
திருவனந்தபுரம் பழஞ்சிறைதேவியை வழிபட்டு தோற்றப் பாட்டைக் கேட்டால் முன்வினைப் பாவம் தீரும்; விருப்பம் நிறைவேறும்.
கேரளாவின் அனந்தன் காட்டிலுள்ள நீலாற்றங்கரையில் தேவியை நோக்கி தவமிருந்தார் யோகீஸ்வர முனிவர். அவருக்கு காட்சியளித்த தேவி, 'என்னை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுவாய்' எனச் சொல்லி மறைந்தாள்.
தேவி காட்சியளித்த கோலத்திலேயே சிலை வடித்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர். பிற்காலத்தில் காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை கட்டப்பட்டதால் 'பழஞ்சிறை' எனப் பெயர் வந்தது. இங்கு அருள்புரியும் அம்பிகை பழஞ்சிறை தேவி எனப் பெயர் பெற்றாள்.
நினைத்தது நிறைவேற தேவிக்கு செவ்வரளி மாலை சாத்தியும், வெடி வழிபாடும் செய்கின்றனர். யோகீஸ்வர முனிவரின் சிலை அம்மனின் முன்பு உள்ளது. இவரை வழிபட்டு திருநீறு பூசினால் குழந்தைகளுக்கு ஏற்படும் 'பாலாரிஷ்ட தோஷம்' விலகும்.
மாசி மிருகசீரிடத்தன்று இங்கு திருவிழா தொடங்கும். 41 நாள் விரதமிருந்த பக்தர்கள் அப்போது 'தோற்றப்பாட்டு' என்னும் பாடலை இசையுடன் பாடுவர். தேவி அவதரித்த வைபவம், அருள்புரியும்
விதம் குறித்து இதில் வர்ணிப்பர். இதைக் கேட்டால் கிரக தோஷம், முன்வினைப்பாவம், தடைகள் விலகும்.
மாசித்திருவிழாவின் ஆறாம் நாளன்று நடக்கும் அத்தாழ பூஜையின் போது பெண் குழந்தைகளுக்கு அம்மன் வேடமிட்டு பூஜை செய்வர். இந்நாளில் நல்ல மணவாழ்க்கை, சுமங்கலி பாக்கியம் பெற பெண்கள் மாங்கல்ய பூஜை நடத்துவர். அன்று நள்ளிரவில் நடக்கும் 'ஸ்ரீபூத பலி' என்ற பூஜையில் பூதகணங்களுக்கு பலியிடும் நிகழ்ச்சி நடக்கும்.
தேவியின் சிலம்பு, திரிசூலம், வாள், பட்டு வஸ்திரத்தை அணிந்தபடி பூஜாரி இதில் பங்கேற்பார்.
நவக்கிரகம், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சஸ், மாடன், தம்பிரான் சன்னதிகள் இங்குள்ளன.
17 யானைகள், ஆறு சிங்க சிலைகள் கருவறையை சுமக்கின்றன. கருவறையின் மீது மும்மூர்த்திகள், மூன்று தேவியர், கங்கையுடன் கூடிய சிவன் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வெளியே உள்ள சர்ப்பக்காவு பகுதியில் ஆறடி உயர நாகராஜர் சன்னதி உள்ளது. இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கண், தோல் நோய் தீரும். ராகு, கேது தோஷம் விலகும்.
எப்படி செல்வது: கிழக்குக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவளம் ரோட்டில் 5 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, மாசித்திருவிழா.
நேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94474 00300, 0471 - 246 1037, 245 5204
அருகிலுள்ள கோயில்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி, 5 கி.மீ., (நலமுடன் வாழ...)
நேரம்: அதிகாலை 4:15 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0471 - 245 0233