
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ளது புரா மகாதேவ் கோயில். இதை பரசுராமேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கிறார்கள். இவரை தரிசித்தால் பாவம் போகும். மனபலம் அதிகரிக்கும்.
முற்காலத்தில் இப்பகுதி கஜரிவனம் என அழைக்கப்பட்டது. இங்கு ஜமதக்னி முனிவர் தன் மனைவி ரேணுகா, ஐந்து மகன்களுடன் வாழ்ந்தார். மேலும் முனிவரிடம் சுசீலா என்ற தெய்வீக பசுவும் இருந்தது. இதன் மீது ஆசை கொண்டார் இப்பகுதி மன்னர் சகஸ்தரஜுனன். ஒருநாள் இப்பசுவை திருடினார் மன்னர். இதனால் இருவர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த தகராறில் முனிவரின் மனைவி ரேணுகாவை கடத்திச் சென்று, அவளிடம் தவறாக நடந்தார் மன்னர்.
கடவுள் அருளால் அவரிடம் இருந்து தப்பினாள் ரேணுகா. ஆனால் முனிவரோ அவளது கற்பின் மீது சந்தேகம் கொண்டார். ஒரு கட்டத்தில் தன் மகன்களிடம் தாயை வெட்டச் சொன்னார். நான்கு மகன்கள் மறுக்கவே, ஐந்தாவது மகன் பரசுராமர் அதை நிறைவேற்றினார். பின் தாயின் மரணத்திற்கு காரணமான சகஸ்திரர்ஜுனனையும் கொன்றார். தான் செய்த பாவத்தில் இருந்து விடுபட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பரசுராமர். பின்னாளில் சிவலிங்கத்தின் மீது மண் மூடி மறைந்தது.
ஒருநாள் ராணி லண்டவ்ரா தன் பட்டத்து யானை மீது பரிவாரங்களுடன் நகர்வலம் வந்தாள். ஓரிடத்தில் யானை எவ்வளவு முயற்சித்தும் நகரவில்லை. பண்டிதர்களுடன் ஆலோசனை செய்து அந்த இடத்தை தோண்டவே, பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம் கிடைத்தது. அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து கோயிலையும் கட்டினார். இதுவே இங்குள்ள கோயிலாகும்.
முன்னால் நான்கு பிரம்மாண்ட துாண்களை தாங்கும் முன் மண்டபம். அதன் வழியாக சில படிகள் ஏறி முதல் மாடிக்கு சென்றால் சன்னதியை அடையலாம். நுழையும் இடத்திற்கு மேலே சிறு கோபுரத்தை பார்க்கலாம். கருவறைக்கு மேலே மற்றொரு கோபுரம் உள்ளது. இதன் புதுமையான கட்டடக் கலையை ரசித்தபடியே கருவறையை அடையலாம். அங்கு இரண்டடி உயர பளிங்கு கல் சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.
பக்தர்கள் ஹரித் வாரிலிருந்து கங்கை நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். வெளியே துர்கா, கணேஷ் சன்னதிகள் உள்ளன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை கோயிலுக்கு செல்ல ஏற்ற காலமாகும்.
எப்படி செல்வது
* மீரட்டில் இருந்து 30 கி.மீ.,
* டில்லியில் இருந்து 75 கி.மீ.,
விசேஷ நாள்: அதிகாலை 4:00 - இரவு 9:00 மணி
நேரம்: மகாசிவராத்திரி, சிரவண மாதம்.
தொடர்புக்கு: 0522 - 406 1369
அருகிலுள்ள கோயில் : மீரட் பாபா ஆகார்க்நாத் 30 கி.மீ., (குருவருள் கிடைக்க...)
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மதியம் 3:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 74578 88569

