ADDED : மே 28, 2026 11:27 AM

ஆன்மிக வாழ்வில் முன்னேற குருவருள் அவசியம். அதைப் பெற விரும்பினால் மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகர் கோயிலில் நடக்கும் திருஞானசம்பந்தர் குருபூஜையில் (ஜூன் 2) கலந்து கொள்ளுங்கள்.
முன்பு ஒரு காலத்தில் தமிழகத்தில் சமண மதம் பரவியிருந்தது. அப்போது வேதநெறி தழைத்தோங்க ஞானக்குழந்தை ஒன்று பிறந்தது. ஆம். சீர்காழியில் சிவபாத இருதயர், பகவதி அம்மை தம்பதிக்கு மகனாக திருஞானசம்பந்தர் பிறந்தார். மூன்று வயது முதல் சிவபெருமான் மீது பதிகம் பாடினார். பதினாறு வயதை அடைந்த போது திருமணம் செய்யும்படி தந்தை சிவபாத இருதயர் கூறினார்.
முதலில் மறுத்த ஞானசம்பந்தர் 'இதுவும் சிவனின் விளையாட்டே' என சம்மதித்தார். நம்பியாண்டார் நம்பியின் மகள் ஸ்தோத்திர பூராணாம்பிகைக்கும், ஞானசம்பந்தருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடானது.
வைகாசி மாத மூல நட்சத்திர நாளன்று சிவனடியார்கள் ஒன்று கூடினர். திருநீலநக்கர் மணவிழா சடங்குகளை செய்தார். முருக நாயனார் பூமாலைகளைத் தொடுத்தார். ஞானசம்பந்தர் அக்னியை வலம் வரும் போது 'இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்' என எண்ணி, 'கல்லுார்ப் பெருமணம்' எனத் தொடங்கும் பதிகம் பாடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் இசைத்தார்.
அப்போது ஜோதிப்பிழம்பாக தோன்றிய சிவபெருமான், 'நீயும், உனது மனைவியும், திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்திடுக' என அருள்புரிந்தார். இந்த காட்சியைக் கண்ட ஞானசம்பந்தர் மெய்சிலிர்த்து, 'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' எனத் தொடங்கும் நமச்சிவாய பதிகம் பாடினார். இறுதியில் திருமணத்தை காண வந்த அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, மனைவியுடன் சிவஜோதியில் கலந்தார் ஞானசம்பந்தர். இந்த பதிகம்தான் அவர் பாடிய கடைசிப் பதிகம்.
ஆண்டு தோறும் வைகாசி மூலத்தன்று இந்த வைபவம் திருவிழாவாக நடக்கிறது. ஞானசம்பந்தருக்கு மூன்று வயதில் ஞானப்பால் கொடுத்து தொடங்கி வைத்த ஞானப் பயணத்தை, இத்தலத்தில் திருநீறு கொடுத்து முடித்து வைத்தாள் அம்பிகை. இதனால் இத்தலத்து அம்மன் 'திருவெண்ணீற்று உமையம்மை' எனப் பெயர் பெற்றாள். இங்கு அம்மனின் சன்னதியில் தரப்படும் திருநீற்றை பூசினால் நோய் தீரும். பாவம் விலகும். சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
ஐந்துநிலை கொண்ட ராஜ கோபுரத்துடன் கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து நந்திமண்டபம், நுாற்றுக்கால் மண்டபம் உள்ளது.அங்கு ஞானசம்பந்தர், ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோக தியாகராஜர், திருவெண்ணீற்று உமையம்மை சன்னதிகள் உள்ளன. திருமால், காகமுனிவர், வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.
எப்படி செல்வது
* சீர்காழியில் இருந்து 13 கி.மீ.,
* சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி மூலம், மகா சிவராத்திரி.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04364 - 278 272, 277 800
அருகிலுள்ள கோயில் : சீர்காழி சட்டைநாதர் 14 கி.மீ., (வழக்கில் வெல்ல...)
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 94430 53195
