
கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் மருத்தோர்வட்டம் சேர்த்தலாவில் தன்வந்திரி கோயில் உள்ளது. இங்கு வழிபடுவோர் நோயின்றி நுாறாண்டு வாழ்வர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். வைத்தியம் செய்தும் பலனில்லை. வைக்கம் மகாதேவர் கோயிலுக்கு சென்று தரிசித்தார். வலி குறைந்தது.
கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி ஏற்பட்டது. எனவே அங்கேயே தங்கினார். அன்றிரவு கனவில், ''இங்கிருந்து சேர்த்தலைக்கு செல்! அங்குள்ள குளத்தில் மூழ்கினால் மூன்று தன்வந்திரி சிலைகள் கிடைக்கும். முதலில் கிடைக்கும் சிலை சக்தி வாய்ந்ததால் அதைக் குளத்திலேயே விட்டு விடு. இரண்டாவது சிலையை அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நோய் தீரும்'' என்றார் சிவபெருமான். அதன்படி இரண்டாவதாக கிடைத்த சிலையை வெள்ளுடு மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் அளித்தார்.
சில ஆண்டுக்கு பிறகு மண்மூஸ் என்பவரின் உதவியுடன் மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். இருவரின் குடும்பத்தினரும் நிர்வாகத்தை நடத்தினர். இவர்களின் காலத்திற்குப் பின் கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது. இதில் மண்மூஸ் குடும்பத்தினர் சிலையின் கையை உடைத்து கோட்டயம் அருகிலுள்ள, ஓளச்ச என்னும் இடத்தில் புதிதாகச் சிலை செய்து கோயில் கட்டினர்.
வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த சிலையை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையையும் வெள்ளியால் செய்து பொருத்தினர். இங்கு மேற்கு நோக்கியுள்ள வட்ட வடிவ சன்னதியில் சுவாமி இருக்கிறார். இக்கோயிலில் முக்குடி என்னும் மருந்தை தயிரில் கலந்து தயாரிக்கின்றனர். பூஜையின் போது சுவாமியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் இந்த மருந்தை நிரப்புவர். இதைப் பருகினால் நோய் தீரும். குணம் பெற்றவர்கள் சுவாமிக்கு வெண்ணெய், சந்தனம் சாத்துகின்றனர்.
உடல்நலம் பெருக 'கயற்றேல் வானம்' என்னும் பூஜையை நடத்துகின்றனர். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டில் சேப்பங்கிழங்கால் ஆன 'தாள்கறி நைவேத்யம்' செய்வர். இதைச் சாப்பிட்டால் நாள்பட்ட நோய்கள் தீரும்.
எப்படி செல்வது: எர்ணாகுளத்தில் இருந்து சேர்த்தலா 40 கி.மீ., அங்கிருந்து 2 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை உத்திரத்தன்று பிரதிஷ்டா தினம், ஆவணி திருவோணம், ஐப்பசி தேய்பிறை துவாதசி, தன்வந்திரி ஜெயந்தி.
நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 92491 13355, 0478 - 282 2962
அருகிலுள்ள கோயில்: வைக்கம் மகாதேவர் கோயில் 24 கி.மீ., (நிம்மதிக்கு...)
நேரம்: அதிகாலை 4:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 04829 - 225 812