ADDED : ஜூலை 30, 2026 07:43 AM

வழக்கு, நோய், பயம் என தவிப்பவர்களுக்கு ஆறுதல் தருகிறாள் வெட்டுடையார் காளி. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் குடியிருக்கும் நீதி தெய்வமான இவளை ஆடி வெள்ளியன்று தரிசிப்போமா...
முற்காலத்தில் இவ்வூரில் வசித்த பக்தர் ஒருவரின் கனவில் தோன்றினார் அய்யனார். அவரிடம், 'ஈச்ச மரக்காடான இங்கு எனது சிலை இருக்கு. இதை எடுத்து வழிபாடு செய்' என உணர்த்தினார். அதன்படி பக்தர் தோண்டவே கோடரியால் வெட்டுப்பட்ட நிலையில் சிலை கிடைத்தது. இதனால் 'வெட்டுடையார் அய்யனார்' என்ற பெயர் வந்தது.
பின்பு ஒருநாள் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகே, ஒரு ஈச்ச மரத்தடியில் பேரொளி மின்னியதை பார்த்தனர். மறுநாள் காலையில் அங்கு அம்மனின் யந்திரம் இருந்தது. உடனே அம்மனுக்கு சிலை செய்து அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.
அய்யனாரின் பெயரால் 'வெட்டுடையார் காளி' என்ற பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் அம்மன் பிரசித்தி பெறவே, அம்மன் கோயிலாக மாறியது.
பூரணா, புஷ்கலாவுடன் வெட்டுடைய அய்யனார் காட்சி தருகிறார். இவரது சன்னதிக்கு முன்புறம் வெட்டுடையார்காளி சன்னதி உள்ளது. எட்டு கைகளுடன், வலது காலை மடித்து, அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள் அம்மன். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழிக்கு ஆளானோர் இங்கு காசு வெட்டி அம்மனிடம் நீதி கேட்கின்றனர். 'நாணயம் தவறியோருக்கு நாணயம் வெட்டிப் போடு' என்ற பழமொழி இங்கு பிரசித்தம்.
இப்படி வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து, நீதி வழங்கும் தெய்வமாக இருக்கிறாள். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளியன்று விசேஷ பூஜை நடக்கிறது. மாங்கல்ய தோஷம் நீங்க அம்மன் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தை வேண்டி கோயிலுக்கு வெளியே உள்ள மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர். முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை பேசாமல் இருந்தது. அவர் இங்கு வந்து வேண்டவே, குழந்தைக்கு பேச்சு வந்தது. இதனால் மகிழ்ந்த வேலுநாச்சியார், அம்மனுக்கு வைரத்தாலி காணிக்கை செய்தார்.
பிரிந்து வாழும் தம்பதியர், உறவினர்கள் இங்கு 'கூடுதல் வழிபாடு' என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். அதாவது பிரிந்து சென்றோர் இங்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து, அவளது சன்னதிக்கு முன்பாக ஒன்று சேர்கின்றனர். பங்குனித் திருவிழாவில் சிவனைப்போல அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. ஆடிப்பெருக்கன்று அம்மன் சன்னதி முழுவதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
அய்யனார் சன்னதியைச் சுற்றி சோலைமலை, கருப்பணர், வீரப்பர், பேச்சியம்மன், சூலாட்டுக்காளியம்மன் உள்ளனர். கோயிலுக்கு வெளியே சோணைக்கருப்பசாமி சன்னதி உள்ளது. இவரே அம்மனின் உத்தரவுகளைக் கேட்டு பணி செய்யும் காவல் தெய்வமாவார்.
எப்படி செல்வது: சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியாக 14 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடி, தைவெள்ளி, தைப்பொங்கல், பங்குனியில் பிரம்மோற்ஸவம்.
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி பவுர்ணமியன்று இரவு 10:00 மணி வரை
தொடர்புக்கு: 90479 28314, 93633 34311
அருகிலுள்ள கோயில்: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி 9 கி.மீ., (கண் நோய் தீர...)
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 04575 - 234 220
