ADDED : ஜூன் 11, 2026 11:22 AM

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் உள்ளது கைவாரா. பாண்டவரில் ஒருவரான பீமன் இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளார். இதுவே தற்போது பீமலிங்கேஸ்வரர் கோயிலாக உள்ளது. இதை 'பீம பகாசுர பெட்டா' என அழைக்கின்றனர்.
வனவாசத்தின் போது பாண்டவர்கள் இப்பகுதியில் மாறுவேடத்தில் சில காலம் தங்கி இருந்தனர். அப்போது பகாசுரன் என்பவன் அட்டூழியம் செய்து வந்தான். அசுரனான அவனுக்கு தினமும் மாட்டு வண்டி நிறைய உணவும், அதோடு ஒரு மனிதனையும் அனுப்ப வேண்டும் என நிர்பந்தம் செய்தான். அதாவது உணவோடு அந்த மனிதனையும் அசுரன் கொன்று சாப்பிடுவான். ஊர் மக்களும் நொந்தபடி தினமும் உணவு அனுப்பினர். இந்த சூழலில் ஒருநாள் பாண்டவர்கள் தங்கியிருந்த வீட்டருகே முதிய பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார்.
அந்த தாயின் மகன் உணவு கொண்டு செல்ல வேண்டியதை எண்ணி வருந்துவதை பீமன் கண்டான். மூதாட்டியிடம், ''கவலைப்பட வேண்டாம். உங்கள் மகனுக்கு பதிலாக நான் உணவு கொண்டு செல்கிறேன்'' என மாட்டு வண்டியில் புறப்பட்டான். இவனைப் பார்த்த பகாசுரன், 'இன்று சரியான விருந்து கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால் அசுரனை பந்தாடி விட்டு வெற்றியுடன் திரும்பினான் பீமன்.
இந்த கொலை பாவத்தை போக்க மலையின் மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அந்த தலமே கைவாரா. இங்கு பிற்காலத்தில் சிவன் கோயில் கட்டப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்து 500 படிகள் ஏறினால் சமதள பரப்பை அடையலாம். அங்கு நின்று பார்த்தால் கைவாராவின் இயற்கை அழகை ரசிக்கலாம். படிகள் ஏறுவது கஷ்டமாக இருக்காது. அடுத்து சற்று துாரம் மலையில் ஏறினால் பாறைகள் இடையே லட்சுமணர் உருவாக்கிய தீர்த்தத்தை காணலாம். இதைக் கடந்து சென்றால் கோயில்தான். சோழர்கால கட்டட பாணியில் நிறைய சிற்பங்கள் கொண்ட மூன்று நிலை கோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. முன் மண்டபம், நடுமண்டபம் தாண்டிச் சென்றால் பீம லிங்கேஸ்வரரை தரிசிக்கலாம். இவருக்கு முன்புறம் அழகிய நந்தி உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, துர்கையை காணலாம்.
கோயிலுக்கு வெளியே பீமனைத் தவிர்த்த மற்ற பாண்டவர்கள் வழிபட்ட தர்மராய லிங்கேஸ்வரர், அர்ஜுன லிங்கம், நகுல ஈஸ்வரர், சகாதேவ லிங்கேஸ்வரரை தரிசிக்கலாம்.
எப்படி செல்வது
* பெங்களூருவில் இருந்து 70 கி.மீ.,
* சிந்தாமணியில் இருந்து மலை ஏற்றத்தில் 12 கி.மீ.,
விசேஷ நாள்: மகாசிவராத்திரி, பிரதோஷம்.
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:30 மணி
அருகிலுள்ள கோயில்: போக நந்தீஸ்வரர் 47 கி.மீ., (மகிழ்ச்சி கிடைக்க...)
நேரம்: காலை 7:30 - இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 81562 62648
