவனை வெளியேற்ற வற்புறுத்தினர். ஆனால் சிவகுரு இப்போதும், 'திருடுவது குற்றம் என தெரியாதா?” என்று கேட்டார்.
“திருடிய இவனை வெளியேற்றாவிட்டால், நாங்கள் வெளியேறுவோம்” என்று மற்ற மாணவர்கள் குரல் எழுப்பினர்.
சிவகுருவும் ''நல்லது. நீங்கள் அனைவரும் செல்லலாம்'' என்றார்.
சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது சிவகுரு, ''நல்லது, கெட்டதை விளங்கச் செய்வதே கல்வி. அதை அறிந்த நீங்கள் எங்கு சென்றாலும் நல்வழியில் நடப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் திருடுவது குற்றம் என அறியாத இவனுக்கு தான் நிறைய போதிக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
குருவின் கருணையை எண்ணி அனைவரும் வாயடைத்து நின்றனர்.
திருடிய மாணவன் ''நீங்கள் ஆசிரியர் மட்டுமல்ல.... அன்பு காட்டும் தாயும், அறிவு ஊட்டும் தந்தையும் நீங்களே...'' என்று சொல்லி அழுதான். அவனை தழுவிக் கொண்டார் சிவகுரு.