
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கர்னாலி என்னும் இடத்திலுள்ள குன்றில் குபேர பந்தாரி கோயில் உள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர். அமாவாசை, திங்களன்று சுவாமியை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
நர்மதை நதிக்கரையிலுள்ள வனப்பகுதியில் ஒருநாள் சிவனும், பார்வதியும் நடந்து சென்றனர். களைப்பால் பார்வதிக்கு பசி, தாகம் ஏற்பட்டது. இப்பகுதியில் பாயும் நர்மதை நதியானது, சிவன், பார்வதிக்கு மகளாக கருதப்படுகிறது. ''நர்மதா... உன் தாயார் பார்வதி பசி, தாகமுடன் இருக்கிறாள். அவளுக்கு உதவி செய்'' என்றார் சிவன். ஊற்றாக கிளம்பிய நர்மதை, உணவும் நீரும் அளித்தாள்.
சிறிது நேர ஓய்வுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் ராவணனின் தம்பியான அரக்கன் குபேரன் எதிர்ப்பட்டான். பார்வதியின் அழகைக் கண்ட அவன் ஆசை கொண்டான். அதன் எதிரொலியாக பார்வையை இழந்தான். பின்னர் தவறை உணர்ந்து சரணடைந்தான்.
மனமிரங்கிய பார்வதி பார்வையை வழங்கினாள். அவனை வடக்கு திசையின் காவலனாகவும், செல்வத்தின் அதிபதியாகவும் ஆக்கினார் சிவபெருமான். குபேரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் இங்கு சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவரது திருநாமம் குபேர் பந்தாரி. சலவைக் கல்லால் ஆன சுவாமி முறுக்கு மீசை, தலைப்பாகை, மிரட்டும் விழிகளுடன் இருக்கிறார். நர்மதை நதியை படகில் கடந்த பின்னர் கோயிலை அடையலாம். மகாசிவராத்திரியின் போது பெருமளவில் பக்தர்கள் கூடுவர்.
எப்படி செல்வது : வதோதராவில் இருந்து 6 கி.மீ.,
விசேஷ நாள்: அமாவாசை, தீபாவளி, மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 92656 03079, 98249 39377
அருகிலுள்ள கோயில் : வதோதரா ஸ்ரீதுவாரகாதீஸ் சுக்தம் 50 கி.மீ., (நலமுடன் வாழ...)
நேரம்: காலை 9:45 - இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 0265 - 252 4344