ADDED : ஜன 27, 2017 12:01 PM

மதுரையில் ஒரு அழகர் புகழ் பெற்று விளங்குவது போல, திருநெல்வேலி அருகிலுள்ள சீவலப்பேரி தாமிரபரணிக் கரையில் ஒரு அழகர்கோவில் புகழ் பெற்று விளங்குகிறது.
தல வரலாறு: சிவபெருமானின் கல்யாண கோலத்தை தரிசிக்க பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், பெருமாளை சிவனாக மாற்றி அமைத்தது குற்றாலம் கோவிலில் என அக்கோவில் வரலாறு சொல்கிறது. இதே போல அரியும் சிவனும் ஒன்று என்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட தாமிரபரணி கரையில் ஒரு பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். மகாலட்சுமியும் அந்த இடத்தை வலம் வந்து பெருமாளுடன் சேர்ந்தாள். அந்த இடம் ஸ்ரீவலம்வந்தபேரி என்றானது. 'ஸ்ரீ' என்றால் 'லட்சுமி'. இதுவே மருவி சீவலப்பேரி ஆனது. இங்குள்ள பெருமாளுக்கு அழகர் சுந்தரராஜர் என திருநாமம் சூட்டப்பட்டது. அகத்தியர் பிரதிஷ்டை செய்த பெருமாளுக்கு கவுதம மகரிஷி கர்ப்பகிரகம் அமைத்தார். கருவறையில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன.
சிறப்பம்சம்: தாமிரபரணி, குற்றாலத்தில் இருந்து வரும் சித்ராநதி (சிற்றாறு), கோதண்டராமநதி (சிவசைலம் மலையில் உற்பத்தியாவது) என்னும் மூன்று நதிகள் கலக்கும் இடமே சீவலப்பேரி. இங்கு சீவலமங்கை, அலர்மேல் மங்கையுடன் அழகர் சுந்தரராஜர் எழுந்தருளியிருக்கிறார். மூன்று நதிகள்
சங்கமிப்பதால், இப்பகுதிக்கு முக்கூடல், தென்னக திரிவேணி சங்கமம் என்ற பெயர்களும் உண்டு. மதுரையை வட திருமாலிருஞ்சோலை என்றும், சீவலப்பேரியை தென் திருமாலிருஞ்சோலை என்றும் சொல்வர்.
கோவில் அமைப்பு: இந்தக்கோவில் இரண்டாம் நூற்றாண்டில் முதலில் கட்டப்பட்டது. திருப்பதி கோவிலுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டில் அரசு புரிந்த பாண்டியன் மாற வர்மன் ஸ்ரீ வல்லபனால் திருப்பணி செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு மானியங்கள் அளித்துள்ளதாக கல்வெட்டுக்கள் உள்ளன. வல்லப பாண்டியனின் சிலையும் கோவிலில் இருக்கிறது.
காவல் தெய்வம்: மதுரை அழகருக்கு கருப்பசுவாமி காவல் தெய்வமாக உள்ளது போல, இங்குள்ள பெருமாளுக்கு சுடலைமாட சுவாமி, தன் அண்ணன் முண்டசுவாமியுடன் காவல் தெய்வமாக உள்ளார். சுடலைமாட சுவாமியின் பிறப்பிடமும் இதுதான்.
பாசமலர்கள்: விஷ்ணு, தங்கை துர்க்கை இவர்கள் இருவரும் கருவறையிலேயே அருகருகே வீற்றுள்ள கோவில், அழகர் கோவில் அருகில் இருக்கிறது. வேறு எங்கும் இந்த அமைப்பைக் காணமுடியாது.
காசி விஸ்வநாதர்: அகத்தியர் இங்கு அழகரை பிரதிஷ்டை செய்த பிறகு, சிவனை மனதால் நினைக்க சிவனும் காசி விஸ்வநாதராக விசாலாட்சியுடன் காட்சியளித்தார். அந்த கோவிலும் அழகர்கோவில் அருகே உள்ளது.
சக்கரத்தாழ்வார் மகிமை: ஒருமுறை விஷ்ணு பகவானின் கையிலுள்ள சக்கரம் சுக்கிராச்சாரியாரின் தாயை சம்ஹாரம் செய்து விட்டது. இதனால் அதற்கு பிரம்மஹத்தி தோஷம் (பிராமணரைக் கொன்ற பாவம்) ஏற்பட்டது. அது நீங்க விஷ்ணுவைப் பிரார்த்தித்தது. பகவானும் தாமிரபரணி முக்கூடலில் நீராடித் தன்னை வழிபட்டு வந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார். சக்கரமும் சீவலப்பேரி முக்கூடலில் நீராடி பகவானை வழிபட்டது. அப்போது பெருமாள் கள்ளழகர் வேடத்தில் காட்சியளித்து சக்கரத்தின் பாவத்தை நீக்கி அதை மீண்டும் கையில் வைத்துக் கொண்டார். சக்கரத்தின் பாவத்தை தீர்த்த இந்த ஆறு சக்கர தீர்த்தம் எனப்படுகிறது. சித்திரை மாதம் பவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கொண்டாடப்படுகிறது.
கருடாழ்வார் சன்னிதி: சீவலப்பேரி அருகிலுள்ள மணப்படையை தலைநகராகக் கொண்டு பாண்டிய மன்னன் ஆண்டு வருகையில் அவருக்கு கண் பார்வை போனது. அந்த சமயம் கருங்குளம் என்ற ஊருக்கு ஒரு கருட வாகனத்தை சீவலப்பேரி வழியாக எடுத்துச் சென்றனர். சீவலப்பேரிக்கு வந்ததும், அதன் கனம் தாங்காமல் ஆற்றங்கரையில் வைத்தனர். அதன்பின் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அன்றிரவில் அழகர் மன்னன் கனவில் தோன்றி அந்த வாகனத்தை தன் கோவிலில் பிரதிஷ்டை செய்ய உத்தர விட்டார். மன்னனும் அவ்வாறே செய்ய அவனது கண்நோய் நீங்கியது. கண்நோய் தீர கருடசேவை நேர்த்திக்கடனை இங்கு செய்கிறார்கள். இந்த கருடாழ்வாரின் கண்மேல் நோக்கியுள்ளது. நான்கு கைகள் உள்ளன. பாம்பை தன் உடலில் ஆறு இடங்களில் அணிந்திருக்கிறார். இதே போன்ற வாகனம் மதுரை கள்ளழகர் கோவிலிலும் இருக்கிறது.
துவார பாலகர் சிறப்பு: இந்தக் கோவிலில் உள்ள துவார பாலகர்களின் சிலைகள் கலைநுட்பம் மிக்கதாக இருக்கிறது. மிக அழகான இவர்கள் சிலையை கையினால் சுண்டினால் வெண்கல ஓசை வருகிறது. இங்குள்ள முப்புரி வலம்புரி சங்கு காண்பதற்கு மிகவும் அரிதானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அது கடலில் தோன்றும். இந்த சங்கு தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய்கள் தீர்வதாக நம்பிக்கை. கவுதம மகரிஷி இந்தக் கோவிலில் தவம் புரிந்திருக்கிறார். அவரது உருவம் கல்தூணில் உள்ளது.
பிதுர் ஷேத்திரம்: கும்பமேளா, அமாவாசை, மாதப் பிறப்பு நாட்களில் பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு சடங்குகள் செய்கிறார்கள். இந்த ஆற்றை பிதுர் தீர்த்தமாகவும் சொல்கிறார்கள். காசி திரிகூட சங்கமத்திற்கு சமமாக இந்த ஆற்றைக் கருதுகின்றனர். விசுவநாத நாயக்கரின் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார், தனது தந்தைக்கு பிதுர் பிண்டம் போடும் போது, அவரது தந்தையே நேரில் வந்து கைநீட்டி வாங்கியது கண்டு பேரானந்தம் அடைந்தார். சத்திரம் ஒன்றைக் கட்டி இங்கு வரும் மகான்களுக்கு அன்னமிட ஏற்பாடு செய்தார்.
சீனிவாசர்: திருப்பதி வெங்கடாசலபதியும் சீனிவாசர் என்ற பெயரில் இங்கே எழுந்தருளி இருக்கிறார். ஆஞ்சநேயர் குழந்தை வடிவில் கைகூப்பியபடி இருக்கிறார். சனிக்கிழமைகளில் அவருக்கு வெண்ணைக் காப்பு செய்து, வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். சுபநிகழ்ச்சிகளை நடத்த பூக்கட்டி பார்க்கும் பழக்கமும் இவரது சன்னிதியில் இருக்கிறது. லட்சுமணர் முன்பக்கம் மனித ரூபமாகவும், பின்பக்கம் சர்ப்பரூபமாகவும் இருக்கிறார். இங்குள்ள மலையில் நிறைய நாகங்கள் இருக்கின்றன. அவை யாருக்கும் தீங்கு செய்வதில்லை. சிலசமயம் பூஜை வேளையில் மூலவர் தலைமேல் காட்சிஅளித்து மறைந்துவிடும்.
இந்தக் கோவிலின் தேர்த்திருவிழா சித்திரை முதல் தேதி நடக்கும். இப்பொழுது கோவில் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில்
இருக்கிறது. பாரதியார் இந்த அழகர் பற்றி பாடியுள்ளார். முக்கூடற்பள்ளு, தாமிரபரணி மகாத்மியம், குற்றாலக் குறவஞ்சி ஆகிய நூல்கள் இந்த கோவிலின் புகழ் பாடுகின்றன.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ.,
அலைபேசி: 92831 48238.

