/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
முன்னோர் சாபம் தீர அமாவாசை கிரிவலம்
/
முன்னோர் சாபம் தீர அமாவாசை கிரிவலம்
ADDED : ஏப் 29, 2013 01:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மலைக்கோயில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதே நடைமுறை. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயிலில் அமாவாசையன்று கிரிவலம் வருகிறார்கள்.
தல வரலாறு:
கவுதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரன், விமோசனம் வேண்டி இப்பகுதியில் தவமிருந்தான். தனது வாகனமான ஐராவதம் யானையின் தந்தத்தால் மலையில் ஓரிடத்தில் தோண்டி தீர்த்தம் உருவாக்கினான். அது ஆறாக பெருக்கெடுத்தது. 'தந்த நதி' என்று அழைக்கப்பட்ட இது, மிகவும் பழமையானது என்பதால், 'பழையாறு' என்று பெயர் பெற்றது. நதிக்கரையில் மூன்று இடங்களில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இதில் முதல் தலம் இது. சுவாமி, 'பூதலிங்கேஸ்வரர்' என்ற பெயரில் அருளுகிறார்.
நினைத்ததை முடிக்கும் விநாயகர்:
இத்தலத்தில் சிவன், பெரிய லிங்க வடிவில் இருப்பதாலும், தனக்கு கோயில் எழுப்பிய மன்னருக்கு பூதாகரமாக (பெரிய வடிவில்) காட்சி தந்ததாலும், பூதலிங்கேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. சிவன் சந்நிதியின் வலப்புறம் சிவகாமி அம்பாள் சந்நிதி இருக்கிறது. துவாரபாலகர்களாக பூதகணங்கள் இருக்கின்றன. தீராத நோயால் அவதிப் படுபவர்கள், பூதகணங்களுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை உடலில் தெளிக்கின்றனர். ஆலமரத்தின் கீழுள்ள பொந்தில் 'நினைத்ததை முடிக்கும் விநாயகர்' காட்சி தருகிறார். நினைத்ததை நிறைவேற்றுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.
வித்தியாசமான கிரிவலம்:
மலைக்கோயில்களில் பக்தர்கள் பவுர்ணமியன்று, கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், இத்தலத்தில் அமாவாசையன்று பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். நமது வசதிக்காக பவுர்ணமியன்று கிரிவலம் வரலாம். ஆனால், நம் முன்னோர் சில பாவங்களைச் செய்துவிட்டு, அதற்கு பரிகாரம் செய்யாமலே இறந்திருப்பர். அவர்களின் ஆத்மா சாந்தியடைவதில்லை என்றும், பல பிறவிகளை எடுக்கும் என்றும் நம்பிக்கையுண்டு. இந்தக் கோயிலில், முன்னோர்களுக்குரிய அமாவாசையன்று கிரிவலம் வருவதன் மூலம், அவர்களின் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலை (முக்தி) கிடைக்குமென்றும், இதன்மூலம் நாமும், நம் வம்சமும் நல்லபடியாக இருப்போம் என்றும் நம்பிக்கையுள்ளது.
தம்பட்டம் கூடாது:
ஒருசமயம், பக்தர் ஒருவர் இங்கு வந்த போது சந்நிதி அடைக்கப்பட்டு விட்டது. நடை திறக்கட்டுமே என்று காத்திருந்தார். தன் உண்மை பக்தன் காத்திருப்பதை விரும்பாத சிவன், அவருக்குக் காட்சி தந்தார். அவருக்கு தரிசனம் தந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாமென்று அறிவுறுத்தினார். ஆனால், பக்தர் மகிழ்ச்சியில், தான் சிவதரிசனம் கண்டதை மற்றவர்களிடம் வெளிப்படுத்தினார். இறைவனுக்கு கொடுத்த வாக்கை மீறியதால் சிலையாக மாறிவிட்டார். இந்த சிலை, கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறது. நம் சாதனைகளை தம்பட்டம் அடிப்பது கூடாது என்பது இதன் தத்துவம்.
சிற்ப தூண்:
காவல்தெய்வம் பூதநாதர், பீட வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு முழு தேங்காய் படைப்பர். அதை உடைப்பதில்லை. எதையும் முழுமையாக படைக்கவேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். மாசி திருவோணத்தன்றுஇவருக்கு விசேஷ பூஜை நடக்கும். இங்குள்ள சாஸ்தா, ஒரே ஆவுடையாரில் 2 பாணத்துடன் கூடிய சிவலிங்க அமைப்பில் காட்சி தருகிறார். சப்த கன்னியர், நாகர், சூரியன், சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர் சிலைகளும் உள்ளன. ”வாமி தீர்த்தம் இங்குள்ளது.
அம்பாள் சந்நிதியில் எலி:
இங்குள்ள சிவகாமி அம்பிகைக்கு, ஒரு பக்தர் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தார். எலி ஒன்று தொடர்ந்து, அவர் ஏற்றிய தீபத்தின் திரியை அணைத்து வந்தது. கோபம் கொண்ட பக்தர் எலியின் மீது தீர்த்தத்தை தெளிக்க, அது கல்லாக மாறிவிட்டது. அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தின் படிக்கட்டில் எலி சிற்பம் இருக்கிறது. இறை வழிபாட்டுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது இதுஉணர்த்தும் தத்துவம்.
இருப்பிடம்:
நாகர்கோவிலில் இருந்து 9 கி.மீ.,
திறக்கும் நேரம்:
காலை 5- 10.30, மாலை 5- இரவு 8.

