தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/ஓணம்

ஓணம்

ஓணம்


ADDED : ஆக 20, 2026 11:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக.26 - ஓணம்

உலகின் உரிமையாளர்

கடவுளுக்கு சொந்தமான இந்த உலகத்தை தனக்கு சொந்தமாக்க விரும்பினான் மகாபலி. அதற்காக நர்மதை நதிக்கரையில் யாகம் ஒன்றை நடத்தினான். அதை தடுக்க வாமன அவதாரம் எடுத்து வந்து மூன்றடி தானம் கேட்டார் மகாவிஷ்ணு. அவரின் திருவடி தலையில் பட்டதும் இடத்தை மட்டுமல்ல, தன்னையே காணிக்கையாக கொடுத்தான் மகாபலி. கடவுளான மகாவிஷ்ணுவே உலகின் உரிமையாளர் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

விஜய துவாதசி

காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி குழந்தை வரம் வேண்டி வழிபட்டாள். இதற்காக மகாவிஷ்ணுவின் தங்கச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, அதையே உணவாக பருகினாள். இதன் பயனாக அவளது வயிற்றில் கருவாக வளர்ந்தார் மகாவிஷ்ணு. ஆவணி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரத்தின் அபிஜித் எனப்படும் முதல் பாதத்தில், துவாதசி திதியில் வாமன மூர்த்தியாக அவதரித்தார். அப்போது உச்சிவேளை மதியம் 12:00 மணி. வானில் இருந்த சூரியன் இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பிரகாசம் அடைந்தான். வாமன ஜெயந்தியான இந்த நாளை 'விஜய துவாதசி' என்றும் சொல்வர்.

அமைதியான நதியினிலே...

நர்மதை நதிக்கரையில் மகாபலி சக்கரவர்த்தி விஸ்வஜித் என்னும் யாகத்தை நடத்தினான். அப்போது அவனிடம் தானம் பெற வாமன மூர்த்தி வந்தார். 'நர்மதை' என்ற சொல்லுக்கு 'அமைதியும் ஆனந்தமும் அளிப்பது' என்பது பொருள். மத்தியபிரதேசத்தில் பாயும் இந்த நதியின் கரையோர பழங்குடியினர் கங்கையை விட நர்மதையை புனிதமானதாக கருதுகின்றனர். இவர்கள் 'ரேவா' என இந்நதியை அழைக்கின்றனர். ராமாயணம், மகாபாரதம், வாயு புராணம், கந்த புராணத்தில் கூட 'ரேவா' இடம் பெற்றுள்ளது. சிவனின் உடலிலிருந்து பெருகிய வியர்வையே இந்நதியாகும். இதற்கு 'ஜடாசங்கரி' என்றும் பெயருண்டு.



விஷ பயமா...

மத்தியபிரதேசத்தில் பக்தர்கள் நர்மதை நதியை சுற்றி வருவது பிரபலம். இதை முதலில் துவங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி. துறவிகளும், நர்மதை நதிக்கரையிலுள்ள கிராம மக்களும் அதிகளவில் இதில் பங்கேற்கின்றனர். சிரஞ்சீவிகளான பரசுராமர், ஹனுமன், அஸ்வத்தாமன், விபீஷணன், மகாபலி, கிருபாச்சாரியார், வியாசர் ஆகிய ஏழுபேரும் நர்மதை நதியை சுற்றி வருவோருக்கு அருள்புரிய காத்திருக்கின்றனர் அதிகாலையில் எழுந்ததும் 'நர்மதா' என மூன்று முறை சொன்னால் விஷபயம் ஏற்படாது. மாசி வளர்பிறை சப்தமி திதியன்று நர்மதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஒன்றுக்குள் இரண்டு

மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தார். அதில் வாமன அவதாரத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வடிவங்களை காட்டினார். வாமனராக இரண்டு அடி உயரத்தில் வந்த அவர், மகாபலியிடம் தானம் பெற்ற போது திரிவிக்ரமராக மாறி மூன்றடியில் உலகத்தை அளந்தார். 'திரி' என்றால் 'மூன்று'. விக்ரமன் என்றால் 'அளவில்லாதவன்'. மற்ற அவதாரங்களில் அசுரர்களை கொன்ற மகாவிஷ்ணு, இதில் மட்டும் மகாபலியை ஆட்கொண்டார். பாதாள உலகில் தங்கியிருக்கும் மகாபலி ஓணத்தன்று தன் நாட்டு மக்களை சந்திக்க பூமிக்கு வருவதாக ஐதீகம்.



தாத்தாவின் பரிசு

நரசிம்ம அவதாரத்துக்கு காரணமானவன் பிரகலாதன். இவனது மகன் விரோசனன். விரோசனனின் மகன் மகாபலி. வீரனான இவன் விஸ்வஜித் யாகத்தை நடத்தியதன் பலனாக தங்கத்தேர், குதிரைகள், சிம்மக் கொடி, வில், அம்புகள் ஆகியவற்றை தேவர்கள் மூலம் பெற்றான். இதைப் பார்த்து மகிழ்ந்த தாத்தாவான பிரகலாதன் கவசம் ஒன்றையும், அசுர குலகுருவான சுக்ராச்சாரியார் சங்கு ஒன்றையும் அவனுக்கு பரிசளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us