
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள விளாங்காட்டில் ஆதிமூல நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. கிரகதோஷம் தீரவும், ஜோதிடர்கள் வாக்குவன்மை பெறவும் இங்கு வழிபடுகின்றனர். ஜூன் 15, 2025ல் இங்கு வருஷாபிஷேகம் நடக்கிறது.
தேவலோக யானையான கஜேந்திரன் குளத்தில் நீராடிய போது முதலையிடம் சிக்கி கொண்டது. பரம்பொருளான மகாவிஷ்ணுவை நோக்கி 'ஆதிமூலமே' என ஓலமிட்டது. கருட வாகனத்தில் எழுந்தருளிய விஷ்ணு சக்கராயுதத்தை ஏவி யானையைக் காப்பாற்றினார். இதன் அடிப்படையில் இங்கு ஆதிமூல நாராயணப்பெருமாள் கட்டப்பட்டது. விளாமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் இத்தலம் விளாங்காடு எனப்படுகிறது. பெருமாளை வழிபட வந்த பூகர்ப மகரிஷி உருவாக்கிய குளம் பூகர்ப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
நாரதர், பிருகு உள்ளிட்ட முனிவர்களுக்கு கோள்களின் சுழற்சி, நவக்கிரகத்தால் உண்டாகும் நன்மை, தீமை குறித்து மகாவிஷ்ணு இங்கு உபதேசம் செய்தார். இதனால் ஜோதிடர்கள் இங்கு வழிபட்டால் வாக்குவன்மை உண்டாகும். விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தினமும் ஐந்து காலபூஜையும், பிரம்மோற்ஸவமும் நடந்தது.
இவர்களின் ராஜகுரு வியாசராஜர், மகான் ராகவேந்திரர் இங்கு வழிபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆங்கிலேயரின் வருகைக்கு பின் கோயில் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்தது. மாட்டுத்தொழுவமாக கிடந்த இங்கு சில ஆண்டுக்கு முன் புதைந்து கிடந்த ஆதிமூலநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை பக்தர்கள் கண்டெடுத்தனர். சிறிய கோயில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது. இங்குள்ள மூலவர், உற்ஸவர் சிலைகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. தினமும் ஒருகால பூஜை நடக்கிறது.
எப்படி செல்வது: மதுராந்தகம் வட்டம் அச்சரப்பாக்கத்தில் இருந்து 7 கி.மீ.,
விசேஷ நாள்: ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 7:00 - 10:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 98403 44082
அருகிலுள்ள கோயில்: மத்துார் மாதவப்பெருமாள் 3 கி.மீ., (மனமகிழ்ச்சிக்கு...)
நேரம்: காலை 7:00 - 10:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 80727 30714