
மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தியில் அத்தி மரத்தால் ஆன வான்முட்டி பெருமாள் இருக்கிறார். பாவம் போக்க இவரை தரிசியுங்கள். குடகு மலையை சேர்ந்த மன்னர் நிர்மலன் நோயால் அவதிப்பட்டார்.
முனிவர் ஒருவரிடம் மந்திர உபதேசம் பெற்று ஜபிக்கத் தொடங்கினார். அதன் பயனாக ஒருநாள், ''மன்னா! நோயைப் போக்க திருத்தல யாத்திரை புறப்படு. எந்த இடத்தில் உன் உடம்பு பொன் நிறமாக மாறுகிறதோ அங்கு தங்கி விடு'' என அசரீரி ஒலித்தது. யாத்திரை சென்ற போது குறிப்பிட்ட இடத்தில் உடம்பு பொன் நிறமாக மாறவே மன்னர் மகிழ்ந்தார். அங்கிருந்த அத்தி மரத்தில் சங்கு, சக்கரம், கதாயுதம், அபய கரத்துடன் பெருமாள் காட்சியளித்தார்.
மன்னரின் பாவம் அனைத்தும் விலகியதால் இத்தலம் 'கோடி ஹத்தி' எனப் பெயர் பெற்றது. 'சகல பாவங்களும் நீங்கும் இடம்' என இதற்கு பொருள். இதுவே பிற்காலத்தில் 'கோழிகுத்தி' என்றானது. அங்கு தங்கி தவத்தில் ஈடுபட்ட மன்னர் முனிவராக மாறினார். 'பிப்பல மகரிஷி' என மக்கள் அழைத்தனர். மன்னர் தவம் செய்த இடம் கல் மண்டபமாக தற்போது உள்ளது. அதனருகில் ஓடும் காவிரியாறு 'பிப்பல மகரிஷி தீர்த்தம்' எனப்படுகிறது.
இத்தலத்தின் மகிமையை அறிந்த தஞ்சை சரபோஜி மன்னர் இங்கு வழிபட்டார். இங்கிருந்த அத்திமரத்தைச் செதுக்கி 15 அடி உயரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சிலை நிறுவினார்.
சங்கு, சக்கரம், கதை, அபயகரத்துடன் இருக்கும் பெருமாளின் மார்பில் மகாலட்சுமித்தாயார் இருக்கிறார். பிரமாண்டமாக இருப்பதால் சுவாமிக்கு 'வான்முட்டி பெருமாள்' எனப் பெயர் வந்தது. அத்தி மரத்தால் ஆனவர் என்பதால் தைலக்காப்பு மட்டுமே நடக்கிறது. உற்ஸவரின் திருநாமம் யோக நரசிம்மர். இங்குள்ள சப்தஸ்வர ஆஞ்சநேயர் சிலையைத் தட்டினால் சப்த ஸ்வரங்கள் கேட்கும்.
விநாயகர், கருடாழ்வார், கிருஷ்ணர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. மூலவருக்கு வலது புறம் சக்கரத்தாழ்வாரும், இடது புறம் யோகநரசிம்மரும் உள்ளனர். சனி, சுக்கிர தோஷம் அகல கோயிலில் எழுதியுள்ள ஸ்லோகத்தை சொல்கின்றனர். விருப்பம் நிறைவேற பெருமாளுக்கு அபிேஷகம் செய்கின்றனர்.
எப்படி செல்வது: மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள மூவலுாரில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98424 23395, 97872 13226
அருகிலுள்ள கோயில் : திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர்(திருமணம் நடக்க)
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 04364 - 235 462